(Reading time: 20 - 40 minutes)

11. காதல் பயணம்... - Preethi

Kaathal payanam

***சென்னை***

***கல்லூரி***

குப்பே வெறுச்சோடி இருந்தது. முந்தின வகுப்பு ஃப்ரீ என்பதால் பொறுமையாகவே வந்தனர். அஸ்வத் மட்டும் சிறிது நேரம் முன்னதாகவே வந்துவிட்டு ஒருபுறம் காதில் headset யில் பாடல் கேட்டுக்கொண்டே மறுபுறம் கைகள் புத்தகத்தை புரட்டிக்கொண்டு இருந்தான். தன் முன்னே நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவன் சிறிது ஆச்சர்யப்பட்டுப் போனான்.  

“ஹாய் அஸ்வத்” என்று சிரித்த முகத்துடன், கள்ளம்கபடம் அற்று இருப்பதுப் போல் முகத்தை வைத்துக்கொண்டு அருகில் நின்றான் தர்ஷன். காதில் இருந்து ஹெட்செட்(headset) எடுத்தவன் எப்போதும் போல் கள்ளம்கபடம் அற்று அவனை பார்த்து புன்னகைத்து “ஹாய்” என்று கூறினான்.

“எனக்கு கொஞ்சம் microprocessor சொல்லி தரியா? எனக்கு அதில் நிறைய சந்தேகம் இருக்கு” என்று அவன் பாவமாக கேட்க, அஸ்வத்தும் சிறிது வினோதமாக இருப்பினும் “சரி” என்று தலை அசைத்தான்.

“இப்போ இல்லை அஸ்வத் weekend எப்போ நீ ஃப்ரீயோ அப்போ சொல்லிக்கொடு....” என்று பவ்வியமாக கூறினான். weekenda என்று சிறிது யோசித்தவன் அப்போது தானே அனுவுடன் தனியாக பேசும் சமயம் அதையும் விடனுமா என்று யோசித்துக்கொண்டே இருக்க, அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்த தர்ஷன் இடைபுகுந்து “நீ பிஸினா விடு அஸ்வத்” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கிளம்ப எத்தனிக்க, அஸ்வத் தடுத்தான்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை இந்த weekend நம்ம குரூப் study பண்ணலாம்” என்று தர்ஷனின் ஆசை நிறைவேறியது புரியாமல் கூறினான். தர்ஷனுக்கு மனதில் மிகவும் சந்தோஷம், அஸ்வத்தும் அனுவும் வாரவாரம் சந்திப்பது பொறாமையாக இருந்தது. அவனது முதல் பிளான் அதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்பதுதான். தான் இருந்தால் அனுவுடன் அவனால் இலகுவாக பேச முடியாது என்று அவன் அறிந்திருந்தான் எனவே அஸ்வத்துடன் ஆன குரூப் study முயற்சி செய்தான்.     

இவர்கள் பேசிக்கொண்டிருக்க அருண் வகுப்பின் உள்ளே நுழைந்தான், அஸ்வத்தும் தர்ஷனும் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தர்ஷன் வேலை இல்லாமல் ஒட்டுபன் இல்லையே, என்ன காரியம் நடக்கனும்னு கூட்டணி அமச்சிருக்கான் என்று யோசித்தவாறே அருகில் வந்தான். மனதில் பட்டதை வெளியே சொல்லாமல் எப்போதும் போல் பேசிக்கொண்டிருந்தான். வகுப்பில் அமர்ந்து இருந்து பார்த்தாலே சிறிது தூரத்திலேயே யார் வருகின்றனர் என்று தெரியும் அப்படி அனு வருவதை முதலில் கண்ட தர்ஷன் இதோ வந்திடுறேன் என்று கூறி நகர்ந்து சென்றான்.

இவன் ஒருபுறம் நகர அருண் மெதுவாக கிசுகிசுத்தான் அஸ்வத்திடம், “அந்த இரெத்த காட்டேரிக்கு என்ன வேணுமாம்?” என்று அவன் கேட்க, அஸ்வத்திற்கு சிரிப்பாக இருந்தது. “ரெத்த காட்டேரியா? ஏன்டா.... அவன் பாட்டுக்கு வரான் போறான்” என்று அவனுக்கு பரிந்து பேச, “யாரு அவன் பாவமா? ஒட்டினானா இரெத்ததை உரிஞ்சிட்டுதான் விடுவான் ஜாக்குரதை” என்று மிரட்டும் தோணியில் கூறினான்.

