இங்கு விபாகரன் அவளை தொலைத்ததிலிருந்தே தேடிக் கொண்டிருக்க, சாத்விக்கிற்கு முதல் இரண்டு மாதம் வரை அவள் தொலைந்து போன விஷயமே தெரியாது, விபாகரன் வந்து யாதவியை பற்றி விசாரித்தது, அவள் வீட்டிற்கு திரும்ப செல்லவில்லை என்ற செய்தி, அவள் திரும்ப கிடைத்திருப்பாளா? என்ற அக்கறை எதுவுமில்லாமல் வசந்தன் மகனிடம் இத்தனை விஷயத்தையும் மறைத்திருந்தார்.
ஒரு படப்பிடிப்பின்போது அங்கு எடுபிடியாக வேலை செய்த பன்னீரை பார்த்த சாத்விக், அவர் யாதவியின் தந்தை என்பதை தெரிந்துக் கொண்டு நாசூக்காக விசாரித்த போது தான் யாதவி இவனை தேடி வந்தவள், வீட்டுக்கு திரும்பச் செல்லவில்லை என்பதே தெரிய வந்தது.
அதைப்பற்றி பன்னீரிடம் தோன்றி துருவ முடியாமல் சாத்விக் தனக்கு தெரிந்த துப்பறியும் நிறுவனத்தின் மூலம் யாதவியை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். அவர்கள் யாதவியின் வீடு இருக்கும் பகுதியிலும், அவள் படித்த கல்லூரியிலும் விசாரித்த வரைக்கும் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட அது பிடிக்காமல் அவள் காதலனோடு ஓடிவிட்டதாகவே செய்திகள் கிடைத்தது.
ஒருவேளை ரத்னாவின் தோழி என்று மஞ்சுளாவின் வீடு இருந்த பக்கம் சென்று விசாரித்து இருந்தாலோ, இல்லை சாத்விக்கே நேரில் வந்து விசாரித்து இருந்தால் ஒருவேளை யாதவியின் தோழி சக்தியோ இல்லை ஜகதீஷோ அவனிடம் அவளுக்கு திருமணமான செய்தியை கூறியிருந்திருப்பர். ஆனால் விபாகரன் அவர்கள் திருமண செய்தியை சொல்லக் கூடாது என்று சொல்லியதால், சக்தியும் ஜகதீஷும் அதுப்பற்றி வாயை திறக்கவேயில்லை,
அதனாலேயே அவனுக்கு யாதவிக்கு திருமணமான செய்தி கிடைக்காமலேயே போனது. யாதவியை பேருந்தில் ஏற்றி விட்ட வேலையாளை விசாரிக்க, அவன் அவளை பாண்டிச்சேரி செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டு பேருந்து கிளம்பும் வரை இல்லாமல் முன்பே அவன் வந்துவிட்டது தெரிந்து சாத்விக் அவனிடம் கோபப்பட்டான்.
யாதவி அந்த பேருந்தில் பயணிக்கவில்லை என்பது தெரிந்ததுமே அவள் வேறு எங்கு சென்றிருப்பாள் என்று விசாரிக்க சாத்விக்கிற்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை,
சாத்விக்கும் யாதவியை தேடுகிறான் என்ற செய்தி விபாகரனுக்கு தெரிந்ததுமே அவனது கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் இழந்தவன், இருந்தாலும் தொடர்ந்து சாத்விக்கின் நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அதேபோல் பன்னீரை தன்னுடன் வைத்திருந்தால் யாதவி ஒருவேளை தந்தையை தேடி வர வாய்ப்பிருக்கிறது என்று சாத்விக் நம்பினான்.
இப்படி இருவரும் இந்த ஐந்து வருடமாக யாதவியை தேடிக் கொண்டிருக்க, அவள் எப்படி தேவியாக புவனாவின் வீட்டில் அடைக்கலமானாள் என்பது இருவருக்குமே புரியாத ஒன்று, அது யாதவிக்கு மட்டுமே தெரிந்த விஷயம், இப்போது அதைப்பற்றி தான் யாதவி புவனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
எப்படி சாத்விக், விபாகரன் இருவருக்கும் இது உறங்கா இரவாக அமைந்து பழைய விஷயங்களை அசைப்போட்டுக் கொண்டிருந்தனரோ, அதேபோல் தான் யாதவியும் பழைய விஷயங்களை நினைத்து தவித்துக் கொண்டிருக்க, புவனாவிற்கு அவளைப் பற்றி கொஞ்சம் தான் தெரியும், அதுவும் மதுரிமா அவளாக நினைத்ததை சொல்லி வைத்திருந்ததால் புவனாவிற்கு யாதவியிடம் நடந்ததை கேட்டு தெளிவு பெற வேண்டியிருந்தது. யாதவிக்குமே யாரிடமாவது நடந்ததை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் தோன்றியதால் இவ்வளவு நேரம் நடந்ததை சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது அவர்களிடம் எப்படி அவள் வந்து சேர்ந்தால் என்பதை சொல்ல ஆரம்பித்தாள்.
