(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 11 - மது

Senthamizh thenmozhiyaal

நீலக்கடலின் மடியில் தான் பூமியின் முதல் உயிர் ஜனித்தது. ஓரணு உயிரனமாக ஜனித்த உயிர் தான் பரிணாம வளர்ச்சியில் ஆறறிவுடைய மனிதமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இவ்வுலகில் எத்தனை எத்தனையோ உயிரனங்கள். மனிதன் அறிந்தும் இன்னும் அறியாமலும் பல உயிரனங்கள் தங்களுக்கான இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்று உண்டு. அது என்ன தெரியுமா.

அன்பு!!

மீனில் இருந்து மானுடன் வரை அன்பு ஒன்றே அனைத்து உயிர்களையும் செலுத்தும் சக்தியாக இருக்கிறது.

“நாம துரத்திக் கொண்டே போனா அந்த ஜீவராசிகளுக்கு பயம் வரும். ஒன்னு நம்மைக் கண்டு ஓடும். இல்லை நம்மை தாக்கிடும். மனம் முழுக்க அன்பை நிறைத்துக் கொண்டு அமைதியா இருந்தா அது போல ஈர்ப்பு சக்தி எதுவும் இல்லை”

தான் எடுத்த அற்புதமான புகைப்படங்களை தனது குடும்பத்தினரிடம் காட்டிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

“போட் வசதியா இருக்கா பாப்பா” இளங்கோ அக்கறையுடன் விசாரித்தான்.

“நவீன டைவ் போட் அவ்வளவு விலை குடுத்து எனக்கு வாங்கி கொடுத்திருக்கீங்க. ரொம்ப வசதியா இருக்கு” என்று அண்ணனுக்கு நன்றி கூறினாள்.

ஆதி டைவ் போட் செலுத்த முறைப்படி பயிற்சி எடுத்து சான்றிதழ் வாங்கியிருந்தான். கூடவே டைவருக்கு எப்படி எல்லாம் உதவுவது, பாதுகாப்பு முறைகள், இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றான்.

தேர்ந்த இரண்டு டைவர்கள் துணையோடு தான் கடல் புறாவை முதன் முதலில் அலைகளின் மடியில் தவழ விட்டாள் தேன்மொழி.

பின் ஆதி படகை செலுத்த தேன்மொழி படகில் இருந்து தனது டைவிங் கியரோடும் கேமராவுடனும் கடலுக்குள் பாய்ந்து அந்த உலகின் அழகை எல்லாம் அள்ளிப் பருகியபடியே தனது கேமராவிலும் சிறை பிடித்தாள்.

அவள் விசித்திரமான உயிரனங்களை படம் பிடிக்கவில்லை. சாதாரண மீனைத் தான் படம் பிடித்திருந்தாள்.

ஆனால் அந்தச் சாதாரண மீனின் விசித்திரமான செயல்களை எல்லாம் ரசித்து படம் பிடித்திருந்தாள்.

இரு மீன்கள் கண்ணாமூச்சி ஆடுவது போல இருந்த புகைப்படங்களைக் கண்டு வானதி மலைத்துப் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.