(Reading time: 28 - 56 minutes)

12. காதல் பயணம்... - Preethi

ர்ஷன் நினைத்ததுப் போலவே நடந்தது. வாரவாரம் இதில் சந்தேகம் அதில் சந்தேகம் என்று அஸ்வத்தை பார்க்க வந்திருந்தான். ஓரிரு வாரங்கள் அனன்யா இல்லாமல் சொல்லிகொடுத்த அஸ்வத் அவள் விளையாட்டாக என்றாலும் அதை சொல்லி காட்டுவதை உணர்ந்து அவளையும் அழைத்தான். ஞாயிற்றுக்கிழமை கல்லூரியே வெறுசோடி இருந்தது. வெயிலே தெரியாதது போல் இருந்தாலும் வெக்கையின் தாக்கம் அதிகமாக இருந்தது. அஸ்வத் சொல்லி கொடுக்க ஆரம்பித்தால் நிறுத்தமாட்டான் எண்ணிக்கொண்டு கையில் தண்ணீர் பாட்டிலை எடுத்து சென்றாள் அனு.

Kaathal payanamஎப்போதும் போல் அவர்கள் சந்திக்கும் இடத்திற்கு சென்றாள், அவள் வருவாள் என்று அறிந்த அஸ்வத், தர்ஷன் முன்னிலையில் முகத்தில் பெரிதாக எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. அனுவிற்கும் தர்ஷன் இருப்பான் என்று அறிந்தமையால் எதுவும் சொல்லாமல் இருவருக்கும் பொதுவாக ஒரு “ஹாய்” சொல்லிவிட்டு வந்தமர்ந்தாள். இவற்றை பார்த்துக்கொண்டிருந்த தர்ஷனுக்குதான் கடுப்பாக இருந்தது. நம்மளுக்கு தெரியாம இவங்க தனியா பிளான் போட்டிருப்பாங்க போல என்று நினைத்துக்கொண்டு அமைதியாக வெறும் புன்னகை மட்டும் தந்து பாடத்தை கவனித்தான்.

என்னதான் அஸ்வத்தை பார்க்கவென்று அனுவும், அனுவை பார்க்கவென்று அஸ்வத்தும் இந்த சந்திப்பை ஏற்படுத்தினாலும் படிக்கும் பொழுது இருவரும் சலனபடாமல் இருந்தனர். ஆனால் இவர்கள் முகத்தையே மாத்தி மாத்தி ஓரகண்ணால் பார்த்துக்கொண்டு இருந்த தர்ஷன் தான் படிப்பை கவனிக்கவில்லை, அது அவன் நோக்கமும் இல்லை. அவனுக்கு இவர்களை பிரிக்கவேண்டும், அஸ்வத்தை படிப்பிலும் தோற்கடிக்க வேண்டும், எல்லாம் சேர்ந்து நடந்ததாக நினைத்த தர்ஷன் மகிழ்ச்சியாய் இருந்தான். ஆனால் அதுவும் இப்போது பின்னோக்கி செல்வது போல் தோன்றியது அவனுக்கு.

அவனது நினைப்பிலேயே நேரத்தை கடத்திய தர்ஷன் இருவரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து நிகழ்காலம் வந்தான். ““ஏன் என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க?”” என்று அவன் புரியாமல் கேட்க, ““நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்டேன்”” என்று கூறிவிட்டு அவனையே பார்த்தாள் அனு.

““கேள்வியா? என்ன... என்ன கேள்வி? நீ சொல்லிகொடுத்தது புரிஞ்சது அஸ்வத் ஆனா நியாபகம் தான் வச்சிக்க முடியலை”” என்று மழுப்பி ஏதேதோ சமாளித்தவாறு புத்தகத்தின் பக்ககங்களை திருப்பினான். அவன் கூறியதை கேட்டு இருவரும் சிரிக்க தர்ஷன் புரியாமல் பார்த்தான். அவன் குழப்பத்திற்கு பதில் தரும் வண்ணம், ““அஸ்வத் ஏதாவது கேட்டால்தான் நீ புக் refer பண்ணனும், நான் கேட்ட கேள்விக்கு நீ புக் refer பண்ண முடியாது”” என்று கூறிவிட்டு, ““ரொம்ப தாகமாய் இருக்கு தண்ணீரும் காலி ஜூஸ் குடிக்க போகலாமா?”” என்று எப்போதும் போல் தன் குழந்தை சிரிப்போடு கேட்டாள் அனு.

