“உன் ஹீரோ வந்தாச்சு வா... உன்னைப் பார்த்ததும் அவரோட ரியாக்ஷன் என்னன்னு பார்ப்போம்...”
மிருதுளா அழைத்தப் பிறகும் கிருத்திகா தயக்கத்துடன் நின்றாள்!
“என்ன வெட்கமா??? கொஞ்சம் அவருக்குன்னு ஸ்டாக் வச்சுக்கோ. இப்போவே எல்லாத்தையும் காலி செய்திடப் போற,” என்று தன் கேலியை தொடர்ந்தாள் மிருதுளா.
“ப்ச்...”
“வா வா, ரொம்ப நேரம் அவரை தேட விடக் கூடாது... சும்மாவே கல்லு மாதிரி தான் இருக்கார்...”
சொல்லியபடி கிருத்திகாவின் கையை பற்றி அழைத்து சென்றாள் மிருதுளா.
அவர்கள் இருவரும் நினைத்ததுப் போலவே காரில் வந்திருந்தது தியாகு மற்றும் கிருத்திகாவின் குடும்பத்தினர் தான்!
“ரெடி ஆகிட்டீங்க போலருக்கு! இப்போ கிளம்பினா தான் ஃப்ளைட்டுக்கு சரியா இருக்கும்,” என்றபடி இவர்கள் இருவரின் அருகே வந்தாள் கீதா.
“ஆமாம் நாங்க ரெடி...” என்ற மிருதுளாவும், அமைதியாக நின்றிருந்த கிருத்திகாவும் கீதாவை தாண்டி கார் அருகில் நின்றிருந்த தியாகுவை ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்ததுப் போலவே அவனின் பார்வை கிருத்திகாவின் பக்கம் வந்தது... ஆனால் அவர்கள் நினைத்துப் போல அந்த முகத்தில் சின்னதாக கூட மாற்றம் எதுவும் இல்லை!
முன் தினம் அவனின் பார்வையில் இருந்த பரிவு கூட இப்போது இல்லை...!