(Reading time: 21 - 42 minutes)

06. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

கையில் ரோஜாவுடன் தன்னை நோக்கி வந்த அவள் நிச்சயம் தேவதையாகத்தான் இருக்க வேண்டும், இல்லையென்றால் அவள் முகமும்,அவள் சொன்ன வார்த்தைகளும் ஏன் தன் மனதை மயிலிறகாய் வருட வேன்டும். அவள் அருகாமையில், அவள் ஸ்பரிசத்தில் தன் வேதனை எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் ஏன் மறைந்து போக வேண்டும்'

 என்று பலவாறு எண்ணங்கள் மனதில் ஓட ,எங்கே தான் கண்ணிமைத்தால் கூட மறைந்து விடுவாளோ என பயந்தவனாய் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்தபடி இருந்தான், ஆனால் அவன் கைகள் மட்டும், அவள் கைகளை தன் கண்ணத்தில் மேலும் மேலும் அழுத்திக் கொண்டே இருந்தது.


நந்துவின் நிலைமையோ விவரிக்க முடியாதபடி இருந்தது. கைகள் இழுக்கப்பட்டதும் முதலில் அதிர்ந்தவள், அவன் முகம் பார்க்க, அவன் பார்வை அவளை செயலிழக்கச் செய்தது. அவனின் இளம்சூடான கண்ணத்தில் தன் உள்ளங்கைகள் பட்டதும், உடலில் மின்சாரம் பாய்ந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது.

இது தவறு, அவனிடம் இருந்து விலகு என்ற அறிவின் கட்டளையை மனது கேட்கும் நிலையில் இல்லை.  ஒவ்வொரு அழுத்தத்திற்கும் மேலே சஞ்சரிக்க தொடங்கியவளை, கைகளில் பிடித்திருந்த ரோஜாவின் முள் குத்தி நிகழ்வுக்கு கொண்டுவந்தது. முள் கையில் குத்திய வேகத்தில்,

" ஸ்...அப்பா..." என்று நந்து கைகளை உதற, உதறிய வேகத்தில் ரோஜா அருகில் இருந்த மரத்தின் மீது மோதி ஒன்றிரண்டு இதழ்களை உதிர்த்து விட்டு கீழே விழுந்தது.

சட்டென்று சுயநினைவடைந்த சந்துரு, நந்துவின் கைகளை தீயை தொட்டவன் போல் உதறித் தள்ளி, வேகமாக இரண்டடி பின்னால் சென்றான். அவன் உதறிய வேகத்தில் பின்னால் விழப் போனவள் சமாளித்து சந்துருவை நிமிர்ந்து பார்க்க, அவன் முகம் கோபம்,குழப்பம், அதிர்ச்சி என்று கலவையாக இருந்தது. முகத்தை அழுந்தத் துடைத்து, கைகளால் முடியை அழுந்தக் கோதி தன்னை சமநிலைப்படுத்த முயன்றுவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் கண்களில் என்ன கண்டானோ, தலையை குலுக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக அகன்றான்.

போகும் வழியில் லேபின் உள்ளே இருந்த இரண்டு சீனியர்ஸையும் பார்த்து முகம் மாறியவன், திரும்பி நந்துவைப் பார்த்துவிட்டு இன்னும் வேகமாய் நடந்தான். காரிடரின் வாசலில் அதிர்ந்து நின்ற கவினை கூட அவன் கவனிக்கவில்லை

.
நின்ற இடத்திலே சிலைபோல நின்றிருந்த நந்துவைப் பார்த்து அவளிடம் சென்ற கவின்,

" நந்து... நந்து..." என்று அழைக்க அவளிடம் பதிலில்லாமல் போகவும் அவள் தோளை பலமாகத்தட்டி,

" நந்து இங்க பாரு..." என்றான் அதட்டலாக,


" ............." மலங்க மலங்க விழித்தவளைப் பார்த்தவன்,


" நீ ஹாஸ்டலுக்கும் போ... நான் ஆருகிட்ட சொல்லிக்கிறேன் " என்றான்.
என்ன புரிந்ததோ தெரியவில்லை, அவனிடம் தலையை ஆட்டியவள், எப்படியோ தன் ரூமை சென்றடைந்தாள்.

யோசனையுடன் மெதுவாக தங்களை நோக்கி வந்த கவினைப் பார்த்து,


" என்னடா.. நந்து போய் ரொம்ப நேரம் ஆச்சே ...என்னாச்சுன்னு பாத்துட்டு வான்னு சொன்னா...நீ போய் ஒருமணி நேரம் கழிச்சு வர்ற..?" என்று அனு கேட்க,
நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், திரும்ப தன்னுள்ளே மூழ்க, அவனை வித்தியாசமாய் பார்த்தவர்கள்,

" என்னடா...பேயரஞ்சவன் மாதிரி நிக்கற...என்னாச்சுன்னு சொல்லுடா..."  செல்வா கேட்க,

" என்னாச்சு கவின்?..நந்து எங்க?...சீனியர்ஸ் ரொம்ப ராக் பண்ணிட்டாங்களா... ?" ஆரு பயத்துடன்  கேட்க,

" ம்..என்னாச்சு..கிரிக்கெட் ஆடுனோம், காட்ச் பிடிக்க ட்ரை பண்ணேன், மெடுல்லா ஆப்லாங்கேட்டா (medulla oblangata ) அடிபட்டிருச்சு...சும்மா என்னாச்சு, என்னாச்சுன்னு..?..மனுசன் ஒரு நிமிஷம் அமைதியா இருக்கக் கூடாதே...நந்துக்கு தலை வலிக்குதாம்,ஹாஸ்டலுக்கு போறேன்னு உங்ககிட்ட சொல்ல சொன்னா...போதுமா.." என்று வழக்கமில்லாத வழக்கமாக கவின் பொரிந்து தள்ளவும், அந்த இடம் சட்டென்று அமைதியானது.

