(Reading time: 34 - 67 minutes)

ஹே என்னடி நீ பாட்டுக்கு வந்து ஒக்காந்திட்ட???”

“ஏன் வேற என்ன பண்ணனும்?”

“வெட்க பட்டுட்டே வரணும், காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும் இதெல்லாம் பண்ணாம ஜாலியா ஒக்காந்திட்ட??” என்று போலியாக அதிகாரமாக அர்ஜுன் கேட்டான்.

“என்னாளலாம் காலுல விழ முடியாதுப்பா” என்று விறைப்பாக கூறிக்கொண்டு அமர்ந்தவாறு மெத்தையில் கைகளை ஊன்றிக்கொண்டாள்.

“ரொம்ப திமிரு தாண்டி உனக்கு”

“அப்படி தான் பண்ணுவேன் என்ன பண்ணுவீங்க?” என்று பதிலுக்கு வாதாடியவாறு முறைத்தாள் அஹல்யா

சிறிது நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, இருவரின் முகமும் மலர்ந்துவிட்டது. அர்ஜுன் கைகள் விரித்து அவளை அழைக்கவும், அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள் அஹல்யா. சில நிமிடங்கள் அந்த சுகத்தை அனுபவித்த இருவரும் மௌனமாக நேரத்தை கடத்தினர். முதலில் அந்த மோன நிலையை கலைத்த அர்ஜுன் அவள் கன்னம் தொட்டு முகத்தை உயர்த்த, சந்தோஷம் நிறைந்த கண்களோடு பார்த்தாள் அஹல்யா. அவளது நெற்றியில் ஆசையாய் இதழ் பதித்தவன், “வெளியே எல்லாரும் நான் முதல் இரவுன்ற சந்தோஷத்தில் இருக்கேன்னு நினைச்சு கிண்டல் பண்ணாங்க ஆனால் எனக்குள்ள தெரியும் அந்த ஆனந்தம் என்னோட மனைவி ஆன என் காதலியை பார்க்க போற ஆனந்தம்னு” என்று காதலோடு அவளை பார்த்துக்கூறினான் அர்ஜுன்.

அவனது அருகாமையும் வார்த்தைகளும் மனதை குளிர செய்ய, “ஆமா அஜு என்னையும் அப்படிதான் கிண்டல் பண்ணாங்க... பாவம் அவங்களுக்கு தான் தெரியல நம்ம இன்னைக்கு fulla பேசிட்டே இருக்க போறோம்னு” என்று பேசும் ஆர்வத்தில் அவள் கூற... அவள் வார்த்தை கேட்டு அதிர்ந்தான் அர்ஜுன். “என்னது இன்னைக்கு fulla பேசுறதா? ஏய் இதை தானேடி இத்தனை நாள் பண்ணின??? இன்னைக்கும் உன்னை நான் பேசவிடுவேன்னு எப்படி நினைக்கலாம்?!” என்று அவன் ஆதங்கத்தோடு கூறினான். அவன் சிணுங்குவதை பார்த்தவளுக்கு சிரிப்பாக இருந்தது.

“அப்பறம் என்ன அஜு பண்ண போறோம் தூங்க போறோமா? எனக்கு தூக்கம் வரலையே?!” என்று பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு அவனது லியா கூற, கொஞ்சம் கொஞ்சமாக மயங்க துவங்கினான் அர்ஜுன்.

“உனக்கு தூக்கம் வந்தாலும், தூங்க விடாம பார்த்துக்கொள்ளதான் நான் இருக்கேனே” என்று கண்ணடித்து அவள் நெத்தி முட்ட அவன் பார்வையில் வெட்கம் வந்து அவன் நெஞ்சுக்குள் முகம் புதைத்தாள் அஹல்யா.

வேறு மலரிடம் மயங்காத வண்டும், வேறு வண்டினை அனுமதிக்காத மலரும் அந்த ரம்யமான இரவு நேரத்தில் ஒன்று சேர்ந்தது. வண்டோ மலரிடம் மயங்க, மலரோ தான் தோற்பது போல் தோர்த்து வண்டினை ஜெய்க செய்தது. இருவரும் மகிழ்ச்சியோடு தங்கள் இல்லற வாழ்க்கையை இனிமையாக துவங்கினர்.

