“நான்... என் பேர் லதா, மேடம்... சாரோட செக்ரட்டரி...” என தன்னை தானே அறிமுகம் செய்துக் கொண்டாள் அவள்!
“ஓ லதா! உங்களோட பேசி இருக்கேன், பார்த்ததில்லை... என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?” என்றாள் பாரதி குழப்பத்துடன்!
“நான் உங்க கல்யாணத்துக்கு வந்திருந்தேன் மேடம்... அப்புறம் விவேக் சார் உங்க போட்டோவ ஆஃபிஸ்ல வச்சிருக்கார்... பார்த்திருக்கேன்...”
“ஓ... ஓகே! ஆமாம், நீங்க என்ன இந்த ஆஃபீஸ்ல இருக்கீங்க?”
எங்கே விவேக்கும் இதே ஆஃபீஸில் இருந்து விடுவானோ என்ற கேள்வி பாரதிக்குள் திடீர் என்று எழுந்தது!
“இப்போ நான் லாவண்யா மேடம்க்கு செக்ரட்டரி, மேடம்... விவேக் சார் தான் அவங்களுக்கு உதவியா இருக்க என்னை டிரான்ஸ்ஃபர் செய்தார்... ஆனாலும் மேடம், சார் இப்படி கண்ணு மண்ணு தெரியாமல் வேலை செஞ்சுட்டு இருக்காரே... நீங்க அவர் கிட்ட கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய சொல்லலாம் தானே?”
விவேக் அதிக வேலையை இழுத்துப் போட்டு செய்கிறானா...!!! ஏன், என்ற கேள்வி மனதுள் எழ, “ம்ம்ம்...” என மட்டும் சொன்னாள் பாரதி!
“கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல எடுத்துக்க வேண்டிய வேலை எல்லாத்தையும் இந்த இரண்டு மாசத்திலேயே எடுத்து கமிட் செய்திருக்கார்... கொஞ்சம் ரிஸ்க்... ஆனால் லாங் ரன்னில் கட்டாயம் நல்ல ரிசல்ட் வரும்... அவர் இப்படி விழுந்து விழுந்து வேலை செய்றதை பார்க்கும் போது தான் பாவமா இருக்கு... விவேக் சார் எப்போதுமே கொஞ்சம் பொறுமையா எல்லாம் செய்றவர்...’
பாரதி என்ன சொல்வது என்றுப் புரியாமல் மெளனமாக நின்றாள்!