(Reading time: 20 - 40 minutes)

***பெங்களூர்***

டைசியா கேட்குறேன்...வருவியா? வர மாட்டியா?” பொறுமை இழந்துக்கொண்டிருந்தாள் தேஜு.

“இல்லை தேஜு நான் சொல்லுறதை கேளு இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருக்கலாமே?!?!” என்று அவன் பேச்சை இழுத்தான் நிரஞ்ஜன்.

“எத்தனை மாசம்டா உன்னை என்ன சாகசமா பண்ண சொல்லுறேன் ஒரு தடவை பார்க்கலாம்னு கேட்டாள் ஓவரா சீன் போடுற. ஒரே campusla இருக்கோம் ஒரு தடவை கூட பார்த்தது இல்லை. இன்னைக்கு என்னை பார்க்குரதுனால் வா இல்லை இனிமே பேசவே பேசாதே..” கோவமாக அழைப்பை வைத்துவிட்டாள் தேஜு. மறைமுகமாக காதல் கூறி அன்றோடு 3 மாதங்கள் ஆனது. நிரஞ்ஜன் பேசும் போதெல்லாம் மனம் நிறைந்திருக்கும், சோகமாக இருந்தால் கூட தன் கேலிபேச்சுகளால் அவளை சிரிக்க வைத்து விடுவான். தோள் தரும் தோழனாகவும், வீட்டின் ஏக்கம் வரும் போதெல்லாம் ஒரு தாயாகவும் அரவனைத்துகொள்பவனை பார்ப்பதற்கு தேஜு ஆவலாக இருந்தாள். ஒவ்வரு முறை தேஜு கேட்கும் போதெல்லாம் இப்போ பார்க்கலாம் அப்போ பார்க்கலாம் என்று நாட்களை கடத்துவதிலேயே இருந்தான் நிரஞ்ஜன். நிரஞ்ஜன் அவள் வாழ்வில் முக்கிய அங்கமானான். அவனை கற்பனையில் வரைந்தாள் ஆனால் அது ஏக்கத்தை கூட்டியதே தவிர குறையவில்லை.

பேசாமல் இருந்தாலாவது பரவா இல்லை, நீ இந்த செய்கை செய்யும் போது அழகாய் இருந்த, இந்த உடை உனக்கு பொருத்தமாய் இருந்தது என்று தினமும் அவன் பேசும் போதுதான் இன்னமும் கோவம் அதிகம் ஆகும். இவன் மட்டும் என்னை பார்க்கலாம் நான் மட்டும் பார்க்க கூடாதா என்று கடுப்பாக இருந்தது தேஜுவிற்கு எனவே பொறுமை இழந்து இன்று கேட்டும்விட்டாள் அவள் அழைப்பை துண்டித்ததில் கவலையாக இருந்தான் நிரஞ்ஜன்..

என்னதான் அவளை நன்றாக பார்த்துக்கொண்டாலும் அவள் அளவிற்கு இவன் பெரிய பின்புலம் இருப்பவன் அல்ல, அந்த நினைப்பே கொஞ்சம் அவனை தடுத்தது ஆனால் அது ஒன்றும் பெரிய பங்கு வகிக்கவில்லை. தேஜு பேசும் போதெல்லாம் ஒரு ராஜா போல் உணர்வான். ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கிய நபராவது ஒன்றும் சிறிதல்ல, இருவரும் என்ன செயல் செய்தாலும் அதில் மற்றவரது பங்களிப்பு இருந்தது. இப்படி அவள் தரும் முக்கியத்துவத்தில் அவன் அந்த வேறுபாட்டை மறந்தே போனான். ஆனால் தான் தேவதையாக பார்க்கும் பெண்ணை முதல் முறை பார்க்க செல்வது ஒரு முக்கியமான மறக்கமுடியாத தருனமாக இருக்க வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இவள் இப்படி அடம்பிடிக்க மனதை தேற்றிக்கொண்டு ஒரு முடிவிற்கு வந்தவனாய் தேஜூவை அழைத்தான்.

