“தேன்மொழி, இவங்க ஈஸ்வரி ஆன்ட்டி. எங்க அம்மாவோட க்ளோஸ் ஃபிரென்ட். அம்மா தினம் தினம் ஒரு பத்து தடவையாவது இவங்களை பத்தி பேசுவாங்கன்னா பார்த்துக்கோயேன்... இது சத்யா... அவங்க மகன்...” என்றும் சொன்னாள்!
சம்பிரதாயத்திற்காக ஒரு புன்னகை சிந்திய தேன்மொழி, அதன் பின் சத்யா பக்கம் திரும்பவே இல்லை.
ஆனால் சத்யா ஓரக்கண்ணால் அவளை தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்... அவளின் நெற்றியில் வந்து விழும் சுருட்டை முடி... கைகளில் அடுக்கி இருந்த வளையல்... காதுகளில் இருந்த ஜிமிக்கி... என அவளைப் பற்றி ரிசெர்ச் செய்யப் போபவனைப் போல பார்த்து, பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்...
மணமக்களிடம் பரிசைக் கொடுத்து வந்த உடன், யாருடனோ பேசப் போவதாக சொல்லி தேன்மொழி அங்கே இருந்து நழுவிச் சென்றாள்...
சத்யாவிற்கு ஏமாற்றமாக தான் இருந்தது... பார்வையால் அவள் போகும் திசையையே தொடர்ந்துக் கொண்டிருந்தான்...
மஞ்சரி, ஈஸ்வரியின் அருகில் அமர்ந்து கதைப் பேசத் தொடங்கினாள்.
அவ்வப்போது தேன்மொழியின் பக்கம் சென்று வந்துக் கொண்டிருந்த சத்யாவின் கவனம், அருகில் இருந்தவர்களின் பேச்சில் தேன்மொழியின் பெயர் அடிப் படவும் அதை கவனிக்கலானான்.
மஞ்சரி தேன்மொழியை புகழ்ந்து தள்ளினாள். அவளுக்கு படிப்பிலும் தற்போது செய்துக் கொண்டிருந்த வேலையிலும் இருக்கும் ஆர்வத்தை பற்றி ஈஸ்வரியிடம் பெருமையுடன் சொன்னாள்.
“அவளுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாச்சா மஞ்சரி?”