சாத்விக் வேலையாளோடு அவளை அனுப்பி வைத்த போது சாத்விக் தன்னை காதலிக்கவில்லை என்ற அதிர்ச்சியில் அவள் உறைந்து போயிருக்க, அடுத்து என்ன என்று புரியாத நிலையில் இருந்தவள், அவர் ஏற்றி விட்ட பேருந்தில் அமைதியாக அமர்ந்துக் கொள்ள,
"கையில் பணம் இருக்கா ம்மா.." என்று அவர் கேட்க, அவள் இருப்பதாக தலையை ஆட்டிக் கொண்டாள். அப்போதும் அவருக்கு சந்தேகமாக இருக்க கொஞ்சம் பணத்தை கையில் கொடுக்கவும் அதை வேண்டாமென்று மறுக்க கூட தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.
ஏற்கனவே அந்த பேருந்தில் மக்கள் அமர்ந்திருக்கவே அது சிறிது நேரத்தில் கிளம்பிவிடும் என்பதால், "பார்த்து பத்திரமா போயிட்டு வாம்மா.." என்றி சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். அதை கூட உணராமல் அவள் அமர்ந்திருக்க,
அப்போது தான் கூட்டமாக சில பேர் அந்த பேருந்தில் ஏறினர். அங்கங்கே காலியாக இருந்த இடங்களில் அவர்கள் அமர, பேருந்தே பேச்சும் சத்தமுமாக இருக்க, சில பேர் அழுதுக் கொண்டிருந்தனர். அதுவும் யாதவிக்கு இரண்டு இருக்கைக்கு முன் அமர்ந்திருந்த பெண்மணி ஏதேதோ புலம்பிக் கொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ, யாதவியின் கவனம் அந்த பெண்மணியிடம் திரும்பியது.
அதேபோல் இன்னும் சில பேரின் கவனமும் அந்த பெண்மணியிடமே செல்ல, அதில் ஒருவர் அந்த பெண்மணியின் அருகில் அமர்ந்திருந்த பெண்மணியை பார்த்து, "எதுக்கும்மா இவங்க இப்படி அழறாங்க.." என்றுக் கேட்க,
அந்த பெண்மணியும் வேதனையோடு, "என்னத்தம்மா சொல்றது, இவங்க பொண்ணு கொளுத்திக்கிட்டு செத்து போயிட்டாம்மா.." என்று கண்ணீர் விட்டப்படியே சொல்ல,
"அய்யய்யோ என்னாச்சும்மா.. ஏன் அப்படி பண்ணிக்கிட்டாங்க.." என்று அவர் கேட்க,
"ஆசை ஆசையா தம்பிக்கே கல்யாணம் செஞ்சுக் கொடுத்தாங்கம்மா.. ஆனா அந்த பாவி அவளை சந்தேகப்பட்டே சாவடிச்சான்.. அதான் அவளும் எத்தனை நாள் பொறுத்துப்பா, இப்படி செஞ்சுக்கிட்டா.." என்றார்.
"சொந்த தம்பியேவா இப்படி செஞ்சான்.." என்று இன்னொருவர் கேட்க,
"ஆமாம்மா.. பொண்ணு படிக்கிறப்போ ஒருத்தனை காதலிச்சிருக்கு, அது தெரியாம இவங்க தம்பிக் கூட கல்யாண ஏற்பாடு செய்ய, அதுவோ காதலனை தேடி ஓடிப் போயிடுச்சு, ஆனா அந்த படுபாவி வீட்டுக்கு பயந்துக்கிட்டு இவளை காதலிக்கவேயில்லைன்னு சொல்லியிருக்கான்.. அந்த ஏமாற்றத்தோட வீட்டுக்கு வந்தவளை அப்படியே விட்டா கூட பரவாயில்லை.. ஆனா தம்பிக்கிட்ட சமாதானம் பேசி ரெண்டுபெருக்கும் கல்யாணத்தை முடிச்சிருக்காங்க..
அவன் அக்காக்கிட்ட சம்மதம்னு தலையாட்டி அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டவன், பொண்ணோட தனிமையில் இருக்கப்போ ரொம்பவே சந்தேகப்பட்டு தேளா கொட்டியிருக்கான்.. அவளும் நம்ம மேல தப்பு தானேன்னு அமைதியா இருந்திருக்கா.. ஆனா எவ்வளவு நாள் அமைதியா இருப்பா.. அவனோட பேச்சு தாங்க முடியாம இப்படி செஞ்சுக்கிட்டா, அவ இவங்களுக்கு ஒரே பொண்ணு, எத்தனை ஆசையா வளர்த்தாங்க.. இப்படி தூக்கிக் கொடுக்கவா.." என்று அவர் புலம்ப ஆரம்பிக்க, யாதவிக்கு இங்கே அவள் உடல் பதறியது.