அவளின் தலை அசைப்புக்கு ஏற்ப ஆடிய காதில் அணிந்திருந்த அழகிய வளையங்கள்...
"எடுக்க வசதியா இருக்க காரை அந்த பக்கம் நிறுத்தி வச்சிருக்கேன். மழையில நனஞ்சிட்டீங்களே! குடையில வாங்க..."
டிரைவரின் குரல் எங்கேயோ கிணற்றில் இருந்து ஒலிப்பது போல் அவனுக்கு கேட்டது...
கஷ்டப்பட்டு தன்னிலை அடைந்து டிரைவருடன் நடந்தாலும், மீண்டும் மூன்று முறை அவள் பக்கம் திரும்பி பார்த்து விட்டு தான் காரினுள் ஏறினான் உதய்.
❀✿❀✿❀✿
அன்றிரவு முழுவதும் உதயின் மனதில் பூந்தென்றலாய் அவளின் நினைவுகளே இருந்தன...
"என்ன ஆச்சு உதய், ஏன் வித்தியாசமா இருக்க? மழைல நனைஞ்சதுல உடம்புக்கு ஏதாவது செய்யுதா?"
அம்மா ரேவதியின் கவலை தோய்ந்த கேள்விக்கு,
"என்னம்மா நீங்க, அதெல்லாம் எதுவுமில்லை. ஐ ஆம் வெரி எக்ஸைட்டட்," என்று சொல்லி மழுப்பினான்.
அடுத்த நாள் மனதில் சந்தோஷத்துடன் கல்லூரிக்கு செல்ல தயாரானான். சரத் வந்து விட்டதற்கு அறிகுறியாக ஹார்ன் சத்தம் கேட்கவும், அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு சரத்தின் பைக்கில் ஏறிக் கொண்டான்.
"என்ன தம்பி, ஸ்கூல் பாய் கெட்டப் எல்லாம் மாத்தியாச்சா?"
"அண்ணா, இப்படி தம்பி கம்பின்னு எல்லாம் கூப்பிடாம உதய்ன்னு கூப்பிடுங்க!"