(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - காணாய் கண்ணே - 23 - தேவி

Kaanaai kanne

ப்ரித்வியிடம் சற்று மெத்தனமாகக் காட்டிக் கொண்டாலும், கிருத்திகா கவனமாகவே இருந்தாள். லேக்கில் நன்றாக பொழுதைப் போக்கி விட்டு கடைசியாக அங்கிருந்த மகாதேவர் கோவிலுக்குச் சென்றனர். சற்றுச் சீக்கிரமாகவே அன்றைய வேலைகள் முடிந்து விட்டதால், கொஞ்ச நேரம் அவரவர் விருப்பம் போல் செலவழிக்க அனுமதிக்கப் பட்டு இருந்தனர்.

சிலர் அங்கே ஷாப்பிங் செய்ய விரும்ப , இன்னும் சிலர் ஓய்வு எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களைத் தன் உதவியாளர்களுடன் அனுப்பி வைத்தான்.

மீதம் இருந்த சிலரை அங்கிருந்த மகாதேவர் கோவிலுக்குச் செல்லலாமா என்று ப்ரித்வி கேட்கவும், சம்மதித்தனர். அதில் கிருத்திகா, ராகவி இருவரும் இருந்தனர்.

கோவிலுக்குச் செல்லும் வழியில், ராகவியும் கிருத்திகாவும் பேசிக் கொண்டு வந்தனர்.

“ஹேய்.. கிருக்க்ஸ்.. இப்போ எதுக்கு நாம கோவிலுக்குப் போறோம்?” என்றாள் ராகவி.

“அடியே . ஒழுங்கா பேரச் சொல்லு. “ என்றாள் கிருத்திகா.

“ஆமா. நீ செய்யற வேலைக்கு கிறுக்குன்னு சொல்லனும். ஏதோ பிரெண்டா போயிட்ட பாவத்துக்குத் தான் கொஞ்சம் பாலிஷா கூப்பிடறேன்”

“கொன்னுடுவேன். அப்புறம் நானும் உன்னை ராக்கெட் ரங்கம்மான்னு தான் கூப்பிடுவேன்.”

“கூப்பிட்டுக்கோ. காசா பணமா. என்ன நாம பேசறதைக் கேட்கிறவங்க தான் எங்கியாவது முட்டிக்குவாங்க. வாட் வி டூ யா? நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு”

“என்னக் கேட்ட?

“ஆமா. ராஜகுமாரன் எதுக்கு கோவில் பக்கம் நம்மளத் தள்ளிட்டுப் போறார்” என, அதைக் கேட்டு அருகில் வந்த ப்ரித்வி,

“அம்மா, தாய்க் குலங்களே. டூர் மேனேஜர்ன்னு கெத்தா சுத்திகிட்டு இருக்கேன். உங்கப் பேச்சை யாராவது கேட்டாங்கன்னா, டைரக்ட்டா என்கௌன்ட்டர் தான் போலவே” என்றுக் கூறினான்.

அவன் குரல் கேட்டதில் சற்று அதிர்ந்தாலும், அசடு வழிந்தபடி ராகவி,

“டோன்ட் வொர்ரி சார், நாங்க உங்களைக் காப்பத்திருவோம்.” என்றாள்.

“யாரு? நீங்க? இப்போ நீங்க பேசினதிலேயே தெரிஞ்சுது.” என்றவன்,

“ஆர்கிடெக்ட் எனபது வெறும் கட்டிடக் கலை மட்டுமில்லை. அந்தக் கட்டிடம் எதை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது என்பதும் சேர்ந்தது. அந்த வகையில் ராஜபுத்ரர்களின் கட்டிடக் கலை என்பது அவர்களின் கலாச்சாரம் அடிப்படையாகக் கொண்டது. கால மாற்றங்களுக்குத் தகுந்த மாதிரி நிறைய விஷயங்கள் மறைஞ்சு போயிடுது. ஆனால் ஒரு சில விஷயங்கள் தனிதனியா பின் தொடர முடியாட்டாலும், பொது இடங்களில் பின்பற்றப் படுகிறது. “

ப்ரித்வி அவர்கள் இருவரிடம் மட்டும் பேசிக் கொண்டு இருந்தாலும், வந்து இருந்த மற்ற மாணவர்களும் அதைக் கவனிக்க ஆரம்பித்து இருந்தனர்.

