(Reading time: 12 - 23 minutes)

விபாகரனுக்குமே அவளின் வாடிய முகத்தை பார்த்து ஒருமாதிரி ஆகிவிட்டது. "இப்போ தானேம்மா சொன்னேன்.. அதுக்குள்ள அப்படி கேட்டுடீங்களே.." என்று அவன் மஞ்சுளாவிடம் கேட்க,

"ரத்னாவோட மகளா யாதவியை பத்தியே எனக்கு அவ்வளவா தெரியாது.. இதில் என்னோட மருமகளா அவளைப்பத்தி சுத்தமா தெரியாது.. திடீர்னு அவ காஃபி எடுத்து வந்ததும் எனக்கு ஒன்னும் புரியல.. புவனா தான் கொடுத்து அனுப்பியிருப்பாங்களோன்னு நினைச்சு தான் சட்டுன்னு அப்படி கேட்டுட்டேன்.. இனி கவனமா இருக்கேன் விபு.." என்றார்.

"யாதவிக்கு இங்க பழக எப்படி நாம ஒத்துழைப்பு கொடுக்கணுமோ.. அதேபோல் நீங்க அவளை ஏத்துக்கவும் கொஞ்சம் நேரம் எடுக்கும்னு புரியுது.. நீங்க எப்போதும் யார் மனசையும் காயப்படுத்தி பார்க்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் ம்மா.. அதுபோல யாதவிக்கிட்டேயும் நடந்துக்கோங்கன்னு தான் சொல்றேன்.. என்னடா இவன் யாதவிக்காகவே நம்மக்கிட்ட பேசறானேன்னு நினைச்சுகாதீங்க.. நான் தான்ம்மா அவளை இங்க அழைச்சிட்டு வந்திருக்கேன்.. அவளுக்கு இங்க எந்த சங்கடம் வந்தாலும் நான் தான் பொறுப்பு.. அதுக்கு தான்ம்மா நான் சொல்றேன்.." என்று அவன் சொல்ல,

"எனக்கு புரியுது விபு.. என்னோட பையனை யாரும் தப்பு சொல்றது போல நடந்துக்க மாட்டேன்.." என்று அவரும் கூறினார்.

பின் அவன் தயாராகி வருவதாக சொல்லிச் செல்ல, மஞ்சுளாவும் சமையலறைக்குச் சென்று பார்த்தார். யாதவி அடுப்பில் ஏதோ வேலையாக இருக்க, “என்ன டிஃபன் செஞ்சுருக்க யாதவி..” என்று கேட்டு அவளிடம் பேச்சை ஆரம்பித்தார்.

“இட்லி, பொங்கல், சாம்பார், வடை, சட்னி அப்புறம் கொஞ்சம் கேசரி செஞ்சுருக்கேன்..” என்று அவள் பதில் கூற,

“முதன்முதலா உங்க வீட்ல இவளே சமையல் செய்றா, அதான் முதலில் ஸ்வீட் செய்னு சொன்னேன்.. தேவியும் கேசரி செய்றேன்னு சொல்லி செஞ்சா..” என்று புவனா விளக்கம் கூறினார்.

“வேற ஏதாச்சும் செய்யணுமா?” என்று யாதவி கேட்க,

“இல்ல இதுவே அதிகம் தான், பொதுவா விபு நைட் மட்டும் தான் வீட்ல வந்து சாப்பிடுவான்.. அதுவும் வருவதே லேட், அதனால் ஒரு சப்பாதி, இல்ல ஒரு தோசைன்னு சாப்பிட்டு போதும்னு சொல்லி எழுந்துடுவான்.. இன்னைக்கு தான் காலை சாப்பாடு வீட்ல சாப்பிட்றான்.. இதுவே தொடர்ந்தா நான் ரொம்ப சந்தொஷப்படுவேன்.. இன்னைக்கு டிஃபன் எல்லாமே விபுக்கு பிடிச்சது தான், கேசரில முந்திரி கொஞ்சம் அதிகம் போடு, அப்புறம் பொங்கலில் கூட தாளிக்கும் போது முந்திரி வறுத்து போட்டா, விபுக்கு பிடிக்கும்..” என்று மஞ்சுளா சொல்ல, யாதவியும் தலையாட்டிக் கொண்டாள்.

