(Reading time: 17 - 34 minutes)

07. பொம்முவின் தேடல் - லோகேஷ் 

ன்னை பொறுத்தவரை மாதவன் உன்னையும் உன் நண்பன் அரவிந்தையும் கொலை செய்ய தான் எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கான்.” – ராஜேந்திரன்.

Bommuvin thedal“எனக்கும் அப்படிதான் தோணுது...ஆனா ஏன் அவன் எங்களை கொல்ல நினைக்கணும்?...” – பொம்மு.

பொம்மு பேசிக்கொண்டிருக்கும் போதே ராஜேந்திரன் அவள் பின்னே தூரத்தில் ஏதோ ஒரு மரம் எரிவதை கண்டான்.

“என்ன அங்க மரம் எரியுது?” – ராஜேந்திரன்.

பொம்மு திரும்பி அங்கே பார்த்தபோது அவள் துறவீயுடன் தங்கிருந்த அந்த இடத்தில்தான் ஏதோ ஒரு மரம் எரிந்துக் கொண்டிருப்பதை அவள் அடையாளம் கண்டுக்கொண்டாள்.

“அய்யயோ...அந்த இடத்தில்தான் அரவிந்தும் துறவீகளும் தங்கியிருந்தோம்.” என்று பொம்மு அதிர்ச்சியுடன் அங்கிருந்து அந்த எரியும் மரத்தை நோக்கி ஓடினாள். அவள் சிலதூரம் செல்வதற்குள் அவளையும் ராஜேந்திரனையும் தூக்கிக் கொண்டு கழுகுகள் அந்த இடத்தில் விரைந்து வந்து அவர்களை அங்கே சேர்த்தன. அவர்களுக்கு துணையாக பல கழுகுகளும் அங்கே விண்ணில் வட்டமிட்டுக்  கொண்டிருந்தன. பொம்மு அந்த மரத்தை பார்த்தாள். அந்த மரமானது நன்கு எரிந்துக் கொண்டிருக்க அதில் கட்டபட்டிருக்கும் அத்தனை துறவீகளும் சாம்பலாகி இருந்தன. பொம்முவுக்கு அழுகை வந்தது.  அரவிந்தும் அந்த மரத்தில் எரிந்து போயிருப்பான் என்றெண்ணி அவள் கதறினாள். ராஜேந்திரன் சுற்றி சுற்றி அங்கே என்ன நடந்திருக்கும் என அதிர்ச்சியுடன் ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

“அழாத பொம்மு....முதல்ல இங்க என்ன நடந்ததுன்னு நாம தெரிஞ்சுக்கனும்.....” – ராஜேந்திரன் அவளின் தோளில் கைவைத்தபடி.

“எப்படி தெரிஞ்சுக்கறது? அதான் எல்லாருமே இறந்துட்டாங்களே...” – பொம்மு தேம்பியபடி.

“நிலம் தொட்ட  நியாபகத்தை வச்சு இங்க என்ன நடந்துச்சு பாரு...” – ராஜேந்திரன்.

“என்ன சொல்றீங்க?....நிலம் தொட்ட  நியாபகம்ன்னா?” – பொம்மு

“இது ஒரு மந்திரவித்தை....உன்னோட காலடிகள் இந்த இடத்தில ஏற்கனவே பதிஞ்சு இருந்துச்சுனா அந்த காலடிகள் மூலமா இந்த இடத்தில் என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க முடியும்....உன்னால மாயஜாலம் பண்ண முடிஞ்சா நீ இதை செஞ்சு பாரு” – ராஜேந்திரன்.

பொம்மு அதை கேட்டு வியந்தாள். தன்னுடைய காலடிகளை தேட ஆரம்பித்தாள். உடனே அங்கே அவளின் சிறிய காலடிகள் நிறைய காணப்பட்டது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து. அதனருங்கே சென்று மண்டியிட்டாள். ஆனால் என்ன செய்வதென்று புரியாமல் ராஜேந்திரனை பார்த்தாள்.

