(Reading time: 31 - 62 minutes)

மாலையில் நட்பு கும்பல் தோழி திருமண அழைப்பு விழாவிற்கு கிளம்பின. மீதமிருந்தவரை அறையின் வெளியே காத்திருக்க சொல்லி விட்டு சந்தியாவிற்கு கட்டுக்களை பிரித்து மருந்திட்ட செவிலிப் பெண், “இங்க கார்த்திக்ன்னா யாரு... அவங்களை மட்டும் உள்ளே வரச் சொன்னாங்க” என்று சொல்லி விட்டு சென்றாள் அவள்...

அறைக்குள்  நுழைந்த கார்த்திக்கிடம் கட்டிலில் படுத்திருந்தவள் அறைக்கதவை தாழிட்டு வர குறிப்பு காட்டினாள்.... அவளருகில் வந்து கார்த்திக் அமர்ந்ததும்,

எப்படி ஆரம்பிக்க என திணறியவள், “கார்த்திக், எனக்கு என்ன ஆச்சு?”, முகத்தில் கவலை ரேகை அப்பிக் கிடந்தது....

“இது தான்...” என அவள் உடைந்த தோள் பட்டையை கண்களால் காட்டினான்...

“அப்போ இது...” என வலது ஆள்காட்டி விரலால் உதட்டை காட்டினாள்.... கண்களில் தவிப்புடன்....

”அடிப்பட்ட காயம் தான்...வேற ஒண்ணும் இல்லைடா”, சமாளித்தான்...

அதை நம்பாதவளாய், “இல்ல... காயம் அங்க மட்டும் இல்லை கார்த்திக். அது விபத்து காயம் இல்லை.... நான் நர்ஸ்கிட்டயும் கேட்டேன்....” என்றாள் குரல் தழுதழுக்க...

“அவ ஏதாவது உளறுவா....”, என்றான் சினத்துடன்.... அவனுக்கு என்ன தெரியும்.....கட்டு போட  வந்த செவிலி பெண் அவளிடம் சொல்லுவாள் என....

“இல்லை....உண்மையை சொல்லுங்க...என்னை மயக்கத்தில் எதுவும்...... செய்துட்டாங்களா? உங்களுக்கு பொண்டாட்டியாகுற தகுதியை இழந்துட்டேனா...”, நடுக்கத்துடன்  அழுது கொண்டே கேட்டாள்....

அதைக் கேட்டதும் படுக்கையில் கிடந்தவளை நெருங்கி, அவளது இடது தோள்பட்டை காயத்திற்கு பங்கம் வராத படி வலது புறம் இருந்த சிறிய இடத்தில் ஒருக்களித்து   இடித்துக் கொண்டே படுத்தவன், அவள் தலையை கோதி விட்டவாறு,

“முகத்தை கூட பார்க்காமலே நாம சண்டை போட ஆரம்பித்தோமே.... அப்பவே எனக்கு பொண்டாட்டியாகிற முழு தகுதியை உனக்கு ஆண்டவன் கொடுத்துட்டான்....உனக்கு இன்னும் சந்தேகம் தீரணும்னா அந்த மஞ்ச கயிற்றை குடு... இப்போவே கழுத்தில் கட்டி விடுறேன்....பொண்டாட்டி பதவி அதிகாரப்பூர்வமா கிடைத்திடும்” என்று சொல்லி குறும்பாக சிரித்தான்....

“கார்த்திக் ப்ளீஸ் விளையாடாதீங்க.....என்ன நடந்ததுன்னு சொல்லுங்க....என்னை ரேப் பண்ணிட்டாங்களா...”, கண்களில் மிரட்சியுடன் மனதில் உள்ளதைக் கேட்டாள்...

இதற்கு மேலும் சொல்லாமல் விட்டால் இவள் இன்னும் பூதாகரமாக யோசிப்பாள் என “ஹே.....உன் கற்பனை குதிரையை நிறுத்தி வை....சொல்றேன்...ஆனா ஒரு தடவை தான் சொல்லுவேன்....இதைப் பத்தி நீ இனி நினைக்க மாட்டேன், பேச மாட்டேன், அழ மாட்டேன்னு சொன்னா...சொல்றேன்” என கேட்க அவளும் மனதில் உண்டான  பயத்தில் கலக்கத்துடனே சரியென தலையாட்ட  நடந்ததை சொன்னான்.....  

