(Reading time: 28 - 55 minutes)

வசந்தன் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர் இல்லையா? அவரைப்பற்றி அவன் புகார் அளிக்கவும், அவருக்கு அங்கு உடனே தகவல் போனது. வசந்தனிடம் இவன் முன்பே பேசிய அந்த இன்ஸ்பெக்டர்,

"அவங்க பிரபலமானவங்க என்பதால், எத்தனையோ பேர் தினம் அவங்களை பார்க்க வருவாங்க, போவாங்க.. எல்லோரையும் பத்தி அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்னு அவசியமில்ல.. நீங்க சொன்ன இந்த பொண்ணை அவங்க பத்திரமா ஊருக்கு அனுப்பி தான் வச்சிருக்காங்க.. மத்தப்படி அந்த பொண்ணுக்கும் நடிகர் சாத்விக்கிற்கும் தனிப்பட்ட முறையில் ஏதாவது சம்பந்தம்னா அதுக்கு ஆதாரம் இருந்தா காட்டுங்க.. நான் ஆக்‌ஷன் எடுக்கிறேன்.." என்றார்.

வாழ்த்து அட்டையில் சாத்விக் எழுதிய கவிதையை தவிர அவர்களுக்குள்ளான பழக்கத்திற்கு வேறு என்ன சாட்சிகள் இருக்கிறது, என்னத்தான் யாதவியின் தோழிகளுக்கு இந்த விஷயங்கள் தெரிந்தாலும் வசந்தனின் அந்தஸ்திற்கு முன் இதெல்லாம் சரி வருமா? என்பது தெரியாமல், வேறெதும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அதே காவல் நிலையத்தில் வேலை செய்யும் இன்னொருவர், "பொண்ணை கண்டுப்பிடிக்கணும்னா பேசாம ப்ரஸ்க்கு போயிடுங்க, அவங்க உங்க பொண்ணைப் பற்றி நியூஸ் போட்டா, வசந்தனும் சாத்விக்கும் அதுக்கு கண்டிப்பா பதில் சொல்லித்தான் ஆகணும்.." என்று கூறினார்.

அதுகூட அவரின் ஆதாயத்திற்கு சொல்வது போல் தான் இருந்தது. பத்திரிக்கையாளர்களுக்கு செய்தி சேகரித்து தர அவர்களிடம் பணம் வாங்கியிருப்பாரோ என்று அவனுக்கு தோன்றியது. அவரை நம்பி அவன் யாதவியை பற்றி பத்திரிக்கையாளரிடம் கூறினால், அவர்களுக்கு சுடசுட செய்தி கிடைத்து பத்திரிக்கை விற்கலாம், ஆனால் அவன் யாதவி கிடைப்பாளா? அதனால் அமைதியாக அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

பின் யாதவியை தேடுவதற்காக ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை தொடர்புக் கொண்டான். ஆனால் வசந்தன் பெரிய இடம் என்பதால், அவர்களுக்கு தெரியாமல் யாதவியை பற்றி விசாரிக்க அதிக செலவாகும் என்றார்கள். இப்போதைக்கு அவன் கையில் இருந்த  பணம் கல்யாண செலவு, ரத்னாவின் மருத்துவ செலவு மற்றும் இறுதி சடங்கிற்கான செலவு என்று செலவாகி,  அவன் கையில் இருப்பு என்று சொல்லிக் கொள்ளும்படி இல்லை, ஆனாலும் பணம் ஏற்பாடு செய்து தருவதாகவும், முடிந்த அளவிற்கு யாதவியை தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென்றும் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தான்.

யாதவியை பற்றி தெரிந்துக் கொள்ள அடிக்கடி சென்னை செல்ல வேண்டியிருக்கும், பாண்டிச்சேரியிலிருந்து சென்னை தூரமுமில்லை என்றாலும், திருமணமான ஒரே நாளில் யாதவி காணாமல் போனது, ரத்னா இறந்தது என்பதை பற்றியெல்லாம் அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் அரசல் புரசலாக பேசுவது மட்டுமில்லாமல், அவர்களிடம் ஜாடை மாடையாக அதுகுறித்துக் கேட்பது மஞ்சுளாவிற்கும் அர்ச்சனாவிற்கும் சங்கடத்தைக் கொடுத்தது. இதில் பன்னீர் வேறு, “என்னோட பொண்ணு உங்களால் தான் ஓடிப் போயிட்டா, உங்களால தான் என்னோட பொண்டாட்டி செத்து போயிட்டா.. நான் இருக்கும் போது அவளுக்கு எப்படி இறுதி கரியம் செய்வீங்க..” என்பது போல் வீட்டின் முன் வந்து சண்டை பிடித்து அவர்களை அசிங்கப்படுத்துவார். அதனால் அவர்கள் சென்னைக்கே சென்றுவிடலாம் என்று முடிவெடுத்து அங்கே சென்றுவிட்டனர்.

