தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 15 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
ஏன் இவ்ளோ பீல் பண்ற? சரிடி! நீயும் எதாச்சும் பிளான் பண்ணவேண்டியது தானே?
பாவம் தினேஷ். எங்க ஊருக்கு வரணும்னா ரெண்டு பஸ் மாறி வரணும். கஷ்டம் அவனுக்கு.
பரவாயில்லை ஒன் மன்த் தானே ஓடிடும் என்றாள்.
இப்பவே என்ன அக்கறை வீட்டுக்காரர் மேல என்று தோளில் செல்லமாக இடித்தாள் கண்மணி. அந்த வார்த்தையில் சிறுவெட்கம் பூத்தது ரம்யாவிற்கு, அதைப் பார்த்து சிரித்தவளாய், சரி நானும் அப்பப்ப போன் பண்றேன், நீயும் அப்பப்ப போன் பண்ணு என்று கண்ணடித்தாள். போன் பேச இருவரும் பெயரைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம் என்பதைத் தான் அப்படி அவள் சொல்கிறாள் என்பது புரிந்து ரம்யாவும் சிரித்தாள்.
விடுமுறையில் அடுத்த செமஸ்டர் புத்தகங்கள் பற்றித் தகவல் சேர்க்க பப்ளிக் லைப்ரரி செல்வாள். திடீரென லைப்ரரியில் தினேஷ் வந்து நின்றால் எப்படியிருக்கும் என்று கற்பனையில் யோசிப்பாள். மாடியில் துணி உலர்த்திக்கொண்டு இருக்கும் போது, வாசலில் கோலம் போடும் போது எங்காவது திடீரென்று தினேஷ் வந்து நின்றுவிட மாட்டானா என்றே ஏக்கம் வரும். சத்யாவிற்கும் விடுமுறை என்பதால் இருவரும் கோவில், நூலகம் என்று நேரத்தை செலவிட்டனர். தினேஷ் வீட்டிற்குத் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போது போன் செய்தாள் ரம்யா வீட்டில் சமாளிக்க முடியாது என்று அவனாக அவளுக்குப் போன் செய்வதையும் குறைத்திருந்தான். ரம்யாவிற்கு எப்போதுதான் கல்லூரி திறக்குமென்றிருந்தது. மாலை ஏழு மணி, ரகு, அம்மா, அனைவரும் டிவியில் எதோ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, போன் ஒலித்தது, “ரம்யா! உனக்காகத் தான் இருக்கும்! எந்திரிச்சி எடேன்!” போனை எடுத்ததும், “ரம்யா! நான் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து பேசுறேன் !உங்க ஊர் பஸ் ஸ்டாண்டில்! ஒரே ஒரு நிமிடம் உன் வீட்டை விட்டு வெளில வரமுடியுமா. அஞ்சு நிமிடத்தில் அங்கே இருப்பேன். ஒரு முறை உன் முகத்தைப் பார்த்தால் போதும். என்னால உன்னை பார்க்காமல் இருக்க முடியல!” டக்கென்று போனை வைத்துவிட்டான். யாரு சத்யா தானே? இந்நேரத்துக்கு மேல எங்கே போகப்போறீங்க ரெண்டு பேரும், நிச்சயமா நான் விட மாட்டேன். அம்மா சொல்லவும்.
அம்மா, சத்யா தான், அவ எங்கயும் கூப்பிடல, அவகிட்ட எனக்கு ஒரு புக் கேட்டிருந்தேன். அவ கூட டியூசன்ல படிச்ச ஒரு பொண்ணுகிட்ட அதை கொடுத்து விட்ருக்கா! நான் அடையாளத்துக்கு வாசலில் நின்னா, அந்த பொண்ணு அதை என்கிட்டே வந்து கொடுத்திருவான்னு சொன்னா!
சரி போ அஞ்சு நிமிஷம் நின்னு பாரு, அவ வரலேன்னா உள்ளே வந்திரு.
முகத்தைக் கழுவக் கூட நேரமில்ல, படபடவென்று வாசலில் போய் நின்றாள்.