இதுநாள் வரை அஸ்வத்தை படிப்பிலும், அவனது பிரபலத்தையும் பார்த்து பொறாமை பட்ட தர்ஷன் முதல் முறை அனுவிற்காக பொறாமைப்பட்டான். இதுநாள் வரை அவன் அனுவை கவனித்தது இல்லை. ஆனால் இன்று அவள் பேசி சிரிக்கவைத்தது, சிரித்தது, அவளது குழந்தைதனத்தை நோட்டம்விட்டான் தர்ஷன். பேசிக்கொண்டே மூவரும் கான்டீன் சென்றனர். ““உனக்கு ஆரஞ்சு தானே”” என்று அஸ்வத் அனு எப்போதும் குடிக்கும் பழச்சாறை கூறிகேட்கவும் எப்போதும் போல் புன்முறுவலோடு தலை அசைத்தாள் அனு.

““உனக்கும் pineapple சொல்லிடவாடா?”” என்று கேட்க, ஏதோ நினைப்பில் இருந்தவன் கவனிக்காமலே ““சரி”” என்றான் தர்ஷன், அவனுக்கும் தர்ஷனுக்கும் pineapple மற்றும் அனுவிற்கு ஆரஞ்சு சொல்லி வாங்கி வந்தான்.

மூவரும் அமர்ந்து குடிக்க எத்தனிக்க, நிறத்தை பார்த்தே அப்போதுதான் தர்ஷன் உணர்ந்தான், ““அய்யோ எனக்கு pineapple புடிக்காது”” என்று முகத்தை அஷ்ட்ட கோணத்தில் வைத்துக்கொண்டு கூறினான்.

““நான் கேட்ட போது சரின்னு சொன்ன?”” என்று அஸ்வத் புரியாமல் கேட்க, ஒரு நொடி முழித்தவன் ச்சே என்ன இப்படி கனவுலகத்துல இருக்கோம் என்று தன்னையே நொந்துக்கொண்டு ““அப்போ...”” என்று இழுத்தான்.

““நீ இன்னைக்கு சுத்தமா சரியே இல்லைடா”” என்று விளையாட்டாக கூறிவிட்டு ““சரி வாங்கியாச்சு அட்ஜஸ்ட் பண்ணி இன்னைக்கு மட்டும் குடி”” என்றான் அஸ்வத். அவனது முகம் அஷ்ட்டகோனத்தில் போவதைப் பார்த்த அனு, ““அவனை ஏன் force பண்ற? இந்தா இதை நீ குடி நான் இன்னும் குடிக்கலை”” என்று கூறிவிட்டு அவனிடம் தன் பானத்தை கொடுத்தாள்.

அவனுக்கு வாங்கிய பழச்சாறை அவள் குடிக்க, மனம் குளிர்ந்து போனான் தர்ஷன். என்னவோ அவன் குடித்த மிச்சத்தை அவள் குடிப்பது போல் ஆச்சர்யமாக அவளை பார்க்க, அவள் அதை பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என்றும் இல்லா திருநாளை அன்று முதல் மாறிப்போனது தர்ஷனுக்கு, மெது மெதுவாக அனுவிடம் ஈர்க்கப்பட்டான். அஸ்வத்தும் அனுவும் தோழமை தாண்டி இருப்பது முன்பாவது கண்ணுக்கு தெரிந்தது ஆனால் போக போக அதுவும் மறந்து, அனுவிடம் காதல் என்று அவன் நினைக்கும் தன் ஈர்ப்பை பகிர்ந்துகொள்ள நினைத்தான். அஸ்வத்திடம் இருந்து பார்வை இப்போதெல்லாம் அனுவிடமே சென்றது.

இவன் இப்படி கற்பனையில் இருக்க, அனுவும் சரி அஸ்வத்தும் சரி இவனை கண்டு கொண்டதாக தெரியவில்லை அவனை தவறாகவும் நினைக்கவில்லை அருணுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் அவர்களோடு பெரும்பாலும் தர்ஷன் இருந்தான். ஆனால் அவர்கள் கவனிக்காத ஒன்றை அருண் கவனித்தான். அது தர்ஷனின் பார்வை பெரும்பாலும் அனுவிடமே இருந்தது தான். அவனது சிறுமூளை பெருமூளையை சீண்ட ஆழ்ந்து சிந்தித்து அஸ்வத்தை நாடினான்.

