கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே வந்தவளை நிமிர்ந்து நேராக பார்த்த விவேக் எதுவும் சொல்லவில்லை.
புன்னகை மின்ன கணவனின் அருகில் சென்ற பாரதி,
“என்னாச்சு நீங்க ரொம்ப பிஸியா?” என விசாரித்தாள்!
“ம்ம்ம்...” மீண்டும் லேப்டாப்பில் கண்களை பதிய விட்டு விட்டு பதிலுக்கு முணங்கினான் விவேக்.
“இந்தாங்க உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்...”
பாரதி நீட்டிய ஆப்பிள் ஐபோனை பார்த்த விவேக்கின் முகத்தில் தானாக வியப்பு தோன்றியது! ஆனால், எதுவும் பேசாமல் மனைவியின் முகத்தைப் பார்த்தான் அவன்.
“உங்க பழைய சிம் நேனோ சிம் தானே, அதையே யூஸ் செய்யலாம். நான் புது நம்பர் வாங்கியாச்சு... அந்த நம்பரையும் இதில ஸ்டோர் செய்து வச்சிருக்கேன். எங்க காலேஜில என் டிபார்ட்மென்ட் நம்பரையும் சேவ் செய்திருக்கிறேன். ஒருவேளை என் நம்பர் ரீச்சபிளா இல்லைனா இந்த நம்பரில் நீங்க என்னை கான்டாக்ட் செய்யலாமே...”
“ம்ம்ம்...”
“சரி, நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க...”
சொல்லிவிட்டு அறையில் இருந்த கிளம்ப எத்தனித்தவவளை விவேக்கின் குரல் தடுத்து நிறுத்தியது.
“ஒரு நிமிஷம்...”
தன்னையா இப்படி அழைக்கிறான் என ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தாள் பாரதி...