“நீ என் மனைவின்னு விஜய் சொல்லி உனக்கு தெரியும்... அந்த கல்யாண போடோஸ் பார்த்து உனக்கு தெரியும்... உன்னோட அம்மா அப்பா எல்லோரும் சொல்லி உனக்கு தெரியும்... ஆனால் உனக்கே நீ என் மனைவி தான்னு தெளிவா தெரியுமா? இப்போ கூட தெரியுமா???
கிருத்திகா கேள்வியுடன் எதிரே இருந்தவனைப் பார்த்திருந்தாள்...
“சொல்லும்மா... அவங்க சொன்னதால தெரியும் அப்படி தானே???”
தியாகு மீண்டும் கேட்கவும், தலை அசைத்து, “ம்ம்ம்ம்...” என்று ஏற்றுக் கொண்டாள் கிருத்திகா!
“நான் கொஞ்சம் முன்னாடி சொன்னேன் பார்த்தீயா, நீ இப்படி இருந்தா எனக்கு பிடிச்சிருக்குன்னு... அதுக்கு அர்த்தம் என்ன?”
“தெரியலையே...”
“இந்த கிருத்திகாவை எனக்கு பிடிச்சிருக்கு... ஆனால், நான் விரும்பி கல்யாணம் செய்துகிட்ட கிருத்திகா நீ இல்லை... அவ யாரு, எப்படி இருப்பா எதுவுமே உனக்கு நினைவு இல்லை...”
அவன் சொல்வது அவளுக்கு புரியட்டும் என் நினைப்பவனாக, சில வினாடிகள் இடைவெளி விட்டு, தொடர்ந்துப் பேசினான் தியாகராஜன்.
“மனசளவுல அது எதுவும் தெரியாம இருக்கும் உன்னை என் மனைவின்னு நான் சொன்னால் அது தப்பு தானே???? நீ இப்போ ஒரு சின்னக் குழந்தைப் போல... உனக்கு இப்போதைக்கு எல்லாமே அடுத்தவங்க எடுத்து சொல்லனும்... இது இப்படி, அது அப்படி... முன்னாடி இதெல்லாம் நடந்தது... எக்ஸட்ரா எக்ஸட்ரா... மனைவியை குழந்தைப் போல பார்த்துக்கலாம், நடத்தலாம்... ஆனால், ஒரு குழந்தையை நான் மனைவியா நினைக்க முடியுமா அது தப்பில்லையா???”
கிருத்திகா திகைத்துப் போய் பேசா மடந்தையாக அமர்ந்திருந்தாள்...