கங்காவின் வார்த்தைகள் சுரேனிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது... அவனின் முகத்தில் இருந்த சோர்வு, வருத்தம் எல்லாம் காணாமல் போய் மலர்ச்சி தோன்றியது.
“நான் ஏன் உங்களுக்கு ஏற்றவள் இல்லைன்னு சொன்னேன்னா...” என்று கங்கா தொடர்ந்து பேச முயற்சிக்கவும், சுரேன் அவளை தடுத்தான்.
“அதை பற்றி எல்லாம் நீ சொல்லனும்னு இல்லை... உனக்கு நடந்த பொம்மை கல்யாணம் பத்தி எல்லாம் எனக்கே தெரியும்... ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள். உன்னை வருத்தப் படுத்துவது போல் எதையும் நான் செய்ய மாட்டேன்...”
“இல்லை சுரேன், இதுவும் உங்களுக்கு தெரிந்திருப்பது அவசியம்... எனக்கு நடந்த அந்த கல்யாணம் சட்டப் படி செல்லுபடி ஆகாது, தெரியும்... அந்த தாலியை கூட நானே கோவில் உண்டியலில் போட்டாகி விட்டது... ஆனால் அந்த கேலி கூத்தில் நான் அந்த வீட்டில் போய் தங்கி இருந்த அந்த நாட்கள்... அதை பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம்...”
“எனக்கு உன் மீது சந்தேகமா? என்ன சொல்ற? நீ எனக்காகவே பிறந்தவள்... பாட்டி சொன்னாங்க, அம்மா சொன்னாங்க அப்படி இப்படின்னு உனக்கு வேறு கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் மாறி விடுமா என்ன? அது தான் கடவுளாக எனக்கு உன்னை மீட்டு கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்...”
“ப்ச்... நான் சொல்வது என்ன, நீங்கள் சொல்வது என்ன? நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு...”
“நல்லாவே புரியுது... எனக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை கேன்ஜஸ்... என்னுடைய இந்த அன்பு வெறும் உடல் சம்மந்தப்பட்டது இல்லை... அவ்வளவு சீப்பா சந்தேகப்படும் அளவிற்கு நான் கீழ்த்தரமானவனும் இல்லை...”
“...” சுரேன் அவளை அழைத்த விதத்திலும், அவன் சொன்ன வார்த்தைகளிலும் கவரப் பட்டு, வாயடைத்து போய் நின்றாள் கங்கா!
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.