(Reading time: 17 - 34 minutes)

விடிந்தது. ஆனால் வானில் சூரியவெளிச்சத்தை எப்பவும் மறைத்திருந்தது அந்த கருமேகங்கள். பொம்மு பலதூரம் பாதுகாப்பாக அந்த பயங்கரக் காட்டில் கையில் அந்த வரைபடம் காட்டிய ஒரு பானையின் திசையில் சென்றுகொண்டிருந்தாள். மிகவும் களைப்பில் இருந்தாள். சிறிது நேரமாவது தூங்கவேண்டும் என நினைத்தபடி தள்ளாடி வந்தாள்.

“வா மகளே....” என்று திடிரென ஒரு பெண் குரல் கேட்க உடனே பொம்மு பதறி போய் முன்னே பார்த்தபோது அங்கே ஒரு நான்கு அழகான பெண்கள் அவளை வரவேற்றன. பொம்மு வியந்தபடி அங்கேயே நின்றாள்.

“என்னமா பாக்குற?...நீ ரொம்ப கலைச்சு போயிருக்க.......” – என்றாள் ஒரு பெண்.

“ம்ம்?....நீங்க யாரு?” – பொம்மு குழப்பத்தோடு.

“நாங்க வனதேவதைகள்....நீ இந்த காட்டில அமிர்தத்தை தேடிதான வந்திருக்க?” – இன்னொரு பெண்.

“ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” – பொம்மு ஆச்சர்யத்துடன்.

“இந்த காட்டில நெறையபேர் இப்படிதான் அமிர்தத்தை தேடி வந்தாங்க.....அவங்களுக்கு நாங்கதான்  சரியான பாதை சொல்லி அனுப்புறது வழக்கம்.”  - அந்த பெண்.

“அப்படியா...சரி நான் கிளம்புறேன்.” – பொம்மு நழுவினாள். அவர்களை பார்த்தால் பொம்முக்கு சரியாகப் படவில்லை.

உடனே அந்த நான்கு பெண்களும் ஓடிவந்து அவளை தடுத்தனர்.

“இவ ஒரு பொம்மை...எவ்வளோ அழகா இருக்கா பாரு...கண்கள் மின்னுது....என்ன அழகான ஆடை” என்று அந்த பெண்கள் பொம்முவை மாறி மாறி தூக்கி வைத்து ஆச்சர்யபட்டு கூறினார்கள். பொம்முவுக்கு எரிச்சலுடன் கோவமும் வந்தது. ஒரு பெண் பொம்முவின் கையில் உள்ள வரைபடத்தை பிடிங்கினாள்.

“ஏய்...அத குடு!” என்று பொம்மு கத்தினாள்.

“அட இவளோ கோவப்படுற....அப்போ இதுல என்னமோ இருக்கு....” என்று அந்த பெண் அந்த வரைபடத்தை வாங்கி பார்த்தாள் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை என்பது அவளின் முகத்திலேயே தெரிந்தது.

அந்த வரைப்படத்தை அந்த நான்கு பெண்களும் மாறி மாறி பார்த்தனர். நான்கு பெண்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

“ஏய்...மரியாதையா அத குடுக்க போறீங்களா? இல்லையா?” – பொம்மு கோவத்துடன் கத்தினாள்.

உடனே அந்த நான்கு பெண்களும் பொம்முவை திமிராக பார்க்க ஆரம்பித்தார்கள்.

“அய்யோடா...என்ன மிரட்டுற?...முடிஞ்சா இதை வாங்கிக்கோ “ என்று அந்த பெண் பொம்முவிடம் நீட்டினாள். பொம்மு அதை எட்டி பிடிக்கும் நேரத்தில் அந்த பெண் அந்த வரைப்படத்தை பக்கத்தில் இன்னொரு பெண்ணிடம் தூக்கிப்போட்டாள். இப்படியே பொம்முவை வேருப்பேத்துவ்து போல நான்கு பெண்கள் அந்த  வரைபடத்தை இங்கும் அங்கும் தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