ஒருபக்கம் அங்கே தனக்கென்று ஒரு வேலையை தேடிக் கொண்டு, இன்னொருபக்கம் யாதவியை தேடும் முயற்சியிலும் விபாகரன் இறங்கியிருந்தான். அந்த நேரம் தான் அவர்கள் போட்டிருந்த சொத்து வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து தன் தாத்தாவின் சொத்து விபாகரனுக்கு கிடைத்தது.

முன்பே அவனுக்கு சொத்து சேர வேண்டுமென்று அவனுக்கு ஆதரவாக இருந்த சிலபேர், இப்போது சுதர்ஷன் க்ருப் ஆஃப் கம்பெனி பொறுப்பையும் அவனே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினர். இப்போது இருக்கும் நிர்வாகம் சரியான முறையில் நடைபெறாததால் அவர்கள் சிறிது நாளாகவே அதிருப்தியில் இருக்க, இப்போது சுதர்ஷனின் நேரடி வாரிசாக அவரது பேரனே பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பினர். அதற்காக அவர்களது பங்கையும் விபாகரனுக்கே விற்க தயாராயிருந்தனர்.

ஆனால் இதில் அவனுக்கு துளி கூட விருப்பமில்லை, முன்பே இது அவனுக்கு கிடைத்திருந்தால் கூட யாதவி அவனை விட்டு சென்றிருக்க மாட்டாள் இல்லையா? என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை, பின் அப்படி யோசித்து பார்ப்பதே தவறு என்று நினைத்தான்.

யாதவிக்கு அந்த வயதிற்குரிய பக்குவம் இல்லை, எது சரி எது தவறு என்பதை அவள் ஆராய்ந்து பார்க்கும் வயதில் அவள் இல்லை, அழகு, அந்தஸ்து இப்படி மாயத் தோற்றங்களை அவள் உண்மையென நினைத்து அதன்பின்னால் செல்ல விரும்பியிருக்கிறாள். ஆனால் கண்டிப்பாக அன்பு, காதல் தான் ஓர் உறவுக்கு அவசியமானதும், நிலையானதும் என்பதை அவள் புரிந்துக் கொள்ளும் தருணம் வரும், அதுவரை அவன் யாதவிக்கு ஏதும் நேர்ந்து விடக் கூடாது என்று இறைவனிடம் மனமார வேண்டிக் கொண்டான்.

அவன் இந்த நிர்வாக பொறுப்பெல்லாம் வேண்டாமென்று மறுக்க, "உன்னோட தாத்தாக்கு பிறகு உன்னோட அப்பா தான் இந்த நிர்வாகத்தை எடுத்து நடத்த வேண்டியது.. ஆனா என்னை கல்யாணம் செய்துக்கிட்டதால அவருக்கு அந்த பதவி கிடைக்கல.. இப்போ உனக்கு அது கிடைக்கிறப்போ நீயே அதை வேண்டாம்னு ஏன் சொல்லணும்.. உங்க தாத்தாவுமே சாகும் போது அதை தான் எதிர்பார்த்தாரு.. அதனால நீ அதை ஏத்துக்கோ.." என்று மஞ்சுளா சொல்லவும், அவனும் அதற்கு ஒத்துக் கொண்டான்.

பின் அவர்களின் பங்குகளையும் சேர்த்து வாங்கியவன், அதை தன் அன்னை, தங்கை, தங்கை கணவன் என அனைவருக்கும் சரிசமமாக மாற்றியவன், நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொண்டான். பின் அர்ச்சனாவின் கணவன் விஜய், அவன் சகோதரன் அஜய் இவர்ககையும் பொறுப்பில் சேர்த்துக் கொண்டு தீவிரமாக உழைத்தான். யாதவியின் நினைவுகளிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள அவன் அதிகம் உழைக்க வேண்டியிருந்தது.

ஆனாலும் அவளை மறப்பது என்பதும் அவனுக்கு இயலாத காரியம், ஒருபக்கம் தொழிலை கவனித்துக் கொண்டாலும், இன்னொரு பக்கம் அவளை தேடிக் கொண்டிருக்கும் முயற்சியை அவளை நேரில் பார்க்கும் வரை அவன் கைவிடவேயில்லை,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.