(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 32 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

விபாகரனும் புவனாவும் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த யாதவி, இவளுக்கு தெரிய வேண்டாமென்று விபாகரன் சொன்னதை கேட்டதும், சத்தமில்லாமல் குளியலறைக்குச் சென்று குளித்து முடித்து வந்தவள், நேராக சமையலறைக்குச் சென்று, காலை உணவு செய்வதில் கவனம் செலுத்த ஆரம்பிக்க, புவனாவும் அவளுக்கு உதவ சென்றார்.

யாதவி சமையலை சாப்பிட்டுவிட்டு தான் செல்ல வேண்டுமென்று புவனா சொன்னது மட்டுமில்லாமல், அவனுக்கே அந்த ஆசை இருந்ததால், அவன் மனைவியாக அவன் வீட்டில் அவள் உலா வருவது ஏதோ மனதிற்கு நிறைவாக உணரவே நாளிதழில் மூழ்கியப்படி விபாகரன் அங்கேயே அமர்ந்திருந்தான்.

அப்போது தான் எழுந்து வந்த மஞ்சுளாவிற்கு மகன் இவ்வளவு நேரம் வீட்டில் இருப்பதே அதிசயமாக தோன்றியது. அதுவும் ஆற அமர நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறானே,

எப்போது சுதர்ஷன் க்ரூப் ஆஃப் கம்பெனியை பொறுப்பேற்றுக் கொண்டானோ, அன்றிலிருந்து அவன் வீட்டில் இருப்பதே குறைந்துவிட்டது. இதோ இப்போது கூட சென்னையில் கொஞ்ச நாள் இருக்கப் போவதாக சொல்லி வந்திருந்தாலும் காலையிலேயே கிளம்பிவிடுவான்.

உடல்நலத்தை கூட பொருட்படுத்தாமல் மகனுக்கு வேலா வேலைக்கு சமைத்து கொடுத்து இந்த கொஞ்ச நாட்களாவது நன்றாக அவனை கவனித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்து தான் அவரும் சென்னை வந்தார்.

ஆனால், "அம்மா எனக்காக உங்களை கஷ்டப்படுத்திக்காதீங்க ம்மா.. நான் ஆஃபிஸ்லயே பார்த்துப்பேன்.." என்று சொல்லி, எப்போது வீட்டுக்கு வருவான், எப்போது செல்வான் என்று தெரியாத நிலையில் இருந்தவன், இன்று அமர்ந்து நாளிதழை படித்துக் கொண்டிருந்தால் அது அதிசயம் தானே,

அன்னையை பார்த்ததும், "குட் மார்னிங் ம்மா.." என்று அவன் காலை வணக்கம் வைக்க,

"என்னப்பா இன்னைக்கு வேலை எதுவும் இல்லையா? பேப்பர் படிச்சிட்டு உட்கார்ந்திருக்க.." என்று மஞ்சுளா அவனிடம் கேட்டார்.

"போகணும் ம்மா.. இன்னைக்கு மார்னிங் ப்ரேக் பாஸ்ட் வீட்லயே சாப்பிட்டு போகலாம்னு நினைச்சேன் ம்மா.. அதான் பேப்பர் படிச்சிட்டு இருந்தேன்.. இதோ போய் குளிச்சிட்டு ரெடியாகணும்.." என்ற அவன் பதிலில் மஞ்சுளா சமையலறையை எட்டிப் பார்த்தார்.

யாதவி தான் ஏதோ தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மகன் அவளை அத்தனை பேர் முன்பும் அவளுடனான் உறவு சொல்லி அழைத்து வர, அவளும் அவனுடன் வந்திருந்தாலும், இங்கு அவள் பொருந்தி போவாளா? என்று சந்தேகத்தோடு தான் இருந்தார். இப்போது அவள் வேலை செய்வதை அவர் ஆர்வத்தோடு பார்க்க,

"காஃபி குடிக்கிறீங்களா ம்மா.. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் குடிச்சேன்..  யாதவி தான் போட்டு கொடுத்தா.." என்று அவன் கேட்டான்.

அதில் இன்னும் வியப்போடு அவனை கேள்வியாக பார்த்தவர், "யாதவியே உனக்கு காஃபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாளா?" என்றுக் கேட்டார்.

"அது புவனா ம்மா சொல்லித்தான் செஞ்சா.." என்று அவன் சொல்லவும், அவர் பார்த்த பார்வையில்,

"அதானே அவளாவது செய்றதாவது.." என்ற அர்த்தம் இருந்தது.

"நேத்து இப்படியெல்லாம் நடக்கும்னு அவ எதிர்பார்த்திருக்க மாட்டா.. அப்படியிருக்க திடீர்னு இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா, அவளுக்கும் கொஞ்சம் தயக்கம் இருக்குமில்ல.. அதை நாம தானே  போக்கணும்.. முன்ன நடந்ததையே இப்போதும் பேசிக்கிட்டு இருந்தா, அவளுக்கு அது கஷ்டமா தானே இருக்கும், அவ எப்போம்மா இயல்பா மாறுவா? அதனால அவ இயல்பா இருக்க, நாமளும் உதவி செய்யணும்.. புரிஞ்சுக்கோங்க ம்மா.." என்று அவன் எடுத்து சொல்லவும்,

"புரியுது விபு.. நான் பழைய விஷயத்தை பத்தி பேச மாட்டேன் ப்பா.." என்று அவரும் கூறினார். அந்த நேரம் யாதவி அவருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை எதிர்பார்க்காதவர், "புவனா கொடுத்து அனுப்பினாங்களா?" என்றுக் கேட்டார்.

அவரது கேள்வியில் முகம் வாடியவளாக, "இல்ல உங்க குரல் கேட்டுச்சு அதான் நானே கொண்டு வந்தேன்.." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே சென்றுவிட்டாள்.

உண்மையிலேயே அவரின் குரல் கேட்டு அவளே தான் மஞ்சுளாவிற்கு காஃபி தயார் செய்தாள். என்னவோ சிறிது நேரத்திற்கு முன் விபாகரன் பேசியதை கேட்டவளுக்கு, அவனது மனைவியாக மாறும் தகுதி தனக்கு இருக்கிறதா என்பது அவளுக்கு தெரியவில்லையென்றாலும், இந்த வீட்டு மருமகளாக மீண்டும் இங்கு வந்ததால், அதற்குரிய கடமைகளை செய்ய வேண்டுமென்று மனதில் முடிவு செய்துக் கொண்டாள்.

அவள் காஃபியை தயார் செய்து, "மஞ்சுளா அம்மா எழுந்துட்டாங்க போல.. நான் அவங்களுக்கு காஃபி கொண்டு போய் கொடுக்கிறேன்.." என்று அவள் புவனாவிடம் சொல்ல,

அவருமே இந்த மாற்றத்தை அவளிடம் எதிர்பார்க்கததால், அவளுக்கு திருஷ்டி கழித்து, "போய் கொடு.." என்று அனுப்பி வைத்தார். ஆனால் அதை புரிந்துக் கொள்ளாமல் மஞ்சுளா அப்படி கேட்டது வருத்தமாக இருந்தாலும், ஒரு நாளாவது நல்ல மருமகளாக அவர்கள் வீட்டில் வாழ்ந்திருப்பாளா? அப்படியிருக்க அவர்கள் தன்னை உடனே புரிந்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பது முட்டாள்தனம் என்று நினைத்து அமைதியாகினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.