இன்னைக்கு வரை தேன்மொழி கிட்ட இந்த மாதிரி ஏன் இதை முடிக்கலைன்னு கேட்குற சந்தர்ப்பம் வந்ததே இல்லை... அந்த அளவுக்கு அவங்க பர்ஃபக்ட். மத்தப் பொண்ணுங்க எல்லோரும், வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் இரண்டு வருஷம் சின்சியரா வேலை செய்துட்டு கல்யாணம் செஞ்சுப்பாங்க... அப்புறம் குடும்பம், குழந்தைன்னு ஆன உடனே, அவங்களுடைய கவனம் இரண்டு பக்கமுமாக இருக்கும்... ஆனால் தேன்மொழி விதிவிலக்கு! கல்யாணம் செஞ்சுக்கிட்டா வேலையில் கவனம் செலுத்த முடியாதுன்னு தான் கல்யாணத்தை தள்ளிப் போட்டு இருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன்..."
கத்துவதையும் கத்தி விட்டு, பாராட்டு வேறா, என மனதுக்குள் குமைந்த சத்யாவிற்கு, முருகன் தேன்மொழியின் கல்யாணம் பற்றி சொன்னது கவனத்தில் பட்டது! ஒருவேளை வேலை மீது இருக்கும் ஆர்வத்தில் தான் தேன்மொழி அவனை பிடிக்கவில்லை என்று சொல்லி இருப்பாளோ, என்ற கேள்வி அவனுக்குள்ளே எழுந்தது...
அப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்...!!!!
உண்மையில், இன்று அவன் இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை! சங்கீதாவிடம் சொல்லி இருந்தால், ஒரு ஃபோன் போட்டே வேலையை முடித்துக் கொடுத்திருப்பாள்...
ஆனால் அவனுக்கு தேன்மொழியை சந்திக்கும் வாய்ப்பை நழுவ விட விருப்பமில்லை. அதற்காகவே தான் வேலை மெனக்கெட்டு நூறு கிலோமீட்டர் காரை ஒட்டி வந்திருந்தான்...
ஆனால், இந்த முருகன் அவன் முன்னிலையில் தேன்மொழியிடம் கோபமாக பேசி விட்டாரே... பாவம் அவள்...!
அப்போது முருகனின் மேஜை மீதிருந்த டெலிஃபோன் சிணுங்கியது... காலர் ஐடியில் நம்பரை பார்த்த முருகன்,
“ஒரு இம்பார்டன்ட் கால் மிஸ்டர் சத்யா...” என்று இழுத்தார்...
புரித்துக் கொண்டவனாக, ”நீங்க பேசுங்க முருகன்,” என்று சொல்லி விட்டு அந்த அறையை விட்டு கேஷுவலாக வெளியே வந்து நடந்தான் சத்யா.