பொம்முவுக்கு பயங்கரக் கோபம் வந்தது. உடனே அருகில் இருக்கும் ஒரு கல்லை தூக்கி ஒரு பெண்ணின் மீது எறிந்தாள். அந்த பெண் “ஆஆஆ!” என்று கோரமாக கத்தினாள்.  காயம் எதுவும் ஆகவில்லை. ஆனால் அவள் கத்தியது ஒரு பெண்ணைப்போல இல்லை. ஏதோ ஒரு குரங்கு கத்தியது போல இருக்க உடனே பொம்முவுக்கு அந்த நான்கு பெண்கள் மீதும் சந்தேகம் வந்தது. அந்த பெண்களும் பொம்முவின் சந்தேகப்பார்வையை சமாளிக்க முகத்தில் போலியான சிரிப்பை கொண்டு வந்தார்கள். ஆனால் பொம்மு முறைக்க ஆரம்பித்தவுடன். இனி வேலைக்காவாது என்று நினைத்த அந்த நான்கு பெண்கள் அவர்களின் உண்மையான உருவத்துக்கு மாறினார்கள். கடைசியில் பார்த்தால் அங்கே நின்றிருந்தது நான்கு குட்டிச்சாத்தான்கள்.

மிகவும் குள்ளம். உடல்முழுவதும் வெள்ளை நிறத்தில் இருந்தது. கண்கள் இல்லை. நீண்ட கருங்கூந்தல். கோரப்பற்கள். தலையில் இரண்டு கொம்புகள். இதுதான் குட்டிச்சாத்தான்கள் என்று பொம்மு அடையாளம் கண்டாள்.

“ஏய் என்ன பாக்குற?....என்ன தைரியம் இருந்தா இந்த காட்டுகுள்ள தனியா வருவ? அதுவும் நாங்க விளையாடுற இடத்துக்கு....அறிவுகெட்ட பொம்மையே...” என்று கீச் குரலில் பேசியது ஒரு குட்டிச்சாத்தான்.  அந்த குட்டிச்சாத்தான் கையில்தான் வரைபடம் இருக்கிறது.

“என்னோட வரைபடத்தை குடுத்திடுங்க....” – பொம்மு முறைத்தபடி.

நான்கு குட்டிசாத்தான்களும் கேலியாய் சிரித்தன.

“இல்லனா என்ன பண்ணுவ பொம்மாயி?” என்று ஒரு குட்டிச்சாத்தான் தலைகிழாய் நின்று கேட்டது.

“நான் சாதாரண பொம்மை இல்ல ...எனக்கு மந்திரம் தெரியும்...” – பொம்மு.

“அப்படியா...அந்த மந்திரத்தை வச்சு நாலு மாம்பழம் கொண்டு வா பொம்மாயி....” என்றது ஒரு குட்டிச்சாத்தான்.

பொம்முவுக்கு கோபம் அதிமானது., உடனே அந்த குட்டிசாத்தான்களை விரட்டி ஓடினாள். அந்த குட்டிச்சாத்தான்கள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து தாவி தாவி ஓட ஆரம்பித்தன. பொம்மு அங்கே இங்கே என குதித்து தாவி சென்று அவைகளை பிடிக்க வேகமாக ஓடினாள். குட்டிச்சாத்தான்கள் குரங்குகளை போல மரத்தில் தாவி சென்றன. ஒருகட்டத்தில் ஒரு செடிபுதர்களின் இடையே பொம்முவும் அந்த குட்டிசாத்தான்களும் ஓடிக் கொண்டிருந்த போது. திடிரென ஒரு குட்டிச்சாத்தான் ஏதோ இடத்தில் எதிலோ மாட்டிகொண்டது. மற்ற குட்டிசாத்தான்களும் பொம்முவும் அப்படியே அதிர்ந்து போய் அந்த மாட்டிகொண்ட குட்டிசாத்தானை வந்து பார்த்தார்கள்.

செடிகளுக்கு நடுவில் ஒரு பெரிய ராட்சத செடி ஒன்று அந்த குட்டிசாத்தானை தன் ராட்சத கிளையால் பிடித்துக் கொண்டு இருந்தது. அந்த ராட்சத செடியின் தலைதான் பெரிய பூ. அந்த பூ இரண்டாக பிளந்து தன் வாயை அகல படுத்தி அனைவரையும் பயமுறுத்தியபடி கத்திக் கொண்டிருந்தது. அதனிடம் சிக்கி கொண்ட குட்டிச்சாத்தான் தொண்டை வலிக்க கத்திகொண்டிருந்தது.