“அந்த காலடி மேல உன் தலையை வை....உன்னோட மந்திரசக்தி  உனக்கு கனவு மாதிரி ஏதாவது காட்டும்.” – ராஜேந்திரன்.

பொம்மு தன் கண்களை மூடி அந்த காலடியில் தன் தலையை வைத்தாள். அவளுக்கு சிறிது நேரத்தில் எதோ ஒரு கனவு போல் வந்தது. போல் இருந்தது. அதில் அவள் அங்கே நடந்த எல்லா சம்பவத்தையும் கண்டாள்.

அங்கே துறவிகளை பிடித்த காட்டேரிகள் அவர்களை மரத்தில் கட்டிப்போட்டது. அந்த இடத்தில் வந்த அரவிந்துக்கும் ஷானுதாவுக்கும் மாதவனுக்கும்  நடந்த பேச்சு. கடைசியில் ஷானுதா துறவிகளை மரத்தில் எரித்து சென்றது. மாதவன் அரவிந்தை தன்னுடன் கூட்டிச்சென்றது என எல்லாவற்றையும் தெளிவாக கண்டாள் பொம்மு.

பொம்முவுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. தன்னுடைய நாலாவது ஜென்மம்தான் பைரவனா ? தனக்கு மொத்தம் 6 ஜென்மங்கள்தானா? அதிலும் இந்த ஜென்மம் தான் கடைசி ஜென்மமா? என்று அந்த உண்மைகளை நம்பமுடியாமல் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள் பொம்மு.

“என்ன ஆச்சு பொம்மு?” – ராஜேந்திரன் அவள் அருகில் வந்து.

பொம்மு நடந்த எல்லாவற்றையும் அவனிடம் கூறினாள். ராஜேந்திரனும் அதிர்ச்சியில் இருந்தான்.

 “என்ன சொல்ற பொம்மு உனக்கு மொத்தம் 6 ஜென்மங்கள்தானா?....உலகில் பிறந்த எல்லோருக்கும் 7 ஜென்மம் எடுக்க வாய்ப்பு இருக்கும்போது உனக்கு மட்டும் ஏன் 6 ஜென்மம்? ” – ராஜேந்திரன்.

“அதான் எனக்கும் புரியலை...ஒருவேளை அது உண்மைனா இதுதான் என்னோட கடைசி ஜென்மம்...என்னையும் அவ அழிச்சிட்டா என்னோட பிறவி காலம் முடிஞ்சுது...” – பொம்மு.

“நீ அந்த ஷானுதாவை பாத்தியா?...இதுவரைக்கும் நான் அவளை பத்தி கேள்விபட்டிருக்கேன் ஆனா பாத்ததில்லை” – ராஜேந்திரன் ஆச்சிரியமாக.

“கொடூரமான  குணம் கொண்டவ அந்த சூனியக்காரி.....இதுக்கு முன்னாடி என்னோட 5 ஜென்மகளையும் அழிச்சிட்டா...இப்போ கடைசியா...என்னையும் அழிக்கிறதுதான் அவளோட அடுத்த வேலையா இருக்கும்...அவளை பார்த்தா எதுக்கும் அஞ்சாதவ போல தெரியுது.” – பொம்மு வெறுப்பாக.

“உன்னோட அத்தனை ஜென்மங்களையும் ஷானுதா அழிக்க நினைக்கணும்?...அதனால அவளுக்கு என்ன பயன்?” – ராஜேந்திரன்.

“எதாவது நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்....என்னை கொல்றதால அவளுக்கு எதாவது சக்தி கிடைக்கலாம்......இல்லைனா எனக்கும் அவளுக்கும் எதாவது ஜென்ம பகை இருந்திருக்கணும்.” – பொம்மு.

