அப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்காது விவேக் பாரதியையே திகைத்துப் போய் பார்த்தபடி நிற்க, அவனை கண்டுக் கொள்ளாமல் உள்ளறைக்கு சென்று சேலையை மாற்றினாள் பாரதி!
அவளின் குணாதிசயங்களில் ஒன்றாக, எதுவும் நடக்காததுப் போல விவேக்கிடம் பேசி விட்டு வந்திருந்தாலும், விவேக்கின் நடவடிக்கைகள் பாரதியை மொத்தமாக குழப்பியது...
இவனுக்கு என்ன தான் பிரச்சனை?
அன்பாக இருந்தவன், கையை நீட்டுகிறான்... கத்துகிறான்...
பணத்திற்காக நடந்த கல்யாணம், ஆனால், நீ இங்கேயே உன் விருப்பம் போல் இருக்கலாம், நான் என் விருப்பம் போல் இருப்பேன் என்றான்... ஆனால் நினைத்தது நடந்து விட்டதற்காக அவன் சந்தோஷப்பட்டதாகவும் தெரியவில்லை...! அவள் வீட்டை விட்டு வெளியே போக வேண்டிய அவசியம் இல்லை என்றான், ஆனால், அவள் இங்கே இருப்பது தான் அவனின் தலையாய பிரச்சனை என்பது போலவும் நடந்துக் கொள்கிறான்...
இதெல்லாம் போதாதென்று எப்போதும் முகத்தில் யோசனை... சிரிப்பை மறந்த முகம்... ஒளி இல்லாத பார்வை...
ஒருவேளை, லாவண்யாவின் வருகை தான் அவனை இந்த மாதிரி நடந்துக் கொள்ளும் அளவிற்கு தாக்கப் படுத்தி இருக்கிறதோ???
அல்லது இதற்கெல்லாம் வேறு காரணம் இருக்குமோ???
விவேக் மீது மனதில் இருக்கும் அன்பின் காரணமாக அவளே அவனுக்காக சப்பைக் கட்டு காரணங்களை யோசிக்கிறாளோ????
யோசித்து யோசித்து பாரதிக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது!!!