காலை விடியல் இருவருக்கு மட்டும் மிகவும் புதுமையாக தோன்றியது. எழ மனமே இன்றி மெத்தையில் புரண்டு படுத்தவன் அருகில் அஹல்யா இல்லாததை உணர்ந்து அறையை சுற்றி முற்றி பார்த்தான், அதுக்குள்ளவா எழுந்திட்டாள்? என்று மனம் தேடியது. இவன் விழித்து தேடிக்கொண்டிருக்க, அஹல்யா தலையில் துண்டை கட்டியவாறு, ஒரு சேலை அணிந்து குளியல் அறையில் இருந்து வெளியே வந்தாள். என்றுமே அவள் அழகு தான் ஆனால் இன்று அவன் கட்டிய மஞ்சள் கயிறு கழுத்தில் மிளிர, புதியதாய் மெருகேறி அழகாய் தெரிந்தாள்.

தன்னை கண்ணெடுக்காமல் பார்க்கும் தன் கணவனை விழிகளால் சிறிது நேரம் பருகிவிட்டு “என்ன பாத்துகிட்டே இருக்கீங்க... எழுந்துரிங்க போய் குளிங்க” என்று அவனுக்கும் உடைகளை எடுத்தவாறு அவனை எழுப்பினாள்.

“இன்னைக்கு ரொம்ப அழகாய் இருக்கடி”

“ஏன் இத்தனை நாள் அழகாய் இல்லையா?” என்று பொய்யாக முறைத்தவாறு கேட்டாள்

“இல்லாமலா மயங்கினேன்... ஹ்ம்ம்ம் ஆனால் இன்னைக்கு....” என்று அவன் இழுக்க வெட்கத்தில் கன்னம் சிவந்தாள் அஹல்யா.

“சரி சரி போதும் எழுந்திரிங்க” என்று கஷ்ட்டப்பட்டு அவனை எழுப்பி குளியல் அறையில் தள்ளினாள் அவள். அவன் உள்ளே செல்வதற்கும் அவர்களின் கதவு தட்டபடவும் சரியாக இருந்தது. கதவு திறக்கவும் வெளியே துளசி நின்றிருந்தாள், “எழுந்திட்டியா அஹல் தூங்கிட்டு இருப்பனு நினைச்சேன்”

“இல்லைமா நான் அப்பவே எழுந்திட்டேன்”

“மாப்பிள்ளைக்கு காப்பி கொடுக்கிறியா?”

“அவர் குளிக்குராரும்மா வரட்டும்...” என்று பொதுவாக பேச்சு போக, கொஞ்சம் கொஞ்சமாக வாலு கூட்டங்களெல்லாம் எழுந்தன.

அவள் வெளியே அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறு காபி அருந்த, “என்ன அண்ணி தூங்கவே இல்லை போல...” என்று கிண்டல் செய்தவாறு அனுவும் அவளை தொடர்ந்து தேஜு, அர்ச்சனாவும் வந்தனர். இவர்கள் எழுந்தால் எனவெல்லாம் கிண்டல் செய்ய போகிறார்களோ என்று தான் அப்போது அஹல்யா நினைத்துக்கொண்டிருந்தாள்.

“யாரு சொன்னது நல்லாஆஆ தூங்கினேனே...” என்று அவளை போல் ராகத்தோடு கூறினாள் அஹல்யா.

“ஏன் அர்ச்சனா அக்கா, நல்லா தூங்கினால் கண்கள் சிவந்திருக்குமா என்ன?” என்று அவளை பார்த்தவாறே அனு கேட்க... “அடடா இப்படி வாய் பேசும் என் நாத்தனார் திருவிழாவில் மட்டும் ஏன் அவ்வளவு அமைதியாய் இருந்தாளாம்” என்று அவளை பதிலுக்கு சீண்டினாள்.

“அண்ணி... டாபிக்க மாத்தாதிங்க” என்று தடுமாறினாலும் சமாளித்தாள் அனு.

“ஹே அது என்ன திருவிழா கதை எனக்கு தெரியாமல்” என்று தேஜு ஆரம்பித்தாள். அதற்கு அஹல்யா “உனக்கு தெரியாதா தேஜு சிலர் கண்பார்வை பட்டால் மட்டும் பேச்சிழந்து போகுமாம் சிலருக்கு...” என்று அனுவை பார்த்தவாறு கூறினாள் அஹல்யா..

“அண்ணி சும்மா இருங்க அண்ணி” என்று அவள் சிணுங்க ஆரம்பிக்க, “ஹே நீ சும்மா இருடி அண்ணி நீங்க சொல்லுங்க அண்ணி எப்படி வெட்கபட்டாள்???” என்று தேஜு ஆர்வமாக கேட்டாள்