(Reading time: 31 - 62 minutes)

ஜூன் 3, ஞாயிற்றுக்கிழமை

பாப்ப்பா” காலை நேரம் பதற்றத்தோடு சந்தியா இருந்த அறைக்குள் வந்தார் தன்ராஜ்... அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.....

அவர் குரல் கேட்டதும் முதலில் விழித்தது  கார்த்திக். தன்ராஜைக் கண்டதும், “நைட் கை வலியில் சரியா தூங்கலை அங்கிள்... இப்போ தான் அசந்து தூங்குறா...” என்றான் சன்னமான குரலில்…. வெளியே சென்று பேசலாம் என்று குறிப்பு காட்டிய  கார்த்திக் அவரை மருத்துவமனை காண்டீனுக்கு அழைத்து சென்றான்..

“ஆன்ட்டி வரலையா அங்கிள்?”, கார்த்திக் கேட்க,

“நீங்க சொன்னதும் அவளையும் கூப்பிடலாம்னு நினைத்தேன்.....அவ பதட்டப்படுவா.....மறுபடியும் பிபி அதிகமாகி அவளுக்கும் முடியாம போச்சுன்னா இன்னும் சிக்கலாகிடும்....நான் சந்தியாவை பாத்துகிறேன் தம்பி” என்றவர் அவன் கையைப் பற்றி, “ஒவ்வொரு தடவையும் தெய்வம் மாதிரி வந்து நிக்குறீங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை தம்பி....” என்றார் நெகிழ்ச்சியுடன்....

”எனக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க?... அவ எப்பொழுதோ என்னோட மனதளவில் மனைவியாகிட்டா.... அவளை பாதுகாக்கிறது என்னோட பொறுப்பு... நிஜத்திலும் சேர்ந்து வாழறதுக்கு உங்க மருமகன்ங்கிற அங்கீகாரம் எனக்கு வேணும்... டாடி கூட இதைப் பத்தி பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றான்.

“ஆமா நேத்து சதாசிவம் சார் பேசுனாங்க. ஆனா, அந்த பாண்டியன் படுபாவிக்கு கல்யாணம் செய்து வைக்க அவசரப்பட்டது போல மறுபடியும் தப்பு செய்ய விரும்பலை... சந்தியா விருப்பத்தை நேரில் பேசி கேட்டுட்டு  முடிவு சொல்லலாம்னு நினைத்திருந்தேன்....அதுக்குள்ள....” என்று பெருமூச்சு விட்டவர், “இவளுக்கு மட்டும் ஏன் தான் மாறி மாறி ஏதாவது நடக்குதோ! இந்த விபத்து பத்தி தெளிவா நேரில் சொல்றேனீங்க..... விபத்து எப்படி நடந்தது? வண்டியை எதையும் வேகமா ஓட்டி கீழ விழுந்துட்டாளா?” என்று கேள்வி கேட்டவரிடம் என்ன சொல்வதென்று கார்த்திக் யோசனை செய்த நேரம், அவர்களை நோக்கி எம்.எஸ். வந்தார்... தன்ராஜை பார்த்ததும் சிநேகமாய் புன்னகைத்து கை குலுக்க,

“பரவாயில்லை, என்னை நியாபகம் வைத்து இருக்கீங்க....” என்றார் தன்ராஜ் வியப்பாக.

“மிலிட்டரி மேன்னா சும்மாவா? “ என எம்.எஸ் கூற தன்ராஜிற்கு பெருமையாக இருந்தது...

“சந்தியாவை பார்த்தீங்களா? அவளுக்கு லேசான அடி தான்...ஆனா பாருங்க....அவளை கடத்தின  பாண்டியனுக்கு பார்வை போச்சு...” என்று எம்.எஸ். பேசிக் கொண்டே போக அதிர்ந்தார் தன்ராஜ்...

“என்னது சந்தியாவை கடத்தினாங்களா?” என்றார் பதட்டமாக.