“அந்தக் காலத்து இசைக் கருவிகள் நிறைய இப்போ இல்லை. கிடைச்ச ஒரு சிலதும் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பா இருக்கு. ஆனால் அங்கே சென்றுப் பார்ப்பது எல்லோராலும் முடியாது. அந்த மாதிரி இசைக் கருவிகள் சிலவற்றை இங்கே கோவில்களில் தினமும் இசைக்கிறார்கள். அதைத் தான் சென்றுப் பார்க்கப் போகிறோம். “

“இதற்கும் எங்களோட கட்டிடக் கலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு பாஸ்?”

“கட்டிடம் என்பது வசதியை மட்டும் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. உணர்வுகளாலும் கட்டப் பட்டிருக்கணும். நீங்க வருங்காலத்தில் ஒரு ராஜஸ்தானிக்குக் கட்டிடம் அமைக்க வாய்ப்புப் பெற்றால், அப்போ இந்த மாதிரி காட்சிகளை எல்லாம் ஓவியமாகவோ, சிற்பமாகவோ காட்டலாம். அதற்குத்தான் இப்போ நாம அந்தக் கோவிலுக்குப் போறோம்”

“ஓஹ” என்றனர்.

படிகளில் ஏறி அந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இவர்கள் கோவில் உள்ளே செல்லவும் , கோவில் பூஜைகள் ஆரம்பமாகின. ஒவ்வொரு முறை ஆரத்திக் காண்பிக்கும் போதும் வெவ்வேறு விதமான வாத்தியங்கள் வாசித்தார்கள். அந்த இசைக்கு ஏற்ப, பண்டிதர்கள் ஆரத்தி காண்பித்தனர். பார்க்க அழகாகவும், கேட்க இனிமையாகவும் இருந்தது.

கடைசியாக நாகபாணி என்ற கருவியை இசைக்க, அதன் ஒலி அந்த மலை முழுதும் எதிரொலித்தது. சங்கின் ஒலியை ஒத்து இருந்த அந்த சத்தம் , அங்கிருந்த அத்தனை பேரையும் சிலிர்க்க வைத்தது.

அந்த ஒலியோடு கோவில் மூடப் பட, எல்லோரும் இறங்க ஆரம்பித்தனர். சற்றுத் தூரம் வரை யாரிடமும் எந்தப் பேச்சும் இல்லை. முதல் நாள் போலவே , வியாபாரிகள் கடைகளை மூட ஆரம்பித்து இருந்தனர். அதிலும் எந்த சத்தமும் இல்லாமல், மிகவும் அமைதியாக செய்து கொண்டு இருந்தனர்.

கோவில் விட்டுச் சற்றுத் தூரம் சென்றப் பின், ராகவி,

“ஏன் சார், எப்படி இவ்ளோ அமைதியா வேலைகள் செய்யறாங்க?” என்றுக் கேட்டாள்.

“இது மகாதேவர் உறங்கும் நேரம் என்பது இந்த மக்களின் நம்பிக்கை. அதனால் பொது இடங்களில் இரைச்சல் இல்லாமல், அவரவர் வீட்டிற்க்குச் சென்று விடுவார்கள்.” என்றான்.

எல்லோரும் இதைப் பற்றி மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு வர, கிருத்திகா மட்டுமே ஏதோ யோசனையோடு வந்தாள். ராகவி அவளைக் கூப்பிட, கூப்பிட அதைக் கவனிக்கவே இல்லை. அவள் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.