(Reading time: 21 - 41 minutes)

12. நினைத்தாலே  இனிக்கும்... - Prishan

ninaithale Inikkum

"ங்க என்ன நடக்குது?" கேட்டபடி உள்ளே நுழைந்த ஜெனியின் தந்தை, அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்தார். ஆணும் பெண்ணுமாய் நெருக்கமாய் நிற்கும் அவர்களைக் கண்டவுடன் அவர் கண்கள் கோபத்தில் மின்னியது. ஜெனியை அழைத்து தனக்கு முன்னால் நிறுத்தியவர்.

" நீ இப்போ ‘சர்ச்’லைல இருக்கனும். இங்க என்ன பண்ற ?" என்று அவர் கேட்ட விதத்திலேயே ஜெனிக்கு பயம் இரட்டிப்பானது. பொதுவாக மிதமிஞ்சிய கோபத்தில் தான் அவர் மிகவும் நிதானமாக பேசுவார்.

"’ சர்ச்’க்கு போய்ட்டு வந்துட்டேன் டாடி..." என்றாள் எழும்பாத குரலில்.

" இங்க ஏன் வந்த ?"

" சீனியர்க்கு ஆக்ஸிடென்ட், அதான்..." மென்றுவிழுங்கியவளைப் பார்த்து,

" போய் காரில் உட்கார்.." என்று சொன்னவுடன் , யாரையைம் திரும்பிக் கூட பார்க்காமல் வெளியே சென்று விட்டாள்.
அங்கிருந்த அனைவரையும் கூர்மையாக பார்த்தவர்,

" நல்லா கவனிங்க, உங்களை எல்லாம் படிக்கிறதுக்காக மட்டும் தான் காலேஜ்க்கு அனுப்புறாங்க. அதுனால அந்த வேலையை மட்டும் ஒழுங்கா செஞ்சா போதும். இப்பவும் என் பொண்ணுமேலயும் தப்பு இருக்கிறதால தான் நான் இவ்வளோ பொறுமையா பேசுறேன். ஜெனியை உங்களோட சேர்ந்து பார்ப்பது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும். ஐ நெவர் அப்ரிஸியேட் தீஸ் சார்ட் ஆஃப் திங்க்ஸ். மைன்ட் இட்...!!" என்று அடக்கிய கோபத்துடன் சொன்னவர், போகிற போக்கில் கதிரிடம்,

" டேக் கேர்..." என்றுவிட்டுப் போனார். கதவின் அருகில் சென்றவர் திரும்பி கவினைப் பார்த்து,

" என் பொண்ண என்கிட்ட பொய் சொல்ல வச்சிட்ட..." என்று வெறுப்பு மேலிட சொன்னவர், கோபமாக வெளியேறினார். அவர் மறைந்ததும் அங்கு ஒரே அமைதி நிலவியது. யார் முதலில் பேசுவது என்று தெரியாமல் அனைவரும் மௌனமாக இருந்தனர்.

கவலையுடன் இருந்த கவினை அனுகிய சந்துரு,அவன் தோளில் கைப்போட்டபடி,


" சியர் அப் மேன்...அப்பான்னா அப்படிதான் இருப்பார்..நாங்கள்ளாம் இருக்கோம்ல...தைரியமா இரு..." என்றான்.
சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டவன்,


" தாங்க்ஸ் சார். ஆனா என் கவல அதில்ல சார், இவ்ளோ கோபத்த ஜெனி எப்படி தாங்கிக்க போறான்னுதான் கவலையா இருக்கு..!!" என்றான்

" கவலபடாதடா..தோளுக்கு மேல் வளர்ந்த பொண்ண திட்டவோ அடிக்கவோ கூடாதுன்னு அவங்க அப்பா அடிக்கடி சொல்வாருன்னு ஜெனி சொல்லிருக்கா..அதுனால்ல கண்டிப்பா ஹார்ஷா நடந்துக்க மாட்டார் " என்றாள் அனு நண்பனின் கவலைபடிந்த முகத்தை காண சகிக்காமல்.

சந்துருவும், " ஒரு அப்பாவா அவரோட கோபம் நியாயம்தான... நீங்க தான் பக்குவமா பேசி அவர ஒத்துக்க வைக்கனும்.." என்று  கவினுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அனுவின் தந்தையும், கதிரின் தாயாரும் வந்துவிட பேச்சை அத்தோடு முடித்துக் கொண்டனர்.

ல்லோரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது, சந்துரு மெதுவாக நந்துவின் அருகில் வந்து, அவள் கையை பற்றி யாரும் கவனிக்காத வண்ணம் வெளியே அழைத்துச் சென்றான். வாராண்டாவின் அந்தக் கடைசியில் யாரும் இல்லாத இடமாகப் பார்த்து அவளை அமர வைத்தவன், தானும் அருகில் இருந்த ஜன்னல் திண்டின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளாலும் முகத்தை தாங்கியபடி, அவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ச்சியாக இரண்டு நொடிக்கு மேல் ஈர்க்கும் அவன் விழியை பார்க்க முடியாத நந்து, தலையைக் குனிந்து கொண்டாள். சில நிமிடங்களுக்கு பிறகு நிமிர்ந்து பார்த்தவள், அவன் அப்பொழுதும் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு,

“என்ன...?” என்று தடுமாறியபடி கேட்டாள்,

“ம்.....என்ன அர்த்தம்னு யோசிச்சுட்டு இருக்கேன்...” என்றான்,

“ எதுக்கு...?”

