(Reading time: 18 - 35 minutes)

12. நினைக்காத நாளில்லை ரதியே - ஸ்வேதா

Ninaikkaatha Naalillai rathiye

மீராவிற்கு தன்னை மீறி எல்லாம் நடப்பது புரிந்தும் எதிர்த்து ஏதும் செய்யாமல் அமர்ந்திருந்தாள் அந்த டிரஸ்சிங் டேபிள் முன் அலங்காரத்துடன். மஹி குடும்பம் அவளை பெண் பார்க்க வருகிறார்களாம். 

 

கிருஷ்ணாவும் கவியும் அவளை கிண்டல் செய்வதாக சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் கிண்டல் தீண்டல் என்று பார்பதற்கு எரிச்சலாக இருந்தது மீராவிற்கு. 

 

யோசிக்க விடாமல் மற்றவர்கள் அவளை அவள் அதை செய்தே ஆக வேண்டும் போல் சூழ்நிலை உருவாக்கி விடுகின்றனர். மூச்சு முட்டும் அளவிற்கு அப்படி இப்படி என்று சிக்கல்களை முடிந்த அளவிற்கு பிண்ணி அவளை மடக்கி செய்ய வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

மீராவுக்குள் குழப்பமே அவளால் சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லையா!! நடப்பது ஒரு ஓரத்தில் பிடித்து இருப்பதால் தடுக்க தோன்றவில்லையா?

 

அவளை மிகவும் மோசமாக சுட்டிசொன்னவன் பெண் பார்க்க வருகிறானாம், அவள் ஒப்புதலே இல்லாமல் முத்தம் கொடுத்தவன், திமிராக போடி என்று சொன்னவன், முதலில் வேண்டாம் என்று இப்போது பெண் பார்க்க வருகிறானாம்.அதற்க்கு ஒப்பனையாம். சட்டென்று முகத்தை தண்ணீரில் கழுவினாள்.

 

அங்கே வந்த கவி, "ஏய் மீரா..?? எதுக்கு இப்போ முகம் கழுவின? பௌன்டேஷன் போட்டு பத்து நிமிடம் விட்டு மேக் அப் போடறதுக்குள்ள அவங்க வந்துடுவாங்க"  

 

"பார்த்து பழகின முகம் தானே" மீரா 

 

கழுவிய முகத்திற்கு சின்னதாக நெற்றி பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள். கவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

 

சிவகாமி வந்த உடன் மீராவை பார்த்து "உன்கிட்டே எனக்கு பிடித்ததே இந்த எளிமை தான் மீரா " என்று சொல்லிகொண்டே திருஷ்டி கழித்தார்.அழகு செய்யும் ஒப்பனையில் இல்லை, பார்க்கும் கண்களில் உள்ளதோ என்றிருந்தது கவிக்கு.

 

பெண் பார்க்க என்று பெயர் தான்.மூன்று குடும்பங்களும் அப்படி சம்பிரதாயம் எல்லாம் பார்க்காமல் பேசி சிரித்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துக்கொண்டிருந்தனர். விஸ்வநாதன் அவர்கள் காதல் கதையை சுவைபட சொல்லிக்கொண்டிருந்தார்.

 

பெரியவர்கள் எல்லாம் அவர்கள் கதையை சொல்ல சின்னவர்கள் எல்லாம் "அட இது தானே நமக்குள்ளேயும் நடந்தது" என்று ஆச்சர்யப்பட்டு கொண்டனர்.

 

நண்பனின் தங்கையை காதலிக்கிறோமே?? தப்போ!! என்று மனதில் அரிதல் இருந்தாலும் சிவகாமியை பார்த்தால்  எல்லாம் மறந்து விடுமாம் சுந்தரம் சொல்ல 

 

"நான் இவரை  பார்த்த அப்பறம் தான் எங்க அண்ணனோட நண்பர் என்றே தெரியும், அதனாலே என்னால முடிவு மாத்திக்க முடியலை" அன்று இருந்த அதே அடம் பிடிக்கும் குரலில் சிவகாமி சொல்ல பிரமிப்பு தான் எல்லாருக்கும்.

 

நபீலா விஸ்வநாதனை பார்த்து காதல் கொண்ட நிமிடம் முதல் தமிழ் பயில தொடங்கிவிட்டாராம். அவர் சொல்லும் போது காதல் வலிமை புரிந்தது அங்கே எல்லாருக்கும்.