அவன் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போனாள்... நெஞ்சின் மீதிருந்த  காயத்தின் வலியை விட நடந்ததை நினைத்து நெஞ்சுக்குள் உண்டான காயத்தின் வலி அதிகமானது, “நேத்து பார்த்தீங்களே கார்த்திக், ஒரு டி-ஷர்ட் வாங்க எவ்வளவு யோசித்தேன். என்னை போய் ஒரு பொருக்கி...... நினைத்தாலே அருவருப்பாய் இருக்கு..” என கண் கலங்கிய படி புலம்ப,

“வள்ளிக்கண்ணு ...நடந்ததை கேட்ட பிறகு எதையெல்லாம் செய்ய மாட்டேன்னு சொன்னியோ அதை எல்லாம் செய்ற.... உன்னை என்ன செய்ய?....ம்ம்.....”, என்று கொஞ்சலாக சொல்லிக் கொண்டே அந்த நெருக்கத்தில் அவள் தனித்தன்மையான வாசத்தில் திளைத்தவன், இடையைப் பற்றி, “மை பார்பி” என ரகசியக் குரலில் அவளிமைகளில் அழுத்தமான முத்தங்களை பதித்தான்.... அவள் வலிக்கு அது மருந்தாகும் என்ற நம்பிக்கையில்....

ஆனால் அவளோ, “எப்படி கார்த்திக் உங்களால சாதாரணமா எடுத்துக்க முடியது......என்னால முடியலை....” என்றாள் அவனது முத்தங்களுக்கு கட்டுப்படாமல் அழுகை பெருக்கெடுக்க.....அவளது வருத்தம் அவனை பலமாக தாக்க,  அவளை ஆறுதல் படுத்த வழி தெரியாமல் அவள் முகவாயைப் பற்றி அவளை விழிகளை நேரடியாகப் பார்த்து,

“வள்ளிக் கண்ணு..... உன்னை தொட்டவனை கடவுள் தண்டிச்சிட்டார்....அதற்கு காரணமானவனை நீ மன்னிச்சிட்ட..... இன்னும் எதுக்கு வருத்தப் படணும்? நமது  கை மீறி நடக்கும் செயல்களுக்கு நாம பொறுப்பல்ல....ஆனா நமது  கைக்குள்ள இருக்கிற சந்தோசத்துக்கு நாம தான் பொறுப்பு....”

“உன்கூட பஸ்ல வந்தப்போ கவனித்தேன்....வேலை முடிந்து திரும்புற பெண்களை எத்தனை பொறுக்கிங்க உரசிகிட்டும் இடித்துகிட்டு வர்றாங்க... வாய்ப்பு கிடைத்தா சில்மிஷம் கூட செய்துட்டு கூட்டத்தில் ஓடி ஒளிந்துடுறாங்க.... இதுக்கெல்லாம் அந்த பெண்கள் அழுதா தினமும் அழுதுகிட்டே இருக்க வேண்டியது தான்.... இதே போல சில தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு பெரிய அளவு முக்கியத்துவம் கொடுக்காம கண்டுக்காம விடுறது தான் நல்லது” என்றான் ஆறுதலாக, அவள் முகத்தை துடைத்துக் கொண்டே.... பின், தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்தவன், “இதோ பார்....” என அதில் படம் பிடித்த கவிதையை காட்டினான்...

வாழ்க்கை நம் கையில் கிடைத்த  பூங்கொத்து

விதியோ சதியோ  அதை உலுக்கலாம்

அன்றே மலர்ந்த இன்ப பூக்களை சிதறடித்து

துன்பமெனும் புழுதியில் திணறடிக்கலாம்

ஆனாலும் முடியாது வாழ்க்கை - ஏனெனில்  

இன்னும் அது நம் கையில்  - நம்பிக்கையில்!

வாழும் உலகில்  மாற்றங்கள் என்பது நிரந்தரம்

இதில் நம் வாழ்க்கை எம்மாத்திரம் ?

நம்பி எதிர் கொள் - நம்பிக்கையே நம் தாரக மந்திரம் - அதுவே

துன்ப தூசை துடைக்கும் தந்திரம்

இன்ப பூக்களை அடையும்  சூத்திரம்!

“இப்படி மாபெரும் ஓவியர் லதா அவர்கள் தங்கள் ஓவியத்தோடு கவிதையையும் தீட்டி வைத்துள்ளார்.... உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா?” என கார்த்திக் கேள்வியோடு அவளைப் பார்க்க,

வெள்ளை உடையில் அவன் எடுத்த புகைப்படத்தை முதன் முதலில் பார்த்த பொழுது அவள் மனம் எழுதிய கவிதை..... அது அவளுக்கே பாடம் சொல்லும் என்று அப்பொழுது தெரியாது....