“ஸ்ரீ...” மென்மையாக அழைத்தான்.

முதல் அழைப்பிலேயே கட்டுண்டாள் இருப்பினும் எதையும் காட்டிக்கொள்ளாமல் “ம்ம்ம்ம்” என்ற பதில் வந்தது.

“என்னடா இப்படி சோகமா பேசுற?, நீ ஒழுங்கா பேசினால் தான் நான் ஒரு குட் நியூஸ் சொல்லுவேன்” என்று முதல் துடுப்பு விட்டான்.

அது என்ன குட் நியூஸ் என்றுதான் அவளுக்கு தெரியுமே, தான் சோகமாக இருந்தால் இவனால் தாங்க முடியாது என்று அவளுக்கும் தெரியும். இருப்பினும் அவன் வாயால் கேட்பதற்காக “சரி சரி நான் நார்மல் ஆகிட்டேன் சொல்லு சொல்லு சொல்லு.....” என்று மறுமுனையில் இருந்து கத்தினாள்.

“பொறுமைன்றதே இல்லை” என்று கிண்டல் அடித்துவிட்டு, “ம்ம்ம்ம் சரி நான் என் தேவதையை பார்க்க வரப்போறேன்” என்று நிறுத்தி நிதானமாக கூறினான் நிரஞ்ஜன்.

“ஹேய்ய்ய்ய் தேங்க் யூ” என்று மீண்டும் கத்தினாள். அவளது சந்தோஷத்தை ரசித்தவன் “என்னடி அவ்வளவு தானா?” என்று ஏக்கமாக கேட்க, “வேற என்ன வேணும்? புரிந்தும் புரியாமல் கேட்டாள்...”

“மாமனுக்கு அஞ்சாறு கஞ்சி கிஞ்சி ஊத்துறது....” என்று வடிவேலு குரலில் சொன்னான். “ஓஹோ மாமனா நீங்க....” என்று அவன் கூறியதை ரசித்து சிரித்தவள், “போடா jp” என்று கூறினாள்.

“jp னா?” என்று புரியாமல் கேட்க, “அட இது கூட தெரியாத மக்கா நீ, உன்னையெல்லாம் வைத்து எப்படிதான் சமாளிக்க போறேனோ” என்று கிண்டல் அடித்துவிட்டு. “jp னா ஜொள்ளு பார்ட்டினு அர்த்தம்டா மண்டு” என்று மரியாதையாக கூறினாள்.

“ஒய் யாரை பார்த்து jp னு சொன்ன, நான் ஏகபத்தினி விரதனாக்கும்” என்று வீராப்பாக கூறினான்.

“ஹ்ம்ம் அப்படிதான் நான் நம்புறேன் பாப்போம்....” என்று அலுத்துக்கொண்டாள்.

“ஓவராய் சீன் போடாதடி எங்க ஊரு பக்கம்லா என்னை தூக்கி வைத்துக்கொண்டாடுவாங்க” விறைப்பாக சிலிர்த்துக்கொண்டான்.

“ஓஹோ அப்படி என்ன சார் ஊரு உங்க ஊரு....” என்று பேச்சுவாக்கில் ரகசியம் கறக்க முயன்றாள் தேஜு.

“தி... என்று ஆரம்பித்து ஏய் கேடி என்கிட்டையே விஷயத்தை கறக்க பார்க்குறியா? அதெல்லாம் சொல்ல முடியாது. ஒரு கிராமம் அவ்வளவுதான்” என்று பேச்சை முடித்தான். எப்போதும் போல் ஏமாந்தாள் தேஜு.