 

 பல நேரம் செய்வது எரிச்சல் கொடுத்தாலும், சில சமயம் கோபப்படுத்தினாலும் ஒன்று மட்டும் நிச்சயம் நபீலா இன்றி வாழ்கை இனிக்காது. அவள் வைத்திருக்கும் நம்பிக்கை, பாசம் இதற்காக நான் ஜெயிக்க வேண்டும்.  இந்த எண்ணம் தான் எனக்கு உந்துதல் என்று விஸ்வநாதன் நெஞ்சில் கைவைத்து சொல்ல அதன் ஆழம் புரிந்தது.

 

பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த சந்திரா வாசுதேவன் தம்பதியனர் அவர்கள் வாழ்விலும் ஒருவரை ஒருவர் பார்த்த அந்த நிமிடத்தில் சொல்ல முடியாத உணர்வு தோன்றி தான் திருமணதிற்கு சம்மதம் சொல்ல வைத்தது என்று சொன்னார்கள்.

பின்நாளில் அதைப்பற்றி  பேசி சிரித்திருக்கிறார்களாம்.

 

எவ்வளவு சண்டை, பிரச்சனைகள் வந்தாலும், கருத்து வேறுபாடுகள் என்று வந்தாலும், நொந்து போனாலும் ஒரு நூல் விடாது தொடரும் அது தான் காதல்.இவையெல்லாம் சேர்ந்து காதல் நூலை கயிறாக மாற்றும். அதன் சூட்சமம் அழமான புரிதலிலும் தற்காலிக பிரச்சனையில் துவண்டு போகாமல் கடந்து போகும் என்ற அந்த எண்ணம் தான் என்று சுந்தரம் சொல்ல கரகோஷம் எழுந்தது அந்த வீட்டின் ஹால்லில்.

 

கலகலப்பு நிறைந்த அந்த இடத்தில் ஒருவன் மட்டும் நெளிந்தும், பெரும் மூச்சு விட்டு கொண்டும் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் என்றும் இருந்தான்.அது சாக்ஷாத் நம்ம மகேந்திரன் தான். வந்ததிலிருந்து மீரா அவன் பக்கம் திரும்பவே இல்லை.அவள் அப்படி தான் என்று தெரிந்தும் எதிர்பார்ப்பு இருந்தது. அவள் கோபம் அவன் மிகவும் இரசிக்கும் ஒன்று. அவள் மிகவும் ரசித்த கோபம் நினைக்க தொடங்கினான்.

 

மூன்றாம் ஆண்டு முடித்து இன்டர்ன்ஷிப் ட்ரைனிங் என்று கிருஷ்ணாவுடன் மஹி அவர்கள் ஊருக்கு வந்தான்.மீராவிற்கு கிளம்பும் வரையில் சொல்லவே இல்லை. அதற்க்கு பின் அவன் சொல்லவில்லை என்று கோபித்துகொண்டாள்.

 

கிருஷ்ணாவின் அறையில் ஜன்னலில் இருந்து பார்த்தால் மீராவின் வீட்டின் பின்புறம் தெரியும். அவர்கள் வீடு பின்னுக்கு பின் இருந்தது. அந்த காலையில் அவள் அங்கே சின்னதான நாய்க்குட்டியுடன் விளையாடிகொண்டிருந்தாள் சத்தம் போட்டு, அந்த சின்ன நாய் குரலை உயர்த்தி குரைத்து கொண்டு. அவளை துரத்தி கொண்டும். மனிதனுடன் பேசுவது போல் பேசிக்கொண்டிருந்தாள். ஆனால் அதையும் "டா"போட்டு பேசினாள். அவள் மரியாதை இல்லாமல் பேசும் இருவர் என்றால் கிருஷ்ணாவும், அந்த நாய்குட்டியும் தான். 

 

அந்த காலை பொழுது, மீரா அவள் தொல தொலவென்று ஒரு பான்ட் மேல் சட்டையிலும் உற்சாகமாய், அழகாய், சுற்றி மரங்கள், குருவிகள் சத்தம், ரம்மியமாக இருந்தது. 

