(Reading time: 31 - 62 minutes)

செட்டிநாடு மருத்துவனை, சென்னை

தீவிர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்தியாவை பரிசோதித்து விட்டு வந்த பெண் மருத்துவரிடம், “டாக்டர்....” என்றழைத்தான் கார்த்திக் விழிகளில் பரிதவிப்புடன்....

அதை உணர்ந்த அவர், “நீங்க பேஷன்ட்க்கு என்ன வேணும்?”

“கட்டிக்க போறவன் டாக்டர்... சந்தியாவிற்கு உயிருக்கு ஆபத்து இல்லையே” மெல்லிய குரலில் கேட்கும் தொனி அவர் இல்லை என்று சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பிரதிபலித்தது...

அவரும் அதற்கு ஏற்றார்போல் மறுப்பாக தலையாட்டி விட்டு, “ஸ்கேன், எக்ஸ் ரே எல்லாம் எடுத்து பாத்துட்டோம்... தோள் பட்டை எலும்பு முறிந்து இருக்குது. மத்த படி உயிருக்கு ஆபத்து இல்லை... அவங்க மயக்க மருந்தோட தாக்கத்தில் இருக்கிறாங்க.... முழிக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஆகலாம்.....அப்ப்ப்பு....றம்....” என யோசனையுடனே இழுத்த படி கண்களை சுற்றிலும் சுழல விட்ட படி,

“அவங்க அம்மா அப்பா யாரும் இல்லையா?” என கேட்க,

“ஏன் ஏதாவது பிரச்சனையா ..”, கேட்டுக் கொண்டே எம்.எஸ். அவர் அருகில் வந்தார்... அவரை கேள்வியோடு பார்த்த மருத்தவரிடம் தன்னை காவல்துறை அதிகாரி என அறிமுகப் படுத்த, அவரை தனியாக அழைத்து,

“அவங்க மேல இருக்கிற காயங்கள்  மயக்கத்திலே அவங்களை கற்பழிக்க  முயற்சி நடந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.... அது சம்மந்தமா தடயங்கள், பரிசோதனை எதுவும் எடுக்க வேண்டியிருக்குமா? அவங்க மயக்கத்தில் இருப்பதால் ஒப்புதல் கேட்க முடியலை.... நீங்க எதுவும் கேஸ் பதிவு செய்வீங்கன்னா அதெல்லாம் செய்ய வேண்டியிருக்கும்..” என்றார் அவர்.

அவர் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட எம். எஸ். கால அவகாசம் கேட்டு விட்டு கார்த்திக்கிடம் பேசினார். அதைக் கேட்ட கார்த்திக்கின் நெஞ்சம் தவித்தது...... அவளை கசக்க துடித்த கயவர்களை கொன்று  போட மனது துடித்தது! நடந்தது எல்லாம் அவளுக்கு தெரிந்தால் வருந்துவாளே என அலைமோதியது .....

நேராக மருத்துவரின் அறை நோக்கி விரைந்தான் கார்த்திக்.

“டாக்டர் நீங்க சந்தியாவிற்கு ட்ரீட்மெண்ட் பார்த்தா போதும்... அவ நல்லா குணமாகி வரணும்... மற்ற படி எது நடந்து இருந்தாலும் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்.... முக்கியமா சந்தியாவிற்கு!” என்றான் உறுதியான குரலில். அவன் பேச்சு மருத்துவருக்கு அவன் மீது மரியாதையை உண்டாக்கியது. குரலில் உறுதியுடன் இருந்தவனின் முகத்தில்  கவலை அப்பி கிடக்க, அதை கவனித்தவர்,

“அவங்க மேல உள்ள காயங்கள் அப்படி ஒரு முயற்சி நடந்ததை காண்பிக்கிறது. ஆனா, நல்ல வேளைக்கு பெரிதா எதுவும் நடக்கிறதுக்கு முன்னாடியே விபத்து நடந்து விட்டது. விபத்திலும் காலர் போன் ப்ராக்ச்சர் தான். அதனால நீங்க பயப்படத் தேவையில்லை. நாங்க நல்லா சிகிட்சை அளிக்கிறோம். அவங்க சீக்கிரம் குணமாகி விடுவாங்க. தைரியமாக இருங்க. ” என்றார் ஆறுதலாக.