பொம்மு அந்த ராட்சத செடியை ஆச்சர்யமாக பார்க்க அவள் பின்னே நடுக்கத்துடன் வந்து நின்றன மற்ற குட்டிச்சாத்தான்கள்.

“அய்யோ எங்க தலைவரோட பையன் அவன்....பெயர்  கோக்கி....தயவு செஞ்சு அவன காப்பாத்துங்க பொம்மை” – என்று ஒரு குட்டிச்சாத்தான் பயந்தபடி பொம்முவிடம் கேட்டது.

“என்னை ரொம்ப  கோவப்படுத்திடீங்க....” – பொம்மு முறைத்தபடி.

“மன்னிச்சிடுங்க ராஜகுமாரி...எங்க கோக்கிய எப்படியாவது காப்பாத்துங்க...இல்லனா எங்க தலைவர் எங்களை கொன்னுடுவாரு!” என்று அந்த மூன்று குட்டிசாத்தான்களும் பொம்முவின் காலில் விழுந்து அவளது வரைப்படத்தை அவளிடம் ஒப்பைடத்தனர். பொம்முவின் கோவம் குறைந்தது. அங்கே அந்த ராட்சத செடி தன் வாயை பிளந்து குட்டிசாத்தானை முழுங்க முயற்சிக்க அந்த குட்டிசாத்தானோ அதன் வாயை தள்ளி தள்ளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

பொம்மு தன் மாயாஜாலத்தை பயன்படுத்த வேண்டாம் என நினைத்தாள். அடிக்கடி மாயஜாலம் பயன்படுத்தினால் காட்டேரிகள் அதை அவளை மோப்பம் பிடித்து வர வாய்ப்பு உள்ளது.

“ஒரு பாட்டு பாடலாமா?” –  பொம்மு

“அய்யயோ அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லைங்க...தயவு செய்து கோக்கிய காப்பாத்தி குடுங்க.” – குட்டிச்சாத்தான்கள் தவித்தன.

“அட கடவுளே....உங்களுக்கு புரியலையா?....செடிக்கு நல்லா பாட்டு பாடி தூங்க வச்சிடலாமே?” – பொம்மு புன்னகையுடன்.

குட்டிச்சாத்தான்கள் முழித்தன. ஆனால் பொம்மு ஒரு அழகான பாட்டை பாட ஆரம்பித்தாள். உடனே சுற்றி உள்ள சிறிய செடிகள் மரங்கள் பறவைகள் எல்லாம் அவளின் பாட்டுக்கு ஆட ஆரம்பித்தன. சிறிது நேரம் அப்படியே செல்ல ராட்சத செடிக்கு தூக்கம் வந்ததது. உடனே அது அப்படியே தூங்கிக்கொண்டே கையில் உள்ள குட்டிசாத்தானை விட்டது. அந்த குட்டிச்சாத்தானும் குடுகுடுவென ஓடிவந்து பொம்முவின் பக்கம் வந்து நின்று பயத்தில் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது.

பொம்மு அந்த குட்டிச்சாத்தனை பார்த்து புன்னகையுடன் “ கோக்கி...இனிமே செடிகளை மிதிச்சிட்டு ஓட மாட்டியே?” என்றால். அந்த கொக்கி என்னும் குட்டிச்சாத்தான் மெல்ல அவளை பார்த்து சிரித்தது. பொம்மு சுற்றி சுற்றி பார்த்தபோது ராட்சத செடி மட்டுமல்ல அவளின் பாட்டுக்கு அத்தனை மரங்களும் செடிகளும் பறவைகளும் தூங்கிவிட்டன. பொம்மு திரும்பியபோது. அவள் பின்னே இருந்த மற்ற மூன்று குட்டிசாத்தான்களும் பொம்முவின் பாட்டுக்கு மயங்கி உறங்கிக் கொண்டிருந்தன.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.