“ஆமாம் என்ன விஷயமாம்?” என்று அருண் கேட்க, தர்ஷன் கூறியதை எல்லாம் அவனிடம் சொன்னான். “பார்த்தியா நான் சொல்லலை அவன் காரியம் நடக்கணும்னா மட்டும்தான் வருவான்னு” என்று பேசிக்கொண்டிருந்தவன் திரும்பி பார்க்க, அங்கு தர்ஷன் அனுவோடு பேசிக்கொண்டிருந்தான்.       

“பார்த்தியாடா அனுகிட்டயும் போய் ஏதோ கடலை போடுறான்” என்று பொருமிக் கொண்டிருந்தான் அருண். அவனுக்கு காரணமே இல்லாமல் தர்ஷனை பிடிக்கவில்லை எனவே அவன் என்ன செய்தாலும் கடுப்பாக இருந்தது.

“இவள் வேற அவன் பேசுறதுக்கு எல்லாம் எவ்வளவு மலர்ச்சியா பதில் சொல்லுறாள் பாரேன்” என்று தொடர்ந்து பொருமினான் அருண். அவனை கண்டு வினோதமாக பார்த்து சிரித்தவன், இதெல்லாம் நம்ம சொல்ல வேண்டிய வார்த்தை ஆச்சே என்று யோசித்தான். இவர்கள் பேசுவதை முன்பே பார்த்துவிட்டான் அஸ்வத், அவர்கள் பேசுவதையும் பார்த்தான்... அவ்வப்போது அனுவின் பார்வை தன் மீது விழுவதையும் பார்க்காமல் பார்த்தான். அவள் ரகசியமாக தன்னை பார்ப்பது மனதில் உள்ளே இனம் புரியாத சந்தோஷத்தை பரப்பியது. இதையெல்லாம் எண்ணி ஒரு தனி கனவுலகில் அஸ்வத் இருக்க அருண் புலம்புவது அவனுக்கு சிரிப்பாக இருந்தது.

அனு தர்ஷனை பார்த்துக்கொண்டு இருந்த அருணின் தலையில் லேசாக ஒரு அடிபோட்டு அவன் தோளில் கைப்போட்டான். “யாரோட பேசுறோம்ன்றதுல இல்லை அருண், யாரை பத்தி பேசுறாங்கலோ அதனால வந்த மலர்ச்சிடா அது” என்று மனதிற்கு புரிந்ததை கூறினான். அவன் கூறியது புரிந்தாலும், “அது எப்படி அங்க என்ன பேசுறாங்கனு உனக்கு எப்படி தெரியும்?” என்று புரியாமல் கேட்க, “அதெல்லாம் ஒரு தொலை நோக்க பார்வையோட பார்க்கணும்டா வேணும்னா நீயே பக்கத்தில போய் கேட்டுபாரு” என்று கூறி கண்ணடித்தான் அஸ்வத். அவன் கூறியது ஆர்வத்தை கூட்ட, மெதுவாக நகர்ந்து அவர்களது பேச்சில் இடைபுகாமல் கவனித்தான்.

“அஸ்வத் எனக்கு சொல்லி தரேன்னு சொல்லிருக்கான், அவன் தானே microprocessor புலி அதான் அவனை சொல்லிதர சொன்னேன். எப்படி தான் அவனுக்கு மட்டும் எல்லாமே ஈஸியா இருக்கோ” என்று என்றும் இல்லாமல் தர்ஷன் அஸ்வத்தின் புராணம் பாடினான். அவன் அஸ்வத்தை பற்றி பேசியது ஒரு அதிர்ச்சி என்றால், அஸ்வத் கணித்தது உண்மைதானே என்ற அதிர்ச்சி மறுபுறம். அவன் வியப்பு கண்ணில் தெரிய, அமைதியாக அஸ்வத்திடம் வந்தான் “எப்படிடா மாப்ள? இவ்வளவு கரெக்டா சொல்ற” என்று வியந்து கேட்க, “அதெல்லாம் அப்படிதான்” என்று கூறியவன் அனுவின் மீது பார்வை பதித்தான், அதேநேரம் அனுவும் பார்க்க, சட்டென விழிகள் தாழ்த்திக்கொண்டாள், இது அனைத்தையும் அனுபவித்த இரு மனம் சிரிக்க, அமைதியாக கண்ட ஒரு மனம் அவன் பேரை சொன்னாளே எவ்வளவு மலர்ச்சி அவள் முகத்தில் என்று பொருமியது. 

தன்பின் நேரம் வேகமாக நகர்ந்தது. வகுப்பெல்லாம் முடிந்து எப்போதும் போல் அஸ்வத் அனு வெளியே வருவதற்காக காத்திருந்தான். அங்கிருந்து பேசிக்கொண்டே நடந்து செல்வது அவனுக்கு பிடித்தமான ஒன்று, அனு மௌனமாக வந்தாள் ஆனால் மனம் மட்டும் பேசிக்கொண்டிருந்தது. ஐயோ சும்மாவே நம்மை கிண்டல் செய்வான், திருவிழாவில் வேற அவனை பார்த்து வெட்க பட்டுடோம் இன்னும் என்னலாம் சொல்ல போறனோ, சரி சமாளிப்போம் என்று யோசித்தவாறே வந்தாள்.