அவர் பதட்டத்தைக் கண்டதும் கார்த்திக் இன்னும் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்று உணர்ந்த எம். எஸ்.,

“டென்ஷனாகாதீங்க. சந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை...“ என்ற எம். எஸ். பாண்டியன் காவல்துறையினரிடம் கொடுத்து இருந்த வாக்குமூலத்தை காட்டினான். செய்யாத குற்றத்திற்கு தன்ராஜ் மூலமும், கார்த்திக்கின் மாமா மூலமும் தண்டிக்க பட்டதே வன்மத்தின் காரணமாகவும், அதன் பின் நடந்தவைகளை எல்லாம் கூறி இருந்தான்.... சந்தியாவிடம் பச்சை தவறான எண்ணத்தில் நெருங்கிய பொழுது விபத்து ஏற்பட்டது எனவும், தான் செய்த தவறை உணர்ந்து விட்டதாகவும் நடந்த சம்பவத்திற்கு தன்ராஜிடமும், சந்தியாவிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் கூறி வாக்குமூலத்தை முடித்திருந்தான்.

தைப் படித்த தன்ராஜ் மகளுக்கு வந்த ஆபத்தை நினைத்து விக்கித்து போய் நின்றார்.... பாண்டியன் மீது ஆத்திரம் மூண்டாலும் அவன் பிழைக்கு தானும் ஒரு காரணமாகி விட்டோமே குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டது.... ஆனால் கார்த்திக்கிற்கோ அவன் மீதிருந்த கோபம் சற்றும் குறையாமல், “நாங்க செய்த தப்பிறகு  சந்தியாவை பணயமாக்கிறதை நியாயப்படுத்த முடியாது.... அவன் திட்டம் மட்டும் நடந்திருந்தா.....எத்தனை பேரை பாதித்து இருக்கும்.... அவன் காலம் முழுக்க ஜெயிலில் கிடந்தாலும் என் ஆத்திரம் தீராது....” என்றான் கண்கள் சிவக்க....

அதே நேரம் கார்த்திக்கின் அலைபேசியில் சக்தி உடனடியா சந்தியா அறைக்கு வர குறுஞ்செய்தி அனுப்ப அங்கே விரைந்த கார்த்திக்கை தொடர்ந்தனர் எம்.எஸ்.ஸும், தன்ராஜூம்.

ங்கே வடிவு சந்தியாவின் கால் மாட்டில் அவளது காலைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்கும் தோரணையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்...

வடிவைக் கண்டதும் கண்களில் சினம் பொங்க, மிரட்டலாக ஆள்காட்டி விரலை நீட்டி,

“இங்க வந்து ஒப்பாரி வைக்கிற... இடத்தை காலி பண்ணு...இல்லை நடக்கிறதே வேற”, காட்டமாக கத்தினான் கார்த்திக். 

அவன் சொல்வதைக் கேட்டு திரும்பிய வடிவு அங்கே அவனுடன் தன்ராஜைக் கண்டதும் “அண்ணே...” என கதறிக் கொண்டே ஓடிப் போய் அவர் காலில் விழுந்தாள்....

“தப்பெல்லாம் என் மேல தேன்........என் அழுகையை தொடைக்கிறேன்னு புத்தியில்லாம அந்த எடுபட்ட பயபுள்ள கிட்ட போய் ரோசனை கேட்டுதுக்கான்...கெட்ட சகவாசத்துல கோவமாயி அந்த மகமாயி என் புள்ள கண்ணை பறிச்சிட்டா அண்ணே....நான் என்ன செய்ய...என் புள்ள குருடனா அலையுறத என் கண் கொண்டு பாக்க முடியலையே அண்ணே.... இனியும் உசுரோட இருக்கணுமா....” என்று உடைந்த குரலில் சொல்லிக் கொண்டே வெடித்து அழுதாள்...

