“மனசுக்கு என்னவோ மாதிரி இருக்குங்க சத்யா. பேசாம ஷாலினியையும் அருணையும் அழைச்சுட்டு வீட்டுக்கு போயிடுவோமா? இந்த வீட்டுக்கு இன்னொரு நாள் போகலாமா?”
“ஏன் அஹல்யா?? பாதி தூரம் வந்துட்டோமே, இந்த வேலையையும் முடிச்சுட்டு போகலாம். சக்தி காரணம் இல்லாம சொல்லி இருக்க மாட்டா!”
அஹல்யாவிற்கு இப்போதும் அந்த வீட்டிற்குப் போக பிடிக்கவில்லை. இருந்தாலும் சத்யாவிற்காக ஒன்றும் சொல்லாமல் ஸ்கூட்டியை ஓட்டினாள்.
மங்கலான ஸ்ட்ரீட் லைட் வெளிச்சத்தில் அந்த சாலை பாதி இருட்டாக இருந்தது. கிட்டத்தட்ட எல்லா வீட்டிலும் இருந்து கிரிக்கெட் மேட்ச் கமண்டரி சத்தம் கேட்டது.
“நாம சீரியல் பார்க்குறோம்னு குறை சொல்றாங்க. இவங்க கிரிக்கெட் பார்க்குறது எல்லாம் யாராவது கணக்குல எடுத்துக்குறாங்களா?” சத்யா முனுமுனுத்தாள்!
அஹல்யா பதில் ஒன்றும் சொல்லாமல் ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டு காம்பவுன்ட் பக்கத்தில் நிறுத்தினாள். இரண்டுப் பேரும் ஒன்றாக கேட்டையும், உள்ளே இருந்த க்ரில்லையும் திறந்துக் கொண்டு உள்ளே போனார்கள்.
“அருண் ரூம் எங்கே இருக்கு?” சத்யா கேட்க, அஹல்யா கையை காட்டி விட்டு நடந்தாள்.
திடீரென கேட்ட சின்ன உலோக சத்தம் அஹல்யா, சத்யா இரண்டுப் பேரையும் திடுக்கிட வைத்தது. அஹல்யா பயந்து சத்யாவின் பின்னே வந்து நின்றாள். சத்யாவும் அவளை பாதுகாப்பவளைப் போல கையை பின்னால் நீட்டி அஹல்யாவை மறைத்துக் கொண்டாள்.
🌼🌸❀✿🌷
சக்தி ஜீப் ஓட்டியப் படி மொபைலை எடுத்துப் பார்த்தாள். 15% சார்ஜ் ஆகி இருந்தது. ஜீப் வேகத்தை குறைத்து சத்யாவின் மொபைல் நம்பரை டையல் செய்தாள்.