“வாங்க மேடம் என்ன பலத்த யோசனை போல? திருவிழால வெட்கப்பட்ட நியாபகமா?” என்று தன் வசீகர புன்னகையுடன் முதல் அம்பை தொடுத்தான்..    

இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை ஹ்ம்ம் என்று மனதில் நினைத்துக்கொண்டு, “திருவிழால வெட்கப்பட்டேனா? யார் சொன்னா?” என்று ஒன்றும் புரியாதது போல் நடித்தாள்.

“யார் சொல்லணும் அதன் நானே பார்த்தேனே” என்று பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்தவாறு அவளை பார்த்துகொண்டு அடுத்த அம்பை எய்தினான்.

எங்களுக்கேவா? என்று மனதில் நினைத்துக்கொண்டு “நீ பார்த்தியா? நீ திருவிழா வந்தியா அஸ்வத்? எனக்கு தெரியவே தெரியாதே” என்று வேண்டும் என்றே நடித்தாள். அவள் வரும் ரகசிய புன்னகையை பின்னுக்கு தள்ளி முகத்தில் பாவம் காட்டி நடிப்பதை பார்த்தவனுக்கு சிரிப்பாக இருந்தது. ஒரு நொடி குனிந்து மெலிதாக புன்முறுவல் பூத்தவன் நிமிர்ந்து, “சோ நீ என்னை பார்க்கவே இல்லை அப்படிதானே?”   

“ம்ம்ம் ஹ்ம்ம் பார்க்களை” என்று அலட்சியமாக தோளை குலுக்கிக்கொண்டாள். “பிழைத்து போ” என்று பதிலுக்கு கிண்டல் அடித்துவிட்டு, “ஓ உனக்கு ஒரு விஷயம் தெரியாதில்லை உங்க அண்ணாக்கும் என் அக்காக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க இன்னும் 3 மாதத்தில் கல்யாணம் அதுவாவது தெரியுமா?” என்று கிண்டலாக கேட்க.

என்னதான் தான் இருந்த பொழுதுதான் இது அனைத்தும் நடந்தது என்றாலும் இப்போது அதை சொன்னால் சுற்றி சுற்றி திருவிழா பேச்சே வரும் என்று நினைத்து “ம்ம்ம் கேள்விபட்டேன்...” என்று எங்கோ பார்த்தப்படி கூறினாள். இவை அனைத்தையும் பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. “எப்பா உலகமகா நடிப்புடா சாமி” என்று சிரித்துக்கொண்டே கூறினான். அவளும் சேர்ந்து சிரித்துவிட பேசிக்கொண்டே நடந்தனர்.

அஸ்வத் விடுவதாக இல்லை, “ஏன் அனு உனக்கு குச்சிமிட்டாய் ரொம்ப பிடிக்குமோ?” என்று மீண்டும் ஆரம்பிக்க, ஆஹா இவன் விட மாட்டான் போலவே என்று நினைத்து, “அப்பறம் அஸ்வத், வீட்ல வேற என்ன சொன்னாங்க?” என்று பேச்சை மாற்ற, அதற்கும் அவன் சளைக்காமல் பதில் தந்தான்.

“அதுவா அக்காதான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாள் உனக்கு அனு என்ன முறை வரணும்டானு கேட்டாள்....” என்று முறை என்ற வார்த்தையில் அழுத்தம் தந்து பேச, அவளின் முகம் லேசாக சிவந்தது. முகத்தை திருப்பிக்கொண்டு, “ம்ம்ம்ம் கட்டிக்கிற முறை வரணும்” என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

“என்ன அனு அப்படி என்ன அந்த பக்கம் இயற்கை எழில் இருக்குனு அந்த பக்கம் பாக்குற? நான் என்ன பதில் சொன்னேன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்று அவன் அவள் முகத்தை அவன் புறம் திருப்புவாள் என்று பார்த்துக்கொண்டே இருந்தான். இவன் பேச பேச வெட்கம் வர, “அஸ்வத் வேற ஏதாவது பேசு ப்ளீஸ்...” என்று கொஞ்சம் கெஞ்சி பேச்சை மாற்றினாள். அவள் கொஞ்சல்களும் கெஞ்சல்களும் அவனுக்கு பிடித்தவை தானே அதையும் ரசித்தான் அஸ்வத். ஒருவாறு நாள் அன்று கிண்டல் கேலி வெட்கம் என்று ரம்மியமாக சென்றது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.