ஒருவரை ஒருவர் பார்த்து குழம்பினார்கள்
வீரசிங்கமோ மூர்த்தியின் அறிவை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டவர் மகேந்திரனிடம்
”நாங்க எங்கயும் போயிட மாட்டோம் உங்க முடிவு தெரிஞ்ச பின்னாடிதான் எங்களால ஊருக்கு போக முடியும், அதனால நீங்க நிதானமா கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க, அதுவரைக்கும் நாங்க தங்க ஒரு இடம் கொடுங்க தூர பயணம் வயசாயிடுச்சி, பசி வேற வயித்தை கிள்ளுது” என சொல்லி முடிக்கும் முன்னே சாந்தி உடனே எழுந்து நின்று
”மன்னிச்சிடுங்க வந்தவங்களை விருந்தோம்ப கூட நேரம் கிடைக்கலை, மஹதியை பத்தி கேள்விப்பட்டதும் கையும் ஓடலை காலும் ஓடலை, வாங்க நீங்க ரெண்டு பேரும் தங்க கெஸ்ட் ரூம் இருக்கு, அங்க தங்குங்க, சாப்பிடறதுக்கு சாப்பாடு கொண்டு வந்து தரேன் சாப்பிட்டு ஓய்வெடுங்க, எங்களுக்கு யோசிச்சி முடிவெடுக்க கொஞ்சம் டைம் கொடுங்க” என சொல்ல அதற்கு வீரசிங்கமும் மூர்த்தியும் ஒப்புக் கொண்டார்கள்.
அவர்களுக்கு என ஏசி அறை தரப்பட்டது, சாப்பாடும் தரப்பட்டது இருவரும் நன்றாக சாப்பிட்டு ஒரே படுக்கையில் படுத்து உறங்கினார்கள்.
மஹதியின் பெற்றோர்க்குதான் தூக்கம் கெட்டது.
விடிந்தும் விடியாத நேரம் சாந்தியோ தன் கணவரிடம்
”இப்படி நாம யோசிச்சி யோசிச்சி குழம்பறதை விட மஹதிக்கு போன் பண்ணி பேசிடறது மேல், வந்தவங்க நாம முடிவு சொல்றவரைக்கும் போக மாட்டாங்க போல இருக்குங்க”
”நீ சொல்றதும் சரிதான் மஹதி ஒருத்தனை காதலிக்கறாள்ன்னு சொன்னதே என்னால நம்ப முடியலை சாந்தி”
”என்னாலயும்தான் அவளை நான் குழந்தைன்னு நினைச்சேன் ஆனா பாருங்க ப்ரெண்ட்டை பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு என்னென்ன வேலைகளை செய்திருக்கா“