அவளை கவனித்து உமாவும், பாரதியும் தங்களுக்குள் பிரியமுடன் ஒரு புன்னகை பரிமாறிக் கொண்டார்கள்.
"மது ரொம்பவே மாறிப் போயிருக்கா பாரதி. அவக் கிட்ட வந்திருக்க கான்ஃபிடன்ஸ் பார்த்து எனக்கு ஆச்சர்யமா இருக்கு..." என்றாள் உமா.
"நம்ம வீட்டுல எல்லோருமே அவ மேல அதிகமா அன்பு வச்சிருக்காங்க, அப்போ அவ மாறுறதுல என்ன ஆச்சர்யம் இருக்கு உமா??"
"அதுவும் சரி தான்... ஏன் பாரதி, நீயும் விவேக்கும் என்ன பிளானில் இருக்கீங்க? இன்னும் கொஞ்ச நாள் குழந்தையை தள்ளி போடுறது போலவா, இல்ல...?”
“அப்படி எல்லாம் ப்ளானுன்னு எதுவும் இல்லை உமா...”
உமாவின் கேள்வியையும், அதற்கு பாரதியின் வெட்கம் கலந்த பதிலையும் கவனித்தபடி அந்த பக்கம் வந்த கற்பகத்தின் முகத்திலும் புன்னகை தோன்றியது. மருமகளைப் பார்த்து,
“பாரதி, விஸ்வாமித்திரர் எங்கே?” எனக் கேட்டாள்.
பாரதி புரியாமல் விழிக்கவும்,
“விவேக்குக்கு அத்தை வச்சிருக்க புது பெயர் பாரதி. உனக்கு விவேக் ரதின்னு பேரு வச்சிருக்காரே அதுப் போல...” என பாரதியை பார்த்து சொல்லி கண் சிமிட்டினாள் உமா.
உமாவைப் பார்த்து புன்னகைப் புரிந்தாலும், கற்பகத்திடம்,
“அவர் மாடியில் தான் இருக்கார் அத்தை...” என பதில் சொன்னாள் பாரதி.
“சரி...” என்று விட்டு அங்கே இருந்து நகர்ந்தாள் கற்பகம். அவளின் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போய், முகம் வேறுப்பட்டு இருப்பது உமா, பாரதி இருவருக்குமே தெரிந்தது!