“நான் எழுதின  கவிதை......” குரல் தழுதழுக்க சொன்னவள் தன்னாலே அதன் படி நடக்க முடியவில்லை என்ற இயலாமையில் தவித்தாள்.... “நானும் தூசியில் விழுந்த ரோஜா தானே?”, உள்ளுக்குள் அழுதாள்....

அவள் வருத்தத்தை களைய முடியாத தவிப்பில் அவளை அணைத்த படி அவள் கழுத்து  வளைவிற்குள் முட்டிக் கொண்டு முகம் புதைக்க, அதற்கு ஏதுவாக அவள் வலது கை  அவன் கழுத்தை வளைத்துக் கொண்டது....ஆனால் அவனோ  அவள் கரத்தை பற்றி தன் தலையில் வைத்து கோதி விட சொன்னான்....மவுனமாய் சில நொடிகள் கழிந்தது......அவன் செய்கை சுலோ பாட்டி சொன்னதை நினைவுறுத்தியது!

ஆறடி உருவம், உடலை குறுக்கி அன்புக்கு ஏங்கும் குழந்தை போல அவளை அண்டி வர, அவனை ஏங்க விட மனதில்லை....அவன் முடியை கோதியவாறு....    

வாழ்க்கை நம் கையில் கிடைத்த  பூங்கொத்து

விதியோ சதியோ  அதை உலுக்கலாம்

என்றாள் தன் கவலையை மறைத்து. அவள் சொல்ல ஆரம்பிக்கவும், அவளை மேலே பேச விடாதவனைக் கண்டு நம்பிக்கையுடன் புன்னகைத்தாள். அது அவனுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க,  

“மச்சக்கன்னி” என்று தன் முகம் பதித்திருந்த அவள் கழுத்திலிருந்த மச்சத்தின் மேல் முத்தத்தை அழுந்த பதிக்க அதில் அவள் லயித்துப் போனாள்..

ஜூன் 4, திங்கட்கிழமை

சென்னை சர்வதேச விமான நிலையம்

நிரஞ்சனை வழி அனுப்பி விட வந்தனர் கார்த்திக், சிவா மற்றும்  மது.... மது அழுது அழுது நிரஞ்சன் சட்டையை தொப்பல் தொப்பலாக நனைத்திருந்தாள்....

“நிரு, வேற சட்டை மாத்திட்டு போ.... எல்லாரும் வித்தியாசமா பார்க்கிறாங்க” என்றான் கார்த்திக்.

“இதுக்கு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானேம்மா”, என்று அங்கலாய்த்தான் சிவா.

“இல்லை...எனக்கு பயமா இருக்கு!” என்று கண்ணீர் வடித்தாள்...

“சிவா, நீ விடு... மதுக்கு பேயம் போகுத்து... பின் கேலியானம் பண்ணுது” என்று மதுவை தட்டிக் கொடுத்தான்...

“மது நான் என்ன சொல்லிறகுது”,  கேட்டான் நிரு....

கேட்டதும் சிரித்தாள்.....அடுத்த நொடி வெடித்து அழுதாள்....

“மது நான் என்ன சொல்லிறகுது” என்றான் சிவா மதுவைப் பார்த்து நிருவைப் போல...

அவள் முறைத்தாள்....

“நீ மரிக்க சொல்லிறகுது?” கேட்டான் நிரஞ்சன்...

“மரிக்கங்கிற வார்த்தையை சொல்லக் கூடாது....” என கோபத்துடன் அவன் தோளில் ஒரு போடு போட வந்தாள் மது....

“சாரி..பேபி” என அடிக்க வந்த அவள் கரத்தை பற்றி நிரு கொஞ்ச, மது நாணத்தில் கையை உதறினாள்....அவன் அவளை ரசனையுடன் பார்த்தான்... .

அதைப் பார்த்ததும் , “யேய் கொல்காப்பியா.....தெரிஞ்சே தப்பா பேசுறியா....இல்ல தெரியாம தப்பா பேசுறியான்னு சந்தேகமா இருக்கு!” என்றான் சிவா அவன் மீது சந்தேகப் பார்வை வீசி...

இருவரும் இணைபிரியாமல் கரத்தை பற்றிய படியே நிற்க,

“மது, அவனை விடு.... ப்ளைட்டுக்கு நேரமாச்சு.....”, கார்த்திக் அவசரப் படுத்தினான்...

”மது நான் உன் கண்ல இருந்து மறையும் வரைக்கும் நீ சிரிச்சுகிட்டே தான் இருக்கணும்.... நான் செக் பண்ணுவேன்... அப்படி மட்டும் இருந்துட்டா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட், கார்த்திக்கிட்ட இருக்கு. வாங்கிக்கோ” என்றான் ஆங்கிலத்தில்....