மருத்துவரிடம் பேசி விட்டு வரும் பொழுது  கார்த்திக்கை அழைத்தான் நிரஞ்சன். சந்தியா கிடைத்து விட்டதையும், விபத்தில் கை அடி பட்டு இருப்பதையும் சுருக்கமாக சொன்ன கார்த்திக்,  இது பற்றி பெரிதாக மதுவிடம் காட்டிக் கொள்ள வேண்டாமென்றும் இரவு சற்று அவளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு நிரஞ்சனிடம் அறிவுறுத்தினான்.  சந்தியா கிடைத்து விட்டாள் என அறிந்து நிம்மதியடைந்த மது அவளை உடனே பார்க்க வேண்டும் என்று தவிக்க, நிரஞ்சன் அடுத்த நாள் காலை எழுந்ததும் அழைத்து செல்வதாக உறுதியளித்த பின் சமாதானமடைந்தாள்.

ந்தியா கடத்தப்பட்டதில் அதிர்ச்சி அடைந்தது மது மட்டுமல்ல கார்த்திக் பாட்டி, தாத்தாவும் தான்... வீட்டின் பின்புறம்  கடல் காற்றை வாங்கிய படி பாட்டி, தாத்தாவுடன் மதுவும் நிருவும் விடிய விடிய  பேசிக் கொண்டிருந்தனர். பாட்டி மடியிலே தூங்கி போனாள் மது. அவளை அள்ளிக் கொண்டு பாட்டியின் படுக்கையில் நிரு கிடத்த, அவள் அருகில் படுத்துக் கொண்டார் சுலோ பாட்டி.

சந்தியாவிற்கு விழிப்பு வர காத்திருந்த நேரத்தில், அன்று காலை வெளிநாடு கிளம்பிய  மாமாவை இது விஷயமாக தொந்தரவு செய்யவா என யோசித்த கார்த்திக்கிடம் வந்த எம். எஸ்., “நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. நானே பார்த்து கொள்கிறேன். இப்போதைக்கு கடத்தல்ன்னு கேஸ் பதிய சொல்லியிருக்கேன். அப்படியே இருக்கட்டும்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவருக்கு அழைப்பு வர பேசி விட்டு, ”பச்சை அரசு மருத்தவமனையில் செத்துட்டானாம்... வாக்குமூலம் வாங்கியிருக்காங்க.... நான் போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடுறேன்....” என கார்த்திக்கிடம் சொல்லி விட்டு கிளம்பிச் சென்றார்.

ஒருத்தன் செத்துட்டான்.... இன்னும் ஒருத்தன் இருக்கானே... பாண்டியன் மீது கார்த்திக்கிற்கு கோபம் மூண்டது.... “முதல்ல இவ கண் முழிக்கட்டும்...” என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த பொழுதே

சந்தியா இருந்த அறையிலிருந்து வெளிப்பட்ட செவிலி, “பேஷன்ட் முழித்து விட்டாங்க” என சேதி சொல்ல, விழுந்தடித்து ஓடினர் கார்த்திக்கும், சக்தியும். மயக்கத்தில் இன்னும் முழுமையாக வெளிவராமல் மெதுவாக இமைகளை திறந்தவள், “டவுசரை காப்பாத்தணும்” வீங்கிய உதடுகள் வழியே சிரமத்துடன் வார்த்தைகள் பயணித்தது....

 அவள் அருகே அமர்ந்து அவள் முடியை கோதிய படி, “சரி...காப்பாத்தலாம்...” என்றான் கார்த்திக் மென்மையாக.... அவன் பேசியதும் மூளையை மேகம் போல மறைத்திருந்த எண்ணங்கள் விலக, சிந்தனை தெளிய ஆரம்பிக்க  அவளது கரு விழிகள் குழப்பமாய் அவளிருந்த இடத்தை சுற்றியது.....

“நான் யாரு? நான் எங்க இருக்கேன்ன்னு  கேக்கணும். இது தான் பொதுவா எல்லாரும் மயக்கம் தெளியறப்போ கேப்பாங்க”, என்றான் கார்த்திக் சிரித்துக் கொண்டே....

“பிசாசு....மயக்கத்திலயும் அந்த டவுசரை நினைக்கிற? உனக்கு கார்த்திக் லவ்வரா ? டவுசர் லவ்வரா? சந்தேகமா இருக்கு” என்றாள் சக்தி போலி கோபத்துடன்....

இருவரும் மனதிலிருந்த வருத்தத்தை  அவளிடம் மறைத்தனர்....

“சக்கு மக்கு.... நான் எப்போ சொன்னேன்” கோபப் பட்டு கேட்க முயன்றவளை வீங்கிய உதடுகள் வலி உண்டாக்க சிரமப்பட்டாள்....

