(Reading time: 5 - 10 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 08 - முகில் தினகரன்

ம்மா...நான் மொட்டை மாடிக்குப் படிக்கப் போறேன்ம்மா!”   பதிமூன்று வயது முகிலன் தன் தாயிடம் கத்தலாய்ச் சொல்ல

       “ராசா! படிச்சிட்டு....பத்து...பத்தரை மணிக்கெல்லாம் கீழே வந்திடுப்பா!” அவன் தாய் அன்பொழுகச் சொன்னாள்.

       “இல்லைம்மா...இன்னிக்கு நிறையப் படிக்க வேண்டியிருக்கு!...அதனால ரொம்ப நேரம் படிச்சிட்டு அப்படியே அங்கியே தூங்கிடுவேன்!” என்றான் முகிலன்.

       “அய்யய்யோ...வேண்டாம்ப்பா!...தலைச்சன் பிள்ளை தானாத் தனியா மொட்டைமாடில படுத்துத் தூங்கக் கூடாது!” என்றாள் அவன் தாய் அச்சத்தோடு.

       “அடப் போம்மா!...படுத்தா என்னவாம்?” இளங்கன்று பயமறியவில்லை

       “ப்ச்!...இப்படியெல்லாம் பேச்சுக்கு பேச்சு பதில் பேசக்கூடாது!...அம்மா சொன்னா சொன்னபடி கேளு!” தாய் கண்டிக்க

       “சரிம்மா!...நான் ஒரு பதினோரு மணி வரைக்கும் படிச்சிட்டு கீழே வந்திடறேன்!...போதுமா?”

       “அதுதான் கரெக்ட்!...கீழே கூடத்துக் கதவைத் தாழ்ப்பாள் போடாமலே விட்டு வைக்கிறேன்!...நீ வந்து லேசா தள்ளு...திறந்திடும்!...உள்ளார வந்து சத்தமில்லாம் உன் ரூம்ல போய்ப் படுத்துக்க!...அப்பா...தூங்கிட்டு இருப்பார்...“தடால்..புடால்”ன்னு சத்தம் பண்ணி அவரை எழுப்பி விட்டுடாதே!...என்ன?”

       “சரிம்மா!” என்றவன் தன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு நல்ல பிள்ளை போல் மொட்டை மாடிப் படிகளில் ஏறினான்.

       ஏற்கனவே அம்மாவிற்குத் தெரியாமல் அவன் மொட்டை மாடியில் கொண்டு வந்து மறைத்து வைத்திருந்த பாய் தலையணை போர்வை போன்றவற்றை  மறைவிடத்திலிருந்து  வெளியே  எடுத்து  விரித்தான்.

       தெரு விளக்கு அவர்கள் வீட்டு வாசலிலேயே இருந்ததோடல்லாது மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவற்றிற்கு மேலேஅவன் படிப்பதற்கென்றே போடப் பட்டது போல் வெகு அருகாமையில் அமைந்திருந்த காரணத்தால் அதன் மொத்த வெளிச்சமும் முகிலன் வீட்டு மொட்டை மாடியில் அமர்க்களமாய் பரவியிருந்தது.

       தென்றல் காற்று லேசான ஜில்லிப்போடு அவன் மேனியை வருட நிதானமாய் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.

       அமைதியோடு கூடிய ரம்மியான அந்தச் சூழ்நிலை படிப்பதற்கு மிகவும் தோதாக இருந்தபடியால் முகிலன் தன்னையும் மறந்து படிப்பில் ஆழ்ந்து விட்டான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.