பூர்வி மனதை ஒரு நிலை படுத்த முயன்றாள்! முடியவில்லை! என்ன மாதிரியாக திட்டம் போட்டு முதுகில் குத்துகிறான். பூ, பூ என்று வழிந்தது என்ன, நீ தான் உயிர் என்று கொஞ்சியது என்ன? எல்லாமே பொய்யா?
பூர்விக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. சில நிமிடங்கள் அழுது கரைந்தாள்.
ஏன் அவளுடைய வாழ்க்கை இப்படி ஆக வேண்டும். திவேஷ் தவிர வேறு உலகமே இல்லை என்று வாழ்ந்துக் கொண்டிருந்தாளே. ஏன் அவன் அவளுக்கு துரோகம் செய்கிறான்? எதற்காக அவளையும் அவனுடைய சொந்த குழந்தைகளையும் நடு ரோட்டில் விட்டு விட நினைக்கிறான்?
நிற்காமல் வழிந்த கண்ணீர் காலி ஆகி தானாக நின்றுப் போக பூர்வி கண்ணை துடைத்துக் கொண்டாள். அவளை வேண்டாம் என்று ஏமாற்றி போக நினைப்பவனுக்காக அவள் ஏன் அழ வேண்டும்? அவளுக்கும் அவன் வேண்டாம். ஈஷானும், நிரவியும் அவளுக்குப் போதும்.
அவளுக்கு படிப்பு இருக்கிறது. ஒரு வேலை தேடிக் கொள்ள அவளால் முடியும். திவேஷ் உடைய பணம் அவளுக்கு தேவையே இல்லை.
திவேஷுடைய பணமா? இல்லையே அதில் பூர்வி உடைய பணமும் இருக்கிறது. அவளுடைய சேமிப்பு பணத்தையும் சேர்ந்து ஒன்றாக நிறுவனத்தை தொடங்கினார்கள். இப்போது கம்பெனியை விற்று வரும் பணத்தில் நியாயப் படி பார்த்தால் பாதி அவளுக்கு உரிமை ஆனது. அவளையும் குழந்தைகளையும் ஏமாற்றி, நட்டாற்றில் விட நினைப்பவனுக்கு அவள் ஏன் அதை விட்டுக் கொடுக்க வேண்டும்?
பூர்வி ஒரு முடிவிற்கு வந்தாள்.
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆
பூர்வி எல்லா பொருள்களையும் எடுத்த அதே இடத்தில் வைத்து தூங்கப் படுத்த போது விடி காலை ஆகி இருந்தது.
திவேஷின் துரோகம் இப்போதும் இமய மலையாக மனதை அழுத்தியது. எப்படி அவனால் இப்படி துரோகம் நினைக்க முடிந்தது? அந்த பிஞ்சு முகங்களை பார்த்துக் கூடவா அவனுக்கு மனம் இளகவில்லை. ஏதோ பணத்திற்காக அவர்களின் உயிரை பறிக்காமல் போனானே.
பூர்விக்கு திவேஷ் இருக்கும் அதே இடத்தில் படுத்து இருப்பது கூட நரகமாக இருந்தது. முள் மேலே படுத்து இருப்பது போல படுத்து இருந்தவள் எப்படியோ தூங்கிப் போனாள்.
☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆
“பூ, மணி பத்து ஆகுது”