சொல்ல மாட்டாள் சுபாஷினி...
அன்றும் அதே வழக்கமாக போய் கொண்டிருக்க,
“சும்மா இருங்க... நம்ம கதை போதும்... இனி ஆகாஷ் கல்யாண வீடியோ பார்த்து ரசிக்குற காலம் வந்தாச்சு... சொல்லு ஆகாஷ், உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடுவோமா???” என்று கடந்த சில மாதங்களாகவே கேட்க நினைத்ததை மகனிடம் நேரடியாக கேட்டாள் சுபாஷினி.
“என்னம்மா... அதுக்குள்ளே என்னை வம்புல மாட்டி விட பார்க்குறீங்க,” என்றான் ஆகாஷ்!
“அதுக்குள்ளேயா??? இது தான்ப்பா கல்யாணத்துக்கு சரியான வயசு... நீ சொல்லு, உனக்கு என்ன மாதிரி பொண்ணு வேணும்?”
“என் அம்மா மாதிரி, ஸ்மார்ட், க்யூட், & சாஃப்ட் ஆன பொண்ணு வேணும்...”
யோசிக்காமல் சட்டென ஆகாஷ் சொல்லிவிட, ஸ்விட்ச் போட்டதை போல பளிச்சிட்டது சுபாஷினியின் முகம்!!! அதை கவனித்த பிரகாஷ்,
“ஏன் ஆகாஷ் நான் ஒருத்தன் கஷ்டப் படுறது போதாதுன்னு உனக்கும் ஏன் இந்த மண்ணை அள்ளி தலையில போட்டுக்குற வேலை???” என்றார் கேலியாக.
“சும்மா அம்மாவை கலாட்டா செய்யாதீங்கப்பா... எனக்கு அம்மா மாதிரி தான் பொண்ணு வேணும்...”
“ஏற்கனவே பிள்ளையார் இதை சொல்லி தான் வருஷக்கணக்கில பேச்சலரா இருக்கார். அவருக்கு நீயும் கம்பெனி கொடுக்கலாம்னு ப்ளானா?”
“என்னங்க நீங்க! அப்படிலாம் சொல்லாதீங்க...!” என கணவரிடம் சொன்ன சுபாஷினி, மகனிடம், “ஆகாஷ், யாரையாவது மனசுல வச்சுட்டு இப்படி சொல்றீயா?? அப்படி ஏதாவது இருந்தா சொல்லு... இந்த விஷயத்துல உன் விருப்பம் தான் எங்க முடிவும்,” என்றாள்.