குற்ற உணர்ச்சியில் இருந்த தன்ராஜ், அவள் அழுகையைக் கண்டு இரக்கப்பட்டார்... ”பெத்த தாய் புள்ளைக்கு நல்லது சொல்லி வளர்க்க வேண்டாமா... மத்தவன் விளங்காம போகணும்னு சபிச்சா உன் மகனுக்கும் அதே தான் மனசுல பதியும்... ஹும்...இதெல்லாம் உனக்கு எங்க விளங்க போகுது? ஏதாவது காரியம் ஆகணும்னா தானே காலில் விழுவ... இப்போ எதுக்கு வந்திருக்க?” என்றார் விரக்தியில் அவளை பற்றி முழுதும் அறிந்தவராக......

அதற்கு உடன் வந்த பாண்டியனின் நண்பன் கண்ணன் பதிலளித்தான்...”சார்...அவனுக்கு நல்ல ஹாஸ்பிட்டல்ல சேர்த்து உடனடியா  சிகிச்சை அளித்தா கண் பார்வை திரும்ப ஏதாவது முயற்சி செய்யலாம்.... கோர்ட், கேஸ்ஸுன்னா அதுக்கு சிரமமாகிடும்... அதான் வழக்கை வாபஸ் வாங்க கேட்டு பார்க்கலாம்னு வந்தோம்....பாண்டியன் நல்லவன் தான்....ஏதோ சின்ன வயசுல பதிந்த வன்மம்... அவன் வலியில் துடித்தப்ப அவனை காப்பாத்தணும்னு இந்த பொண்ணு சொல்லியிருக்கு....நல்ல மனசு...அந்த மனசு தான் அவனை குற்ற உணர்ச்சியில் போலீஸ்ல தானா முன்வந்து சரணடைய வைத்திருக்கு....நாங்க இங்க வருவது தெரிந்தா எங்களை விட்டு இருக்கவே மாட்டான்...” என்றான்.

“அவன் செய்த வேலைக்கு வழக்கை வாபஸ் வாங்கி  சும்மா விட சொல்றியா?” கோபத்தில் அடிக்க போவது போல கண்ணனை நெருங்கினான் கார்த்திக்.

அதைக் கண்டு “கா...ர்த்திக் ப்ளீஸ் விடுங்க”, என்றாள் சந்தியா கெஞ்சலாக....

கோபத்தில் அவள் புறம் திருப்பிய கார்த்திக்கைப் பார்த்து, “ப்ப்ளீஸ்...” என்றாள் சிரமத்துடன் அழுத்தமாக... அந்த கெஞ்சல் அவனை கட்டுபடுத்தியது....

பின், “அத்தை...” என்று வடிவை அழைத்தாள்....

“மாமாவை விடுதலை செய்ய ஏற்பாடு பண்றோம்... ஆனா, அதுக்கு நீங்க எங்களுக்காக ஒன்னு மட்டும் செய்தா போதும்...”, நீண்ட வாக்கியத்தை பேசி முடிக்க வீங்கிய உதடுகள் வலித்தது... அந்த வலியை பொருட்படுத்தாது  கண் கலங்க சொன்னாள்...

அவள் சொல்வதைக் கேட்டு அடுத்து என்ன சொல்ல போகிறாள் என்ற அத்தனை பேர் பார்வையும் அவள் மீது படிய,  

“எங்க பூக்கு நல்லபடியா பிரசவமாகி அவ மடில குழந்தை தவழணும் மனசார வாழ்த்துங்க அத்...” என்றாள் உடைந்த குரலில்....மேலே பேச வந்தவளால் பேச முடியவில்லை.... அவள் சொல்வதைக் கேட்டு அவளிடம் ஓடினாள் வடிவு....அவள் முகவாயைப் பற்றிக் கொண்டு,

“உனக்கு நல்ல மனசு எங்க பாண்டியன் சொன்னது நிசம்..... நீ கவலையை விடு... பூமாக்கு சுகப்பிரசவமாக நான் மாரியாத்தாளுக்கு பூமிதிக்குதேன்.... அவ புள்ளைக்கு மொத மொட்டையை நம்ம ஊரு மாரியாத்தாளுக்கே  போட வருவா பாரு...” என்றாள் நன்றியுடன்...

