(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“அதுவா?....உங்களுக்கு காது இன்னும் கேட்குதா?ன்னு செக் பண்ணத்தான் சத்தம் பண்றோம்” என்றான் தனசேகர்.

“அடேய் படவா?...எனக்கு வயசுதான் எழுவது...ஆனா முறுக்கத்துல இன்னும் இருபதுடா...தெரிஞ்சுக்க!...நம்பிக்கை இல்லேன்னா உன்ர வீட்டுல அக்கா இருந்தா அனுப்பு...அவ சொல்லுவா!” என்றார் பெரியவர்.

“அப்படின்னா நாங்க ஒரு இடத்துக்குப் போறேன்!,...நீங்களும் எந்திரிச்சு எங்க கூட வாங்க...பார்க்கறோம் உங்க முறுக்கத்தையும்...வலுவையும்!” என்றான் தனசேகர்.

“வர்றேண்டா!...எங்க போறீங்க?ன்னு சொல்லுங்க இப்பவே புறப்பட்டு வர்றேன்” பெரியவர் உடனே எழுந்து தயாரானார்.

“ம்...போடியம்மா தோட்டத்தைத் தாண்டி...சுடுகாடு போற வழில ஒரு பாழுங் கிணறு இருக்கல்ல?...அதுல போய் புறா பிடிக்கப் போறோம்...வர்றீங்களா?” தனசேகர் கத்தலாய்ச் சொன்னான்.

அதைக் கேட்டதும் எழுந்த பெரியவர் அப்படியே அமர்ந்தார்.

“அய்யோ...அந்தக் கிணத்துக்கா?...நான் வரலை சாமி!...என்னோட அனுபவத்துல இதுவரைக்கும் சுத்தமா அம்பது பேருக்கும் மேலே அந்தக் கிணத்துல விழுந்து உசுரை விட்டிருக்காக்க!...அவங்க ஆவியெல்லாம் இன்னும் அந்தக் கிணத்துக்குள்ளார தான் சுத்திட்டிருக்கும்!...இப்ப மணி பதினொண்ணே முக்கால்!...உச்சி நேரம்....சரியா...பனிரெண்டு மணிக்கு எல்லாம் வெளிய வந்து உலாத்தும்...ஆள் சிக்குனா...அப்படியே உள்ளார போட்டு அழுத்திடும்”

“என்னமோ... “முறுக்கத்துல இருபது”னு சொன்னீங்க!...அப்படியே உட்கார்ந்திட்டீங்க?” முரளி கேட்க,

“அடப் போங்கப்பா...நான் வரலை!...அதே மாதிரி நீங்களும் போக வேண்டாம்...உச்சி நேரம் வினையை வாங்கிக்காதீங்க” பெரியவர் அறிவுரைத்தார்.

“கெக்கே...பிக்கே” என்று சிரித்து அதை அலட்சியப்படுத்தி விட்டு சுடுகாட்டு வழியில் இருந்த அந்த பாழுங் கிணற்றை நோக்கி நடந்தனர் சிறுவர்கள் இருவரும்.

சுற்றுச்சுவர் இல்லாத அந்தக் கிணறு நல்ல அகலமாய் இருந்தாலும் ஓரத்தில் வளர்ந்திருந்த செடிகளும் கொடிகளும் பெரிய புதராய் மண்டி கால்வாசிக் கிணற்றை மறைத்திருந்தன.

ஓரிடத்தில் மட்டும் உள்ளே இறங்குவதற்கு தோதாக ஒரு சரிவு இருந்தது.  அந்தச் சரிவும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆழம் வரை மட்டுமே சென்றது. அதற்குக் கீழே பாறைகளை வெட்டிக் கிணறு தோண்டப்பட்டிருந்ததால்...இறங்குவதற்கு தோதாக அங்கே எதுவுமில்லை.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.