(Reading time: 10 - 20 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 18 - சித்ரா. வெ 

ப்போது நித்யா கல்லூரியின் இரண்டாவது வருடத்தின் பாதியில் இருந்தாள். முன்பு போல் தயக்கத்தில் மற்றவர்களிடம் ஒதுக்கம் காட்டுவது அவளிடத்தில் வெகுவாக குறைந்திருந்தது. அவள் கல்லூரியில் சேரும்போது ரமா மூன்றாம் வருடத்தில் முடிவில் இருந்ததால், இவள் இரண்டாவது வருடத்திற்கு வரும்போதே அவள் கல்லூரியை விட்டு சென்றிருந்தாள். அதனால் இவள் மட்டுமே கல்லூரிக்கு தனியாக பேருந்தில் சென்று வந்துக் கொண்டிருந்தாள்.

கல்லூரியில் இப்போது அதிக தோழிகள் கிடைத்திருந்தாலும், பேருந்து நிலையம் வரை மட்டும் தான் அனவரும் ஒன்றாக சேர்ந்து வருவார்கள். அதன்பின் அவள் வீடு இருக்குமிடத்திற்கு உடன் வர யாருமில்லாததால் அவள் மட்டும் தனியாக வரும் சூழலே அவளுக்கு அமைந்தது. ஆனால் முன்போல் அவளுக்கு பேருந்து பயணத்தின் போது எந்தவித பயமுமில்லாமல் வெகுசாதாரணமாகவே அந்த பயணத்தை அவள் ரசிக்க ஆரம்பித்தாள்.

இருந்தும் இப்போது தான் அவள் வெளி அனுபவங்களை ஓரளவுக்கு அறிந்துக் கொண்டாளே, அதனால், "நித்தி இனி காலேஜூக்கு போக வண்டி வாங்கி கொடுக்கட்டுமா? எதுக்கு இன்னும் பஸ்ல போகணும், வண்டில போனா உனக்கும் ஈஸியா இருக்குமில்ல," என்று கார்த்திக் கேட்டான்.

"பஸ்ல போகறதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல மாமா,"

"இல்ல தான், ஆனா பஸ்ஸை பிடிக்க அரக்க பரக்க கிளம்புற, அதுவும் காலை டைம்ல கூட்டமாகவும் இருக்கும், அதுக்கு தான் சொல்றேன். வண்டில போனா ஈஸி, ஒன்னு வாங்கிடுவோமா?"

"ஆனா எனக்கு வண்டி ஓட்ட தெரியாதே மாமா,"

"ஓட்டத் தெரியாதுன்னா என்ன? கத்துக்கலாம். உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமில்ல?"

"ம்ம் ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து சைக்கிள் ஓட்டியிருக்கேன். ஆனா அதுவுமே அப்புறம் டச் விட்டுப் போச்சு,"

"அதனால என்ன? ஓட்டத் தெரியும்னா திரும்ப பழகினா வந்துடும், சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சிருந்தா வண்டி கத்துக்கிறதும் ஈஸி. அதில்லாம கார் ட்ரைவிங்கும் நீ கத்துக்கணும், ஒரு எமெர்ஜென்ஸின்னா என்னையோ இல்லை ட்ரைவரையோ எதிர்பார்க்காம நீயா வண்டி ஓட்டிட்டு போக தெரிஞ்சிருக்கணும், இப்போ என்னோட பிஸி ஷெட்யூலெல்லாம் முடிஞ்சுது. அதனால உனக்கு வண்டி ஓட்ட கத்துக் கொடுக்கலாம்னு இருக்கேன். இந்த செமஸ்டர் லீவ் விடுவாங்கல்ல, அந்த டைம் காலை நேரத்தில் என்னோட வந்து வண்டி கத்துக்கிற சரியா?" என்றுக் கேட்க,

"சரி மாமா," என்று அவளும் அதற்கு ஒத்துக் கொண்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.