“இது எங்கிட்ட சொல்றதை விட எங்கம்மாகிட்ட சொல்லுங்க அத்தை....”, என்றாள் அவள் சபித்து சென்ற வார்த்தைகள் தாயின் உயிரை குடிக்கப் பார்த்ததை நினைவில் வைத்து!

தன்ராஜை லஷ்மியை  போனில் அழைக்க செய்து வடிவை பேச வைத்தாள்.... எதிர்முனையில் லக்ஷ்மிக்கு எதுவும் புரியவில்லை...இருந்தாலும் வடிவின் வார்த்தைகள் தாய் மனதிற்கு இதமாய் இருந்தன.... அவளை அதிகம் பேச விடாமல் போனை வாங்கி “மத்ததை நேரில் சொல்றேன்” என இணைப்பை துண்டித்த தன்ராஜ்,

“எப்போ பாரு போனை நொட்டு நொட்டுன்னு வைக்கிறதுலே குறியா இருப்பார்” என மனைவியின் அன்பு அர்ச்சனையை கேட்கும் வாய்ப்பை இழந்தார்....   

சந்தியா  செய்வதைக் கண்டு கோபத்தின் உச்சகட்டத்தில் நின்றான் கார்த்திக்.... அவள் மன்னிப்பது அவனுக்கு பிடிக்கவில்லை, ஆனால் அதை தடுக்கவும் மனதில்லை... அவளை வெறுமையாய் பார்த்து விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்....

அவன் கோபத்துடன் வெளியேறுவதை ரசனைடன் பார்த்த மகளை  தன்ராஜ் கவனித்தார்.... இருவர் கண்களும் பேசிக் கொண்ட மொழியறிந்தார். வடிவும் கண்ணனும் கிளம்பினர்.... வாசல் வரை சென்ற கண்ணன், வடிவை முன்னே செல்ல விட்டு மீண்டும் சந்தியா அருகில் வந்தான்...

“என்னை உன் அண்ணன் போல நினைத்து கொள்.... இனி அவனால உனக்கு எந்த தீங்கும் நடக்காது.... அதுக்கு நான் பொறுப்பு” என்று உறுதியுடன் சொன்னவனின் கண்களில் உண்மையைக் கண்டாள்....

அவனைத் தொடர்ந்து சக்தியும், எம். எஸ்ஸும் சிற்றுண்டி உண்ண கிளம்பிச் செல்ல, தன்ராஜ் சந்தியாவிற்கு துணையிருந்தார்.... சந்தியா அருகில் வந்து அமர்ந்த தன்ராஜ்,

”மாப்பிளை என்னைப் போலவே கோவக்காரரா இருக்கிறாரே” என்றார் சிரித்த படி...

“மாப்பிளையா....” என்று கேள்வியாய் பார்த்தவள், கார்த்திக்கை சொல்வதை யூகித்து, வியப்பும், மகிழ்ச்சியுமாய் பூரித்தாள்....சிறு வெட்கப் புன்னகையை உதிர்த்தவள்...

“அப்பா நான்...எனக்கு...” என இழுத்தாள்....

“அதான் வாயெல்லாம் புண்ணாகி இருக்கே..எதுக்கு சிரமப்படுற..... என் மக காதல் கீதல்ன்னு போக மாட்டான்னு நினைத்து இருந்தேன்....அதை நீ பொய்யாக்கிட்ட...ஆனா எனக்கு இப்படி பண்பான மருமகன் கிடைப்பார்ன்னு நினைத்து கூட பார்க்கலை....அதை கடவுள் உண்மையாக்கிட்டார்” என்றார் பெருமையாக.

கார்த்திக்கை பெருமையாக சொன்னாலும், தந்தை தன்னை சொன்னது சுருக்கென்று குத்த, “சாரி அப்பா”, என்றாள் பார்வையை தாழ்த்திய படி....