“பைரவன்தான் உன்னோட நாலாவது  ஜென்மம்....ஆனா அது உனக்கே தெரியாம போச்சு..” – ராஜேந்திரன் வருத்ததுடன்.

“பைரவனை அவள் ரொம்ப காலமா அழிக்க பாத்திருக்கா...ஆனா பைரவனை அவளால அழிக்க முடியலை....அப்படினா பைரவனுக்கு ஏதோ ஒரு சக்தி இருந்திருக்கு...நான்தான் பைரவன் ....அதனால பைரவனோட ஜென்மரகசியத்தை என்னால படிக்க முடியும்.... ஆனா  பைரவனோட உடலை உங்க கழுகுகள்தான் எங்கோ தூக்கிட்டு போச்சு...அந்த உடல் இப்போ எங்கே இருக்கு?” – பொம்மு யோசித்தபடி.

“அந்த உடலை மாதவன்கிட்ட குடுத்தாச்சு...அவன் அந்த உடலை அதோட நாட்டுக்கு கொண்டு போய் அது வாழ்ந்த இடத்தில அடக்கம் பண்ணிட்டான்” – மாதவன்

“எந்த நாடு அது?” – பொம்மு.

“மேற்கு பக்கம் இருக்கிற கனிஸ் என்னும் நாடு” – ராஜேந்திரன்.

பொம்மு யோசித்தாள்.

“என்ன யோசிக்கிற பொம்மு” – ராஜேந்திரன்.

“அரவிந்தை நான் எப்படி காப்பாத்துறது?” – பொம்மு.

“உனக்கென்ன பைத்தியமா?....உன்னை நம்பாமல் அந்த பையன் அந்த மாதவன்கூட போயிட்டானே...” – ராஜேந்திரன் சத்தமாக.

“இல்ல. அப்படி இருக்காது.....அரவிந்த் வேறவழியில்லாம அவனோட போயிருக்கான்...அவன் என்னை நிச்சயமா எதிர்பார்த்துகிட்டு இருப்பான்.” – பொம்மு.

“சரி...நீ சொல்றது உண்மைனா....நானே போய் அரவிந்தை காப்பாத்திகிட்டு வறேன்” – ராஜேந்திரன்.

“உண்மையாவா சொல்றீங்க?” – பொம்மு ஆச்சிரியமாக.

“ஆமாம்...எனக்கு மாதவன் இருக்கிற இடத்தை சுலபமா கண்டுபிடிக்க முடியும்....” – ராஜேந்திரன்.

“அப்போ நானும் வருவேன்...” – பொம்மு.

“இல்ல....இது ரொம்ப ஆபத்து ...ஒருவேளை மாதவனோட ஷானுதா இருந்தா...உன் உயிருக்கு ஆபத்து...நீ அமிர்தப்பானைகளை தேடி போ!” – ராஜேந்திரன்.

“சரி....ஆனா உங்களுக்கு எந்த ஆபத்தும் வராம பாத்துகோங்க...முக்கியமா அரவிந்தை எப்படியாவது பாதுகாப்பா கூட்டிட்டு வாங்க.....” – பொம்மு.

“கண்டிப்பா...ஆனா உன்னோட மாயாஜாலத்தை இந்த காட்டில அடிக்கடி பயன்படுத்தாதே.....அந்த மாயாஜாலத்தை மோப்பம் புடிச்சு  காட்டேரிகள் உன்னை தேடி வந்தாலும் வரலாம்.” – ராஜேந்திரன்.

“சரி...முடிஞ்சவரை நான் மாயாஜாலத்தை பயன்படுத்த மாட்டேன்!” – பொம்மு.

ராஜேந்திரன் தன் இரண்டு கைகளை உயர்த்தியவுடன் ஒரு ராட்சதக் கழுகாக உருமாறி விண்ணில் எங்கோ பறந்தான். அவனுடைய கழுகுகள் அவனை தொடர்ந்து செல்ல ஆரம்பித்தன.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.