மென்மையாக அஹல்யாவிடம் பேசினான்.
அஹல்யா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
“உங்களுக்கு டூ வீலர் ஓட்டத் தெரியுமா அஹல்யா?”
“தெரியும் சார். ஸ்கூட்டி வச்சிருக்கேன்.’
“அதை விட பெரிய வண்டிங்க? பைக், புல்லெட் மாதிரி?”
அஹல்யாவின் கண் முன் எந்த கவலையுமில்லாமல் சிறகடித்துப் பறந்த கல்லூரி நாட்கள் தெரிந்தது.
“பொதுவா அந்த மாதிரி வண்டிங்க எல்லாம் பசங்க ஓட்டுவாங்க. ஆனால் இப்போ, இந்த காலத்துல லேடீஸும் அதை சேலஞ்சா எடுத்து ஓட்டுறாங்க. நீங்க எப்படி?” மீண்டும் கேட்டான் தென்றல்வாணன்.
“காலேஜ் டேஸ்ல ஓட்டி இருக்கேன் இன்ஸ்பெக்டர். இன்ஃபாக்ட் அப்போ நான் லைசன்ஸ் வாங்கினதே என் காலேஜ் ஃபிரெண்டோட பைக் ஒட்டிக் காட்டி தான்.” எதற்கு கேட்கிறான் என்பது புரியாமல், உண்மையை சொன்னாள் அஹல்யா.
“ஓகே! சேகரன் பத்தி ஏற்கனவே இரண்டு தடவை நான் உங்க கிட்ட பேசி இருக்கேன் அஹல்யா. ஒரு தடவை நீங்க அவன் உங்களை தொல்லை செய்றான்னு சொன்னதுக்காக, இன்னொன்னு சேகரன் எப்படி இறந்தான்னு கேட்குறதுக்காக.”
அஹல்யா ஆம் என்று அர்த்தம் படும் வண்ணம் தலையை ஆட்டினாள்.
“அந்த இரண்டாவது விஷயத்தை நான் திரும்ப கேட்கப் போறேன். சேகரன் சாவுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கா?”
“இல்லை இன்ஸ்பெக்டர். எனக்கு தெரிஞ்சதை நான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்.”