உமேஷ் சோர்வுடன் வீட்டிற்கு வந்தான். ஜனனியுடன் பேசாமல், டெக்ஸ்ட் செய்யாமல் ஒரே ஒரு நாளை தள்ளுவதற்கு கடினமாக இருந்தது. நொடிக்கு ஒருத் தடவை ஜனனி மெசேஜ் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்துக் கொண்டே இருந்தான்.
ஸ்பாம் கால்கள் வந்தால் கூட ஜனனியாக இருக்குமோ என்று தான் அவனுக்குத் தோன்றியது.
ஆனால் ஜனனி அவனை தொடர்புக் கொள்ளவே இல்லை! இதில் அவனுக்கு ஏமாற்றமா, எதிர்பார்த்த நிகழ்வு தானா என்றும் இனம் பிரிக்க முடியவில்லை.
வித்தியாசமான மனநிலையுடன் வீட்டிற்கு வந்திருந்தான்.
அவன் வந்தானோ இல்லையோ, “உமேஷ், என் கேசரி எப்படி இருக்கு டேஸ்ட் செய்துப் பார்!” ரஜினி ஒரு ஸ்பூனுடன் வந்தாள்.
“இப்போ எனக்கு வேண்டாம்” என மறுத்தான் உமேஷ்.
“உன்னை யாரும் சாப்பிட சொல்லலை. டேஸ்ட் எப்படி இருக்குன்னு பாருன்னு தான் சொல்றேன்.” ரஜினி கையிலிருந்த கேசரியை தம்பிக்கு ஊட்டி விட்டாள்.
வேண்டாவெறுப்பாக வாங்கிக்கொண்ட உமேஷ், “நல்லா இருக்கு ரஜினி,” என பெயருக்கு சொன்னான்.
ரஜினியும் தொடர்ந்து அவனிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.
உமேஷ் அறைக்கு வந்து உடை மாற்றினான். ஜனனியை அழைத்துப் பேசினாள் என்ன என்ற கேள்வி திரும்பவும் தோன்றியது. அவளிடம் பேசாமல் இருந்தால் தலை வெடித்து விடும் போல இருந்தது.
வேண்டாம், வேண்டாம் என்று ஒரு நிமிடம் தள்ளிப் போட்டவன், அதற்கு மேல் பொறுமையை இழுத்து வைக்க இயலாமல், ஹாய் என ஒரே வார்த்தை மெசேஜை ஜனனிக்கு அனுப்பினான்.