”அவங்களை பேச விடாதீங்க” என்றவாறு உள்ளே நுழைந்த செவிலியப் பெண், “டவுசர்ன்னா பேரா....இவங்க டவுசரை காப்பாத்தணும்” அப்பப்போ உளறிகிட்டே இருந்தாங்க...அதைக் கேட்டு டாக்டருக்கே சிரிப்பு வந்துடுச்சு” என்றாள் அவள்.

அவள் சொல்வதைக் கேட்டதும் சந்தியா விழித்தாள்...”மாமாக்கு என்ன ஆச்சு?” விழிகளில் கேள்வியை வைத்தாள் கார்த்திக்கிடம்.

விழி வழி வரும் கேள்வியைப் புரிந்தவனுக்கு மற்றொரு கேள்வி எழுந்தது! “இவளை கடத்திய பொழுது கூட முகத்தை பார்க்கவில்லையா” என்று....அதுவும் ஒரு வகையில் நல்லது தான் என்று எண்ணிக் கொண்டே, அவளிடம் எதையும் நினைவு படுத்த விரும்பாமல் பேச்சை திசை திருப்ப எண்ணி.....

“வள்ளிக்கண்ணு.. உன் மொக்கைக்கு ரெண்டு நாள் லீவ் விட்டுடு... ஆக்சிடென்ட்ல காலர் போன் உடைந்திருக்கு....வலி இருக்கும்...உன்னை நீயே சிரமப்படுத்திக்காத... உனக்கு இப்பொழுது ஓய்வு தேவை” என்றான் நிதானமான குரலில்.

அவன் சொன்னதைப் போலே தோள் பட்டை வலி பின்னி  எடுக்க, மனம் ஏனோ தாய் மடியை தேடியது..அம்மாவின் பரிவு குரல் அத்தனை வலியையும் தூக்கி போய்விடும் என்று எண்ணி......”அம்மா...” என்றாள் மனதை மறைக்காமல்....

“அம்மாவை வர சொல்லணுமா?”, தணிந்த குரலில் கேட்டான் கார்த்திக்.

“ம்ம்ம்” என்று தலையாட்டியவள், பின், தாயின் உடல்நிலையை எண்ணி,  “ப்ச்...ஊகூம்”, மறுப்பாக தலையாட்டினாள்....

அவளின் சோர்ந்த முகத்தை பார்த்தவன் மனது கனக்க, அவளது கரத்தை வருடிய படி, குனிந்து நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதிக்க, “பழனிப்பன் இனாம கொடுக்கிறானே”, என விழிகளால் சிரித்தாள்....

அதைக் கண்டு புன்முறுவலுடன் நிமிர்ந்தவன் ”வள்ளிக்கண்ணுக்கு இனி இந்த பழனியப்பன் தான் எல்லாமே!” என அவன் கரம் அவள் கரத்தின் மீது அழுத்தி உணர்த்தியது.

போலீஸ் காவலில் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட பாண்டியனை, சேதி அறிந்ததும் பார்க்க ஓடி வந்தான் அவன் நண்பன் கண்ணன்... அபாய கட்டத்தை தாண்டி விட்டாலும் பாண்டியனுக்கு விபத்தில் இரு கண்களும் பாதிக்கப் பட்டு இருந்தது.....கண்களின் நரம்புகள் அதிக சேதமடைந்துள்ளதால் அவை சரியாகும் வரை மீண்டும் பார்வை கிடைக்குமா என உறுதியாக சொல்ல முடியாது என்று  மருத்துவர் சொல்வதைக் கேட்டு திடுக்கிட்டான்....உடனடியாக வடிவிற்கு அதை அவன் தெரிவிக்க, அவள் பதறி அடித்துக் கொண்டு அந்த இரவே  சென்னைக்கு விரைந்தாள்....

அன்றிரவு சந்தியாவின் துணைக்கு அதே அறையில் இருந்தனர் சக்தியும், கார்த்திக்கும்...

வலி தெரியாமல் தூங்குவதற்கு மருந்து செலுத்தப்பட்டது... விடிந்த பின்பு அவர்கள் வீட்டிற்கு தெரிவித்துக் கொள்ளலாம் என்று இருந்தவன், இரவில் வலியில் அடிக்கடி அனத்த அவள் கேட்டது போல லக்ஷ்மி அம்மாவை வரச் சொல்லலாம் என தன்ராஜை அழைத்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.