(Reading time: 27 - 53 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 34 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

புவனா சொன்னது போல் யாதவி ஈஞ்சப்பாக்கம் சாய்பாபா கோவிலுக்கு தான் சென்றிருந்தாள். ஆனால் அங்கு தான் செல்ல வேண்டுமென்று நினைத்து அவள் வீட்டிலிருந்து கிளம்பவில்லை, வழக்கம் போல வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வரலாம் என்று நினைத்து கிளம்பியவளுக்கு மனம் பாரமாக இருந்ததால் அங்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றி, சட்டென்று ஒரு ஆட்டோ பிடித்து அங்கு சென்றுவிட்டாள்.

இதில் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது தான் அவள் செய்த தவறே புரிந்தது. இந்த வீட்டில் யாதவியை விட்டுவிட்டு செல்லும் போது கைச்செலவுக்கென புவனா கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு சென்றிருந்தார். இங்கு அவளுக்கும் பெரிதாக எந்த செலவும் இல்லாததால், பணத்தை தன் பெட்டியில் வைத்துவிட்டு கொஞ்சம் பணத்தை மட்டும் செலவுக்கென தன்னுடைய கைப்பையில் வைத்திருந்தாள்.

அருகில் இருக்கும் கோவிலுக்கும் கடைக்கும் என்பதால் நடந்தே சென்றுவிடுவதால், அவளுக்கு பணத்தின் தேவையும் அதிகம் இருக்காது. இப்போது ஈஞ்சப்பாக்கம் வந்ததால், ஆட்டோவிற்கு என பணம் கொடுத்துவிட்டு பார்த்தால், மீதி குறைவாகவே பணம் இருந்தது. திரும்ப போகும்போது பேருந்தில் சென்றுக் கொள்ளலாம் என நினைத்து கோவிலுக்குள் சென்றவள், தன் மன அமைதியை நாடி தியான மண்டபத்திலேயே சிறிது நேரமும், பின் கடற்கரையில் சிறிது நேரமும் அமர்ந்திருந்தாள்.

அர்ச்சனா இருக்கும் வீட்டிற்கு அவளுக்கு செல்ல பிடிக்கவேயில்லை, அர்ச்சனா இப்போது பேசியதே அதிகம், இதில் இன்னும் கூட மோசமாக பேசலாம், ஆனால் அதை தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தான் அவளுக்கு மனதில் சக்தியில்லை, அவள் தவறு செய்தால் தான், இல்லையென்று மறுக்கவில்லை, ஆனால் அதற்கு இப்படி மோசமாக பேச வேண்டுமா? செய்த தவறை திருத்திக் கொண்டு வாழலாம் என்றால் அது முடியாதா? இப்படிப்பட்ட பேச்சுக்களை வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டுமா?

செய்த தவறுக்காக வாழ்க்கையை தொலைத்து, இத்தனை காலம் தனியாக தானே இருந்தாள். பாசமாக வளர்த்த பெற்ற தாயையும் அந்த காரியத்தால் பறிகொடுத்து மனதில் குற்ற உணர்வில் தவிக்கிறாளே, இந்த தண்டனை போதாதா? இன்னும் எத்தனையை அனுபவிக்க காத்திருக்கிறதோ என்று மனம் வேதனையில் துடித்தது.

பேசாமல் புவனாம்மா வீட்டிற்கு சென்றுவிடலாம் என்றாலும், எத்தனை மகிழ்ச்சியோடு அவர் இங்கு விட்டு விட்டு சென்றார். இப்படி ஒரு மன சங்கடத்தோடு அங்கே சென்று அவர் மனதையும் வருத்தப்பட வைக்க வேண்டுமா? என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.