(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

மற்றவர்களும் அவள் செய்கையில் அதிருப்தியாகி முகத்தைச் சுளித்தனர்.

இறுக்கமாகிக் கொண்டே போன அந்தச் சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, தரகர் கண்ணுசாமி, “எல்லோரும் சந்தோஷமா காஃபியும் பருகியாச்சு...இனி லௌகீக விஷயங்களைப் பேச ஆரம்பிச்சிடலாமே!” என்றார்.

தொடர்ந்து இரு வீட்டாரும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த வேளையில், அதே பாறாங்கல் முகத்துடன், “இதுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை!” என்கிற விதத்தில் தெனாவெட்டாய் அமர்ந்திருந்தாள் சம்பூர்ணம்.

“இது இப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தா பயம்மாயிருக்கு!...புலி பதுங்குதா?” தேவநாதனின் சிந்தனை வேறு விதமாய் ஓடியது.

“கடவுளே!...எல்லாம் கூடி வர்ற நேரத்துல இவ வாயைத் திறந்து எதையாவது சொல்லி மொத்தத்தையும் ஊத்தி மூடிடாம இருக்கணுமே!” பார்வதி ஒரு தெய்வம் பாக்கியில்லாமல் எல்லா தெய்வங்களிடமும் தன் விண்ணப்பத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

அழகான சிற்பங்களுக்கு மத்தியிலே ஒரு கரடுமுரடான கல்லை வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி, மலர்ந்த முகங்களுக்கு மத்தியிலே இறுகிப் போன முகத்துடன் இறுமாப்பாய் வீற்றிருந்தாள் சம்பூர்ணம்.

அவள் முகத்தில் இருப்பது பொறாமையா?....கோபமா?...வக்கிரமா?...சாடிஸமா? என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியாத ஒரு கலவையான பாவம் பிடிவாதமாய் வீற்றிருந்தது.

ஒரு கட்டத்தில் மாப்பிள்ளையின் தந்தையார் தேவநாதனிடம் வாய் விட்டே கேட்டு விட்டார், “இந்தம்மா யாருங்க?...நமக்கு சொந்தமா?”

“அது...வந்து...இவங்கதான் இந்த குடியிருப்போட ஓனரம்மா!...அவங்க வீட்டுப் போர்ஷன்லதான் நாங்க வாடகைக்குக் குடியிருக்கோம்!” என்று சொல்லிவிட்டு, தான் அவ்வாறு சொன்னது சம்பூர்ணத்தை கோபப்படுத்தி விடக் கூடாது என்பதற்காக, “பேருக்குத்தான் வீட்டுக்காரம்மா...ஆனா ரொம்ப நல்லவங்க...வாடகைக்கு குடியிருக்கறவங்க குடும்பத்தோட நல்லா...தன்மையா பழகுவாங்க!” என்றும் சொல்லி வைத்தார்.

“ஓ” என்றபடி மேவாயைத் தேய்த்தவர், குரலைச் சற்றுத் தணித்துக் கொண்டு, “ஏன்?...இப்ப உங்களுக்கு அவங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா?”

“இல்லையே!...ஏன் அப்படிக் கேட்கறீங்க?” தேவநாதன் அவசரமாய்க் கேட்க,

“இல்ல...நானும் வந்ததிலிருந்தே பார்த்திட்டுத்தான் இருக்கேன்...அந்தம்மா ஒரு மாதிரி விருப்பமே இல்லாம உட்கார்ந்திட்டிருக்கற மாதிரியே உட்கார்ந்திட்டிருக்காங்க!...அதான் கேட்டேன்!”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.