அவள் அருகில் அமர்ந்துக் கொண்டவன்,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, என்னோட தேவதை என் பக்கத்துல வந்து , இப்பிடி எம்மேல நெருக்கமா சாஞ்சிட்டு நின்னாள அதுக்கு...!!! “ என்று அவள் நின்றது போல செய்து காட்டவும், சாயும் போது தெரியாத நெருக்கம், அவன் வார்த்தைகளில் கேட்கும் போது அதிகமாய் தோன்றி அவளை சிவக்கச் செய்தது. அவள் சிவந்து போனதைப் பார்த்து கிறக்கமடைந்தவன், அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு,

“ சொல்லு, அதுக்கு அர்த்தம், நீ முழுசா என்னுடையவள் ஆகிட்டன்னு தான்ன.? ” என்றான் அவள் கண்களையே ஒரு எதிர்பார்ப்போடு பார்த்துக்கொண்டு.

நந்து அவன் தோள்களில் சாய்ந்தது என்னவோ, சந்துரு பட்ட வேதனையை கதிர் கூறும் பொழுது அதை தாங்கிக் கொள்ள முடியாமல் போனதால்தான். ஆனால் அதை அவனிடம் கூறி மறுபடியும் அந்த சோகத்தை கிளற விரும்பாமல், அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று  யோசித்தவாறே தன் கைகளை உருவிக்கொள்ள முயன்றாள். அந்த முயற்சியைத் தடுத்தவன், ஒற்றை விரலால் அவள் நாடியை பிடித்து நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தவாறே,

“ என்னப் பாரு, நீ பதில் சொல்ல மாட்டேன்னு தெரியும்....ஆனா நீ சொல்லாத ரகசியத்தை எல்லாம் உன்னோட இந்த கண்கள் காட்டிக் கொடுத்துடும். உன்னோட மனச அப்படியே எங்கிட்ட காட்டிடும். அதுனால அத எங்கிட்ட இருந்து மறைக்காத....” என்றான். மேலும் தொடர்ந்து,

“ இது ஏதோ விட்டகொற தொட்டகொற மாதிரி, காலங்காலமா நமக்குள்ள இருக்குற விஷயம் மாதிரி தெரியுது.. நீ முதல்முதல்ல எங்கிட்ட சொன்ன வார்த்தையே என்ன அடியோட சாய்ச்சிருச்சு!!!, ஆனா அது என்ன வார்த்தைனு கூட ஞாபகமில்ல....இப்பிடி நிறைய விஷயம் புரிஞ்சும் புரியாமையும் இருக்கு....ஒன்னே ஒன்னத் தவிர..!!!!.” என்றான். கேள்வியாய் நோக்கியவளிடம்,

“உன்னைத் தவிர...? “ என்றவுடன், புன்னகைத்தவளைப் பார்த்து,

“ நீ முழுதா எனக்கே எனக்குன்னு சொந்தமாகனும்....இருப்பியா பேபி...?” என்று தீவிரத்துடன் கேட்டவனை முதல் முறையாக நிமிர்ந்து கண்ணோடு பார்த்தவளின் கண்களில் தெளிவு இருந்தது.

“ என் மனசு முழுதும் உங்களுக்கு தான்...ஆனா...? ” என்றபடி அவன் கைகளை எடுத்து அதில் தன் கைகளை வைத்தபடி,

“ இப்படி உங்க கைல என்ன எங்கப்பா எப்போ தாரைவார்த்துக் கொடுகிறாரோ, அப்போ உங்களுக்கு நான் முழுசா சொந்தம் ஆயிடுவேன் “ என்றாள். சொன்னவளின் முகம் மாற

“ உங்க அம்மா அப்பாக்கு என்ன பிடிக்குமா...? “ என்றாள்,

“ அம்மா உன்ன ஏற்கனவே பாத்துட்டாங்க... நீ அவங்ககிட்ட பேசிப்பாரு அப்றம் தெரியும்...” என்றான்.

“அப்போ உங்க வீட்டில...?”

“ எனக்கு பிடிச்சிருந்தா அப்பாக்கும் கண்டிப்பா பிடிக்கும்..” என்றாள் உறுதியுடன். மற்றதெல்லாவற்றையும் விட்டுவிட்டு,

“மேடம், இப்பொ என்ன சொன்னிங்க...? ” என்றான் கர்வப் புன்னகையுடன்,

“ எனக்குப் பிடிசிருந்தா......” என்று சொல்லிகொண்டு போனவள் அப்போதுதான் அவன் கேட்பதின் அர்த்தம் புரிய, வெட்கம் மேலிட எழுந்து ஓடப்போனவளின் கைகளை எட்டிப் பிடித்தவன்,

“ பிடிச்சிருக்குன்னு இப்படியா சொல்லுவாங்க...கிட்ட வா எப்படி சொல்லனுன்னு சொல்லித்தர்றேன்...” அருகில் இழுக்க, அவன் கைகளை உதறியபடி ரூமை நோக்கி ஓடிபோனாள். அதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவன், எழுந்து தானும் உள்ளே சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.