 

"மிக்கி ஷட் அப்" என்று கிருஷ்ணா முடிந்த அளவு அறையில் இருந்தே கத்தினான் அந்த நாய் அமைதி ஆகி இவன் நின்றிருந்த ஜன்னல் பக்கம் திரும்பி காட்டியது. உடனே மீரா அங்கிருந்து 

"டேய் சோம்பேறி" என்று கத்தினாள். கூட சேர்ந்து அதுவும் குலைத்தது. கீழே அவன் அம்மாவும் "பேட்டு " என்று கத்தினார்கள்.

எழும் போதே "ராங்கி, ராட்சசி கலையிலே வேலை ஆரம்பிச்சிட்டா" என்று அவளை திட்டிக்கொண்டே எழுந்தான் கிருஷ்ணா.

 

அன்று மாலை அவள் வீட்டுக்கு அவர்கள் சென்றபோது அவள் இல்லை. கிருஷ்ணா, "டேய் மச்சி இது கேக் வாசனை தானே என்று கிட்சென் பக்கம் ஓடினான்"

 

அங்கே கேக் இருந்தது சின்ன ஓவன் பாத்திரத்தில் சூடாக. கிருஷ்ணா அதை தொட்டு பார்த்துகொண்டிருக்க சந்திரா அங்கே வந்து "மீரா கேக் செய்து கொண்டு இருக்கிறாள், நீங்கள் சாப்பிட்டு தான் போகனும்"

 

கிருஷ்ணா "எங்க பரலோகத்திற்கா??" என்றான் கிண்டலாக 

வாசனை பேக்கரி பக்கம் கடக்கையில் வருமே அப்படி இருந்தது. காலில் ஏதோ புறண்டுவது போல் தோன்ற கீழே குனிந்தால் பழுப்பு நிறத்தில் அந்த நாய்குட்டி" நீ யார்? என்பது போல் பார்த்தது.

 

"டேய் மிக்கி போடா அந்த பக்கம்" என்று கிருஷ்ணா பேச அது வாலாட்டிக்கொண்டே அவனை ஆசையாக பார்த்தது.அவன் அதை மதிக்கவே இல்லை.

 

தூக்கப்போன மஹியிடம் "மச்சி அதை தூக்காதே,அதற்கு பிடிக்காது " என்றும் அவன் கட்டை விரலை காட்டி "இது கடிச்சது தான் " என்றான். பின் அதைப்பற்றி விவரம் சொன்னான்.

 

பார்க்க நான்கு மாத குட்டி போல் இருந்த அதற்க்கு வயது நாளு வருடமாம். அது அயர்லேன்டில் பிரபலமான வகையான டேர்ரியர் வகை நாயாம்.

 

பின்பக்கமிருந்து சட்டென அவன் வலது புறம் கை வந்து எதிர்பார்க்காத நேரத்தில் தள்ளவும் பயந்து திரும்பி பார்த்தான் மீரா நின்றிருந்தாள். மிக்கி அவள் முகத்தை பார்த்து வாலாட்டிக்கொண்டு நின்றது. மீரா அவர்களிடம் பேசிக்கொண்டே கேக் மீது கிரீம் தடவி அழகாய் செய்து முடித்தாள். எதையோ மிக்சியில் அரைத்து கொடுத்தாள். குடித்த அந்த சுவை நினைக்கையில் நாக்கில் ஒட்டியதுப் போல் இருந்தது மஹிக்கு.

 

அங்கே இருந்த ஐந்து நாட்களும் சொர்க்கத்தில் இருந்தது போல் இருந்தது. மீராவிடம் கை வித்தைகள் நிறைய இருந்தது. செராமிக் பொம்மை செய்வது, கிளாஸ் பைன்டிங், ஆரிகமி என்று. அவள் வீட்டில் அவளுக்கும் அவள் அண்ணனுக்கும் ஒரே அறை. அந்த அறை நிறைய சின்ன சின்ன பொம்மைகள். ஒன்று கையில் தம்புராவுடன் அழகிய மீரா சிலை பாதியில் விட்டிருந்தாள்.வண்ணம் பூசாமல் மஹி அது ஈர்க்கவே அதை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் சென்னைக்கு. காதலில் களவும் கொலையும் தவறில்லையாம். அவனக்குள் அவனே புத்திமதியும் சொல்லிக்கொண்டான்.

 

சிரித்து கொண்டே இருந்தவனை நரேன் உலுக்கி "டேய் எந்த உலகத்தில் இருக்க?? மீரா தனியாக பேசனுமாம் போ" என்றான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.