நிரஞ்ஜனுக்கு சொந்த ஊர் திருப்பூரின் அருகில் உள்ள ஒரு கிராமம் அவனது பெற்றோர் அவன் சிறுபிள்ளையாக இருந்தபொழுதே இறந்துவிட திருப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் இருந்து பயின்றான். என்னதான் வெகு வருடங்களாக திருப்பூரில் இருந்தாலும் அவனது சொந்த ஊர் என்று யார் கேட்டாலும் அவன் அந்த கிராமத்தை தான் கூறுவான். அவன் நன்றாக படிப்பதை கண்டு ஒரு ngo, அவன் படிப்பிற்கு பணம் தந்தது. என்னதான் விளையாட்டு தனமாக இருந்தாலும் படிப்பில் கவனமாக இருந்தான். தாய் பாசத்திற்கு ஏங்கியவன் தேஜுவின் பாசத்தில் மனம் குளிர்ந்தான், இவை அனைத்தையும் அவள் மடியில் படுத்துக்கொண்டு கூற வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அது போல் ஒரு நாளிற்காக நிரஞ்ஜன் காத்திருக்க தேஜுவின் அடத்தால் இன்றே கூற போகிறோம் என்று கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு.

பார்க்க எளிமையாக இருந்தாலும் தன் பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவான், அப்படி எப்போதும் ஒரு கூட்டதோடே இருந்தாலும் யாருக்கும் இவனை பற்றி உண்மை தெரியாமல் பார்த்துக்கொண்டான். மற்றவர்கள் தன்னை பரிதாபத்தோடு பார்ப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. எல்லாரிடமும் மறைத்தவன் அஸ்வத்திடம் மட்டும் மறைக்க மனமின்றி உண்மையை கூறினான். அதற்கு முன்பே உயிர் தோழர்களாக இருந்தவர்கள் அதற்குபின் தோழமை தாண்டி ஒரு உறவை பகிர்ந்துக்கொண்டனர்.   

மணி 5 என்றது, மதிய நேர வெயில் குறைந்து கொஞ்சம் இதமான காற்று சுற்றிக்கொண்டிருக்க, தேஜு கல்லூரிக்கு அருகில் உள்ள பூங்காவில் காத்திருந்தால். எப்படி இருப்பான் என்று கூட தெரியாது, என்ன உடையில் இருப்பான் என்று கூட கேட்கவில்லை என்று மனம் பேசிக்கொண்டிருந்தது.  எப்படி வந்து பேசுவான் ஹாய் நான் இதை சொல்லியே ஆகணும்னு சூர்யா ஸ்டைல்லயா இல்லை, ஏங்க எனக்கு எங்க அப்பானா தான் பயம் மத்தபடி லவ் யூங்கன்னு ஜெய் ஸ்டைல்லயா என்று தானே நினைத்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். இவள் இப்படி நினைத்து சிரித்துக்கொண்டிருக்க, அவள் வந்த நொடி முதல் அவளையே பார்த்துக்கொண்டு என்ன பேசுவது என்று பயிற்சி பண்ணிக்கொண்டிருந்த நிரஞ்ஜன் நிலைமை இன்னும் மோசம்... பொறுமை இழந்து தேஜு நிமிர்ந்து பார்க்க, தூரத்தில் நிரஞ்ஜன் வந்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் எங்கோ பார்த்த முகம் என்று தோன்ற மூளைக்கு அது நிரஞ்ஜன் என்று எட்டிவிட்ட அடுத்த நொடி அவன் அருகில் சென்றாள்...

“ஹேய்ய்ய்ய் நிரஞ்சன் எப்படி இருக்க? நான் உன்னை இங்க எதிர் பார்க்கவே இல்லை, எப்படி இருக்க? எங்க படிக்குற? எப்பவும் இங்க வருவியா? உன் நம்பர் சொல்லு நோட் பண்ணிக்குறேன்” என்று பேச வாய்ப்பே தராமல் பேசிக்கொண்டிருந்தாள். குனிந்து கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க, அவனிடம் இருந்து பதில் வராமல் போக நிமிர்ந்து பார்த்தாள். அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தவண்ணம் மெல்லிய புன்முறுவலுடன் நின்றிருந்தான். என்னடா இவன் இப்படி பார்க்குறான் என்று புரியாமல் அவள் முழிக்க, “ஓ சாரி சாரி நோட் பண்ணிக்கோ” என்று கூறி ரசனையாக அவளை பார்த்தவண்ணம் தன் நம்பர் தந்தான். அவன் கூற கூற டைப் செய்தவள் பழக்கப்பட்ட எண்ணாக உள்ளதே என்று நினைத்துக்கொண்டிருக்க, அவளது கைபேசி அந்த நம்பர்க்கு உரிய பெயரை வெளியிட்டது. “கள்வன்” என்றது.. அதுதான் அவள் அவனுக்கு வைத்த பெயர். அதை பார்த்து அவள் கண்கள் பெரிதாக விரிய பட்டென அவனை நோக்கினாள், அவன் அவள் செய்கையெல்லாம் ரசித்தவண்ணம் pant பாக்கெட்டில் கைவிட்டவாறு அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அதிர்ச்சியான பார்வை தந்த அவளது விழிகள் மெல்ல மெல்ல மாறி வெட்கமாக மாறியது. அதை பார்த்தவன் மேகத்தில் ஊஞ்சல் கட்டி ஆடினான்.