" நான் போய் நந்துவ பார்த்துட்டு வரேன்..." என்று கிளம்பிய ஆருவை

"வேண்டாம்" என வேகமாகத் தடுத்தவன்,

"அவளே கொஞ்ச நேரத்தில வரேன்னு சொன்னா..."என்று சொன்னவனின் மனமோ குழப்பமாக இருந்தது. சற்று முன்பு தான் பார்த்ததை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடிவில்லை. என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடியாமல் குழம்பியவன், எப்படியும் சந்துரு சாரிடம் இதைப் பற்றி பேசிவிட வேண்டும், அதன் பிறகு ஆருவிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டான். பிறகு ஒருவாறு மனத் தெளிவு பெறவும்,

"என்னாச்சு...எல்லாரும் ஏன் இப்படி முழிக்கிறீங்க..?" என்றான்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு,
"டேய்...நிஜமாவே அந்த லேப்ல பேய்..கீய் இருக்கோ...?ஆப்லாங்கேட்டா கலங்கினவன் மாதிரியே பேசுறானே..." அருண் யோசனையுடன் தாடையை தடவ..

திரும்பவும் " என்னாச்..." என்று ஆரம்பிக்கப் போன கவினின் வாயை மூடிய தேவ்,
" மாப்பு...உன் போங்கு ஆட்டத்த நிறுத்து, இல்ல..." என்று கடுப்பாகினான்.

" ஹி..ஹி..கண்டுபிடிச்சுட்டியா மாப்ள...க.க.போ!!!..விடு மாப்ள இதுல்லாம் ஒரு மேட்டரா...! இப்போ பார்ட்டில எப்டி கலக்கலாம்னு சொல்லு..?" என்று பேச்சை மாற்ற, மற்றவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.
   

சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பிப்பதால் ஆடிட்டோரியத்திற்கு வருமாரு அனௌன்ஸ்மென்ட் கேட்கவும், எல்லோரும் ஆர்வத்துடன் அங்கு சென்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக ஜூஸ் கொடுத்து, பிறகு ஒரு சின்ன வரவேற்புரை கொடுத்தார்கள். பிறகு ஸ்டேஜில் யார் வேண்டுமானாலும் பெர்ஃபார்ம் பண்ணலாம் என்றவுடன், முதலாவதாக ஏறியது..அவங்களே தான், கவின் அன் கோ.

 (அதுபாத்தீங்கன்னா friends, கவின் & கோ, கவின் & கோ அடிக்கடி சொல்றாளே.. யாரதுன்னு நீங்க கேட்கலாம்.. கேக்காட்டியும் நான் சொல்வேனாக்கும். கவின், அருண், தேவ் அப்புறம் செல்வா. இது நாலுமே ஒரே குட்டைல ஊரின மட்டைங்க தான். அதுனால college சேர்ந்த அடுத்த நாளே மாப்பு, மச்சான்னு ஒட்டிக்கிச்சுங்க. இவங்கள பார்த்து சீனியர்ஸே தலை தெரிக்க ஒடுராங்கன்னா பார்த்துக்குங்க..)

மைக்கையெல்லாம் தட்டி டெஸ்ட் செய்துவிட்டு, அவர்களுக்குள் serious-ஆக கூடிப் பேசிவிட்டு, பாட ரெடியானர்கள். ( எதப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணுவாங்களாம்..அடங்கவே மாட்டிங்களாடா நீங்க....)

"ஆத்தாடி பாவட காத்தாட.." கவின் பாட ஆரம்பிக்க.

"நெஞ்சம் கூத்தாட..

குளிக்குது ரோசா நாத்து..

ஆ டச்சு..ஆ டச்சு....." என்று மற்றவர்கள் அபிநயம் பிடித்துக்கொண்டே கோரஸ் பாட, எங்கிருந்தோ ஒரு ஷாலை வாங்கி, அதை அணிந்து தேவ் குளிப்பதுபோல் நடிக்க, அவனை சுற்றி கும்மியடிததுக்கொண்டே அவர்கள் பாட, தேவ் பாரதிராஜா பட heroine போல வெட்கப்பட, அவர்கள் செய்கையில் ஹாலே சிரிப்பலையில் அதிர்ந்தது. அடுத்த பாட்டாக, வை

“நிலா அது வானத்து மேலே..” வை பாட, குயிலி கூட தேவ் அளவிற்கு ஆடியிருக்க மாட்டார். அடுத்ததாக “கட்டிப்பிடி கட்டிப்பிடி டா “ வை பாட ஆரம்பிக்க, சீனியர்ஸ் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கீழே போட்டார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.