““டேய் மச்சா... என்னடா ரொம்ப பிஸிப் போல?”” என்று தனது மடிகணினியில் தான் எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்த அஸ்வத்திடம் சென்றான்.

““யாரு நானா? நீ தான்டா இப்போவெல்லாம் வில்லன் மாதிரி சுத்தி ஒரு கூட்டத்தை வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்க....”” என்று கிண்டல் செய்தான்.

அவன் கூறியதும் அவன் எதிர்புறம் அமர்ந்தவன் சிறிது முகத்தை சீரியஸ்ஸாக வைத்துக்கொண்டு, ““என்ன பண்றதுடா நம்மளை நம்பி நாலு குடும்பம் இருக்கில்லை அதான் நான் தாதா ஆகவேண்டியதாகிடுச்சு”” என்று கூறவும் அஸ்வத் பலமாக சிரித்துவிட்டான்.

““யாரு நீ தாதாவா?”” என்று கூறி சிரித்தான்.

““தெரியிதில்லை அப்பறம் என்ன? terrora பார்த்தால் கூட தாதா மாதிரி தெரிய மாட்டேன் தாத்தா மாதிரி வேணா தெரிவேன்”” என்று தன்னைத்தானே கொஞ்சம் அசிங்கபடுத்திக்கொண்டான். அவன் பேசுவதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தான் அஸ்வத். அவன் சிரிப்பதையே பார்த்திருந்தவன், ““நானாவது வில்லன் மாதிரி தான்டா தெரிவேன், ஆனால் நீ ஒரு வில்லனை கூடவே வைத்துக்கொண்டு திரிகிறாய்”” என்றான்.

அவன் யாரை குறிப்பிடுகிறான் என்று புரிந்துபோக, ““ச்சே ச்சே அப்படி எல்லாம் ஒருத்தரை பத்தி தெரியாம பேசாதடா”” என்றான் பதிலுக்கு.

““யாரு எனக்கா? உனக்குதான் அவனை பத்தி ஏதும் தெரியலை கொஞ்சம் யோசிச்சு பாரு அஸ்வத், அவன் ஏன் திடிர்னு உன் தோழமை தேடுரானு”” என்று அவன் கூறவும் சிறிது யோசித்தவன், ““இல்லை மச்சா எனக்கு அப்படி தோணலை அவனுக்கு ஃப்ரிண்ட்ஸ் யாருமே இல்லை அதுனால ரொம்ப க்ளோஸ்ஸா இருக்கான் அவ்வளவுதான்”” என்றான் மீண்டும்.

அருண் அலுத்துப்போக, ““சரி அவன் பார்வை அனு மீதே இருக்கு அதையாவது கவனிச்சியா?”” என்று அருண் கேட்க, முன்பே இதை கவனித்த அஸ்வதிற்கு அது பெரிதாக தோன்றவில்லை ஒரு புறம் இருந்து மட்டும் முயற்சிக்கிறான், அனு அவனை அப்படி பார்க்க போவதில்லை என்று அவனுக்கு புரியவில்லையே என்று அவனுக்காக தான் பரிதாபப்பட்டான் அஸ்வத். அதை நினைத்து பார்த்தவண்ணம், ““பார்த்தேன் பார்த்தேன் பாவம்ம்ம்ம்”” என்று அஸ்வத் கூறுவதை, ஆச்சர்யமாக பார்த்த அருண்.

““அலட்சியமா இருக்கலாம்டா ஆனால் இவ்வளவு அலட்சியம் கூடாது. எல்லாம் அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுகிறாள்ன்ற திமிரு, கொஞ்சம் சுத்தி முத்தி பாருங்க சார்...”” என்று விளையாட்டாக சொல்லி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். அஸ்வத்தால் மட்டும் தெரிந்தும் என்ன செய்ய முடியும், இவள் என் காதலி நீ பார்க்காதே என்று எப்படி கூறுவது??? அதை இன்னும் அவன் அனுவிடமே சொல்லவில்லையே....

அவன் சென்றபின் வெகுநேரம் அவன் கூறியதை பற்றி நினைத்தவனுக்கு என்னவோ என்னதான் குழம்பினாலும் தர்ஷனை வில்லனாக பார்க்க தோன்றவில்லை. நடக்கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்ன நடந்தாலும் அனு புரிந்து கொள்வாள் என்ற எண்ணத்திலேயே அந்த உரையாடலை பெரிதுப் படுத்தாமல் விட்டுவிட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.