“ஹே இரு இரு என்ன பெயர் வச்சிருக்க? காட்டு” என்று அவள் அலைபேசியை வாங்க கைநீட்ட அவள் வெட்கத்தில் அவன் மார்பில் புதைந்துகொண்டாள்... மெதுவாக சுற்றிவளைத்த அவனது கரங்கள் மனம் நிறைகுடம் போல் கூத்தாடியதை உணர முடிந்தது. பொறுப்பாக அவளை விளக்கியவன் அவள் முகம் பார்த்து, “உன்கிட்ட நிறைய சொல்லணும் ஸ்ரீ வா” என்றான். 

அவளை அழைத்து சென்று ஒரு மரத்தடியில் அமர வைத்தவன், அவளுக்கு எதிர் புறம் அமர்ந்துக்கொண்டு, அவனது கையை நீட்டினான். அவள் புரியாமல் அவனை பார்க்க, “இப்போ நான் சொல்லப் போறதை உன் மடியில் படுத்து சொல்ல நினைத்தேன் ஆனால் இந்த பிடிவாதம் பிடித்தவள், இந்த இடத்தில் பார்க்க வர சொல்லிட்டாள். சோ இப்போதைக்கு உன் கை கிடைக்குமா?” என்று அவன் கரம் அவள்புரம் இருந்தது. பொய்யாக முறைதவள் தன் கையை கொடுக்க, அதை தன் இரு கைகளுக்கும் இடையில் பிடித்துக்கொண்டு தன்னை பற்றி கூற துவங்கினான்.

அனைத்தையும் அவன் பேசி முடிக்க அமைதியாக கேட்டிருந்தாள். இறுதியில் அவன், “என் அம்மா மடியில் படுத்து கதை கேட்டு தூங்கியது, அவங்க எனக்கு ஊட்டிவிட்டது, சோகமாய் இருக்கும் பொழுது என்னை அரவணைத்துக்கொண்டது எல்லாமே ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு கனவாகவே மாறிவிட்டது ஸ்ரீ... எல்லாருக்கும் ஒரு பிரச்சனைனா முதலில் பகிர்ந்திக்க அம்மா இருப்பாங்க ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை இல்லை ஸ்ரீ, அந்த அரவணைப்பு உன் உருவில் எனக்கு கிடைச்சிருக்கு ஸ்ரீ, எனக்கு என் அம்மாவுக்கு அப்பறம் எல்லாமே நீ தான் ஸ்ரீ... உன்னை என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்வேன் என்னை பிடிச்சிருக்கா?” என்று அந்த மாலை மயங்கிய பொழுதிலும் அவன் விழிகளில் திரையிட்ட கண்ணீர் தெரிய, மனம் பதறிப் போனாள் அவனது ஸ்ரீ.

எழுந்து அவன் அருகில் வந்தவள் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு தனக்குள் இருந்த தாய்மை வெளிவர அவன் சிகை ஒதுக்கி நெற்றியில் முத்தம் தந்தாள்.         

Go to Kadhal payanam # 10

Go to Kadhal payanam # 12

பயணம் தொடரும்...

{kunena_discuss:676}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.