தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 24 - பிந்து வினோத்
24. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
"எனக்கும் பாரதியைப் பிடிச்சிருக்கு விவேக்! நேராகவே அவள் கிட்ட பேசிடவா?"
அனைவரும் தூங்க சென்ற பின், விவேக்கின் அறைக்கு வந்த கற்பகம் அவனிடம் தன் மனதில் இருப்பதை சொன்னாள்.
கற்பகம் சொன்னதைக் கேட்டு சந்தோஷத்தில் விசிலடித்தான் விவேக்.
"இது என்னடா கெட்ட பழக்கம்?"
"ஹி ஹி... சாரி அம்மா, சந்தோஷத்தில் விசில் அடிச்சேன்... ஆமாம், ஏதோ டெஸ்ட் எக்சாம் எல்லாம் வைக்கப் போறேன்னு சொன்னீங்க?"
"அதெல்லாம் முடிஞ்சிருச்சு... உன்னுடைய பாரதி, பாஸ்..."
கற்பகம், உன்னுடைய பாரதி என்று சொன்னதிலேயே விவேக்கிற்கு மெய் சிலிர்த்தது. எப்படி இப்படி ஒரு பெண்ணின் மேல் பைத்தியமானோம் என்று அவனுக்கே புரியவில்லை.
"என்னப்பா, எதுவும் சொல்லாமல் இருந்தால் எப்படி? இப்போதே பேசி விட்டால், வீட்டிற்கு போய் அப்பாவிடம் சொல்லி முறைப்படி எல்லாம் செய்வோம்."
"அதில் கொஞ்சம் சிக்கல் இருக்கும்மா..."
"பாரதியிடம் நான் பேசுறேன்... அவளை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு..."
"ம்ம்ம்ம்... இதையே தான் ரமேஷுடைய அம்மாவும் சொன்னாங்க..."
"அப்புறம் என்ன உனக்குப் பிரச்சனை?"
"நீங்க பேசுறது எல்லாம் தேவைப் பட்டாள் பார்ப்போம் ம்மா... அது சரி, நீங்க பாரதிக்கு என்ன டெஸ்ட் வச்சீங்க?"