“நாம ஆயிரம் நினைப்போம்.....ஆனா, ஆண்டவன் என்ன நினைக்கிறானோ அதானே நடக்கும். மனசுல பட்டதை சொன்னேன்.....” என்றார் நிதானமாக... பின்,

“இந்த வலிக்கெல்லாம் அம்மா வேணும், அப்பா வேணும் தேடக் கூடாது...தாங்கிப் பழகணும்... சரியா?” என்று அதட்டலாக கேட்டுக் கொண்டே பிளாஸ்கில் உள்ள டீயை டம்ளரில் ஊற்றிக் கொடுக்க தலையாட்டி விட்டு குடித்தாள்.... அதே நேரம் மதுவை அழைத்துக் கொண்டு நிரு வந்தான்.

பின் ஸ்ரீமா உட்பட உறவுகளும் நட்புகளும் அவளை சூழ்ந்து கொள்ள நேரம் போனதே தெரியவில்லை.... சிறிது நேரம் கழித்து திரும்பிய கார்த்திக் அவளிடம் பேசாமல் மவுனம் காத்தான்.... பேசினால் வார்த்தையால் அவளை வருத்தி விடுவோமோ என்பதற்காகவே பேசுவதை தவிர்த்தான்.... அவனை தனியாக அழைத்த எம்.எஸ்.., பச்சையின்  மரண வாக்குமூலத்தை நீட்டினார். வேண்டா வெறுப்பாக அதை வாங்கிப் படித்து விட்டு அவனை கெட்ட வார்த்தையால் திட்டி அதை சுக்கு நூறாக கிழித்து எரிந்தான்..... ”நான் நினைத்ததை நீங்க செய்துட்டீங்க” என்றார் எம். எஸ்....

மதிய உணவின் பொழுது மறுநாள் சென்னையில் நடக்கும் ஒரு முக்கியமான கருத்தரங்கில் முன்னர் திட்டமிட்ட படி கலந்து கொள்ள கார்த்திக்கால் முடியாது என சொல்ல, அதற்கு நிரஞ்சன், தனக்கும் செல்ல விருப்பமில்லை எனவும் மறு நாள் இரவே மலேசியாவிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் சொன்னான்.

மது மனது நிரு பக்கம் சாய்ந்து இருக்கும் நிலையில், அவன்  கிளம்பி விட்டால், மீண்டும் பாதுகாப்பு உணர்வுக்காக வீட்டை நேசிக்க ஆரம்பித்து விட்டால் சிக்கலாகி விடுமே என்று பயந்தான் கார்த்திக். சந்தியா நல்லாயிருந்திருந்தால், அவளே மதுவை எளிதாக கையாண்டிருப்பாள்  என்று நினைத்தவன்,  நிரஞ்சனிடம் மதுவையும் மலேசியாக்கு உடன் அழைத்து செல்ல சொன்னான்.

“மதுக்கு விசா பிரச்சனை இல்லை. அவ வீடு திரும்பின பிறகு மனசு மாறிடுவாளோன்னு பயமாயிருக்கு. சூட்டோட சூடா உன் கூடவே அழைத்து போயிடு. எங்க வீட்டில் நான் பேசி அனுமதி வாங்கி தருகிறேன்.  அவளும் உங்க அக்கா, அம்மா கூட பழகினது போல இருக்கும். யார் கண்டது? அதிரடி முத்தம் வேலை பார்த்தது போல, இதுவும் வேலை பார்க்க வாய்ப்பு இருக்கு. “ என்று சொல்லவும் ஒரு நொடி அதிர்ந்த நிரஞ்சன், அவளை கட்டாயப்படுத்தி அழைத்து செல்வதை தான் விரும்பவில்லை எனவும், அவன் காதல் அவளை மனதை மாற்றி தன்னுடன் சேர்த்து வைக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் மறுத்து விட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.