சமையல் தயார் ஆனதும் யாதவி அதை உணவு மேஜை மீது எடுத்து வந்து வைக்கவும், விபாகரன் தயார் ஆகி வரவும் சரியாக இருந்தது. “அம்மா வந்து நிங்களும் உட்காருங்க சாப்பிடலாம்..” என்று புவனாவை அழைத்தவன், “அம்மா நீங்களும் உட்காருங்க ம்மா..” என்று மஞ்சுளாவையும் அழைத்தான்.

பிறகு, “நீயும் உட்கார்ந்து சாப்பிடு யாதவி.. அவங்கவங்களே எடுத்து போட்டு சாப்பிட்டுக்கலாம்..” என்று அவளிடமும் சொல்ல,

“இருக்கட்டும் பரவாயில்ல நான் பரிமாறிட்டு சாப்பிட்டுக்கிறேன்.. நீங்கல்லாம் சாப்பிடுங்க.." என்று தயக்கமில்லாமல் ஒரு நீண்ட வாக்கியத்தை அவனிடம் பேசினாள்.

பின் மூவருக்கும் அவள் பரிமாற, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, "ஆஹா அப்படி என்ன ஸ்பெஷல் இன்னைக்கு, வீட்டு வாசல வரை மணக்குதே.." என்று சொல்லியப்படியே விஜய் வந்தான்.

"வா விஜய்.. நீயும் உட்கார்ந்து சாப்பிடு.." என்று விபாகரன் அவனையும் அழைக்க,

"பின்ன சாப்பிடாமலா, அம்மா சாப்பிட்டு போன்னு சொன்னதுக்கு இங்க சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேனே.." என்றவன்,

"ஆமாம் அர்ச்சனா சாப்பிட வரலையா?" என்று கேட்டதோடு சரி, அதற்கு மற்றவர்கள் சொல்லும் பதிலை கூட கேட்காமல் அவன் சாப்பிட ஆயத்தமாக, யாதவி அவனுக்கு பரிமாறினாள்.

"அடடே புது பொண்ணு சமையலா? சூப்பர்.." என்று சொல்லியப்படி பொங்கலை எடுத்து அவன் சுவைக்க, விபாகரன் அவனை ஒருமாதிரி பார்க்க, அதை பார்த்த விஜயும் தான் சொன்னதை ஞாபகப்படுத்தியவன்,

"புதுப் பொண்ணு இல்ல.. ஆனா இன்னைக்கு புதுசா சமையலெல்லாம் செஞ்சு அசத்தியிருக்கே.. அதான் அப்படி சொன்னேன்.." என்றவன்,

"யாதவி சமையல் சூப்பர் ம்மா.." என்று பாராட்டியப்படியே ருசித்து சாப்பிட்டான்.

யாதவி அவ்வப்போது பரிமாறிக் கொண்டிருக்க, நால்வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், அப்போது தான் அறையிலிருந்து வெளியே வந்த அர்ச்சனா அதைப் பார்த்து எரிச்சலானாள். இதில் வந்ததும் தன்னை வந்து பார்க்காமல், சாப்பிட அமர்ந்த தன் கணவனையும் அவள்

முறைத்து பார்த்துக் கொண்டே வர,

அப்போது அவளை பார்த்த விஜய்க்கோ, மனைவியின் சகோதரனின் பார்வையே புரிந்து பேசக் கற்றுக் கொண்டவன், இன்னும் மனைவியின் பார்வையை புரிந்துக் கொள்ளாமல், "அர்ச்சனா.. யாதவி சமையல் சூப்பர்.. வா நீயும் வந்து சாப்பிடு.." என்று கூப்பிட,

விட்டால் தீயிலிட்டு பொசுக்குவதை போல் அவனை முறைத்தவள், "அதான் நீங்க சாப்பிட்றீங்கல்ல, என்னோட பங்கையும் சேர்த்து சாப்பிடுங்க.." என்று சொல்லிவிட்டு தள்ளி சென்று அமர்ந்தவளுக்கு, வந்த மறுநாளே யாதவி இப்படி வீட்டில் உரிமையாக சமையல் செய்வது, பரிமாறுவது என அவள் நடந்துக் கொள்வதை கண்டு கோபம் வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.