தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 40 - பிந்து வினோத்
40. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பாரதி அங்கிருந்து கிளம்பி போனப் பிறகு, கற்பகம் உமாவிடம் பேசியபடி சுண்டலை சாப்பிட்டு முடித்தாள். அதற்கு முன்பே மீட்டிங் முடியவும், ஃபோனை கீழே வைத்து விட்டு, உமாவிடம் பொதுவாக பேசிக் கொண்டு இருந்தாள்.
உமா கற்பகத்திடம் பேசியபடி இருந்தாலும், அவளின் கவனம் இன்னமும் திரும்பி வராத பாரதியிடமே இருந்தது. விவேக் கற்பகம் சம்மந்தப் பட்ட அலுவலில் இருக்கும் போது அவன் கவனம் சிதறினால், அதை கற்பகம் எப்படி எடுத்துக் கொள்வாள் என்பது உமாவிற்கு தெரியும் என்பதால், மனதில் கவலையுடன் இருந்தாள்.
உமாவின் பார்வை அவ்வப் போது மாடி பக்கம் சென்று வருவதை கவனித்த கற்பகம்,
“உமா, விவேக் இருக்கும் போது பாரதி மாடிக்குப் போய் விட்டு, சீக்கிரம் திரும்பி வந்ததா சரித்திரம் இருக்கா என்ன? புதுசா என்ன பார்க்கிற?” எனக் கேட்டாள்.
“இல்லை அத்தை... விவேக் வேலை...” என்றாள் உமா தயக்கத்துடன்.
“வேலையா, நீ வேற? அவன் பிஸ்னஸ் ஸ்டார்ட் செய்ய நான் உடனே முதலில் ஒத்துக்கலை தானே, அதுக்காக அவன் கோபத்தில் பழி வாங்கிட்டு இருக்கான். இருபது நிமிடத்தில் முடிய வேண்டிய காலை (call) முக்கால் மணி நேரமா கேள்வி மேல கேள்வி கேட்டு இழுத்துட்டு இருந்தான். அது தான் பாரதியை அனுப்பி வச்சேன். நம்ம விஸ்வாமித்திரருடைய வீக் பாயின்ட் தான் தெரியுமே! அதற்கு தான் அந்த விஸ்வாமித்திரருடைய மேனகையை அனுப்பி வைத்தேன். எதிர்பார்த்தது போலவே பாரதி அந்த பக்கம் போன அஞ்சு நிமிஷத்தில விவேக்குக்கு வேற முக்கிய வேலை வந்துருச்சு. ஸோ, எல்லோரும் அப்ரூவ் செய்தாச்சு. மீட்டிங்கும் முடிஞ்சாச்சு!”
சிரிப்புடன் சொன்ன மாமியாரை அதிசயமாக பார்த்தாள் உமா. அவளின் முகத்திலும் புன்னகை தோன்றியது.
“உங்களுக்கு தெரியுமோ என்னவோ அத்தை, விவேக் பாரதிக்கு வச்சிருக்கும் செல்ல பேரு மேனகா இல்லை ஆனால் ரதி...”