”என்னம்மா சொல்லு“ என கேட்க அவளோ ஒரு நொடி நிதானித்து ஆழமாக மூச்சு இழுத்துவிட்டுவிட்டு
”அக்கா கல்யாணம் நின்னுடுச்சிக்கா” என்றாள் கவலையாக. அதைக் கேட்டு அனைவருமே அதிர்ந்தார்கள். சிவரஞ்சனிக்கோ கோபம்
”ஏய் அடிவிழும் உனக்கு, விளையாட்டுத்தனமா கூட இப்படி பேசக்கூடாது”
”இல்ல நிஜமாவே கல்யாணம் நின்னுடுச்சி, வெளிய பிரச்சனை வாங்க வாங்க காட்டறேன் வாங்க” என அவள் சிவரஞ்சனியை இழுக்க சம்யுக்தாவும் கூடவர அவளை தடுத்தார் சிவரஞ்சனி
”நீ இங்கயே இரு, நான் போய் பார்த்துட்டு வரேன்” என சொல்லிவிட்டு அவர் செல்ல நடப்பதைப்பற்றி அறிய அவளை விட்டுவிட்டு எல்லாரும் சென்றார்கள். 5 நிமிடம் கூட ஆகவில்லை எந்தச் செய்தியும் வராமல் போகவே சம்யுக்தாவே அறையை விட்டு வெளியேறினாள்.
அங்கு மேடையில் இருந்த புரோகிதர் கூட சாமான்களை மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பத் தயாரானார்.
மண்டபத்தில் சலசலப்பு பேச்சுகள் அதிகமாக இருந்தது, யார் என்ன சொல்கிறார்கள் என அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, அவள் கண்கள் தந்தையை தேடியது. அந்நேரம் புரோகிதரோ அவளிடம் வந்தார்
”மன்னிச்சிக்கோடிம்மா என்னோட இத்தனை வருஷ சர்வீஸ்ல ஒரு கல்யாணம் கூட இப்படி நின்னதில்லை, உன்னோடதுதான் முதல் முறையா நின்னிருக்கு“
”ஏன் கல்யாணம் நின்னுடுச்சி என்ன பிரச்சனை”
”மாப்பிள்ளைக்கு உன்னை பிடிக்கலையாம், இந்த கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டாராம்”