அவன் சொன்னதும் விழிகள் படபடக்க சரியென்றாள்.... அவன் கண்ணில் இருந்து மறையும் தூரத்தை அடைந்ததும் திரும்பி பார்க்க, சிரித்தாள்... மனதில் நிறைவோடு நகன்றான்...

அவன் சென்றதும் “காதி....என்ன கிப்ட் வைச்சிருக்கான்... நிரு?” கேட்டாள் கார்த்திக்கிடம் ஆர்வமாக....

அவன் கையிலிருந்த விமானப் பயணச்சீட்டை அவளிடம் நீட்டினான்.... அதை வாங்கிப் பார்த்ததும் அவளுக்கு அழுகை வந்தது....”என்னால மலேசியா போக முடியாது” என்ற படி விமான நிலையத்திலிருந்து வெளியே ஓடி வந்தாள்....

“சரி வேண்டாம்...வீட்டுக்கு போகலாம் வா....” என்று அழைத்தான் கார்த்திக். காரில் ஏறி வீட்டிற்கு வரும் பொழுதே ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்ந்தாள்......அழுது கொண்டே வந்தாள்...கார்த்திக்கும் சிவாவும் அவளை கண்டு கொள்ளாமல் இருக்க, அவளுக்கு மேலும் அழுகை வந்தது....

”சிவா அண்ணா.....நீங்களாவது ஏன் அழுகுறேன்னு கேக்கலாம்ல” என்று அழுதாள்....

“உனக்கு ஒரு அண்ணி வேணும்னு அழுகிறியாம்மா?” என்று ஆர்வமாய் கேட்டான்...

“அது இல்ல....எனக்கு நிரு வேணும்...”, என்றாள் அழுது கொண்டே....

“கடையில் பொம்மை வேணும் கேக்குறது போல கேக்குறியே....” என சிவா சொல்ல கார்த்திக் காரை திருப்பி விமான நிலையத்திற்கே விட்டான்...

“என்ன காதி ஏர்போர்ட்க்கு போற....?”, அவன் செய்வது புரியாமல் கேட்டாள்...

“நிரு பொம்மை மலேசியால தான் கிடைக்கும்....எதையும் முயற்சி பண்ணாமலே முடியாதுன்னு சொல்லக் கூடாது....மலேசியால நீ தனியா இருக்க போறது இல்லை.... உன் கூட பிந்தி ஆண்ட்டி இருக்காங்க... .உன்னை பார்க்க நிரு அக்கா நியூசிலாந்து இருந்து பசங்களை கூட்டிகிட்டு வந்திருக்காங்க... ஒரு வாரம் அங்க இருந்து பார்....எப்போ பிடிக்கலைன்னு தோணுதோ அடுத்த நிமிஷமே நிரு உன்னை ஊரில் கொண்டு வந்து விட்டு விடுவான்.... அப்படியும் பயமா இருந்தா இருக்கவே இருக்கான் நம்ம சிவா.... உன் கூட வருவான்... நீ நல்லா சிரிச்சுகிட்டே இருக்கலாம்” என்றான் கார்த்திக்...

“என்னது சிவா கூட வருவானா? இது எப்போ நடந்தது” என்றான் சிவா புரியாமல்...

“யாதும் ஊரே....யாவரும் கேளீர்...மச்சி, நீ மெழுகுவர்த்தி என்றான் கார்த்திக்...

கார்த்திக் முந்தைய நாள் கொடுத்த யோசனையை முதலில் மறுத்த நிரு, மதுவை பிரிய மனதின்றி கார்த்திக்கின் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டதன் விளைவே அவளின் மலேசியப் பயணம்... அவளுக்கு தினம் தினம் பரிசு கொடுத்து கவிழ்ப்பதே இவர்கள் திட்டம். ஒரு அப்பாவியை எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க??!!!

அன்று விமான நிலையத்தில் மதுவை இறக்கி விட்டது தான்...... கூடவே சிவா இலவச இணைப்பாக....

அடுத்து அவள்  இந்தியாவிற்கு  வந்தது மூன்று மாதங்கள் கழித்து

சக்தி – எம்.எஸ் திருமணத்திற்கு.....

அது முடிந்த கையோடு மது- நிரு திருமணம்....

அடுத்த ஆறு மாதங்களில் சந்தியா- கார்த்திக்கின்  திருமணம்....

மலேசியா சென்ற சிவாவின் விஸ்வரூப வளர்ச்சியை  வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

இவர்கள் அனைவரும் கூடுவது சந்தியாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில்....மே 13...  

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!

Go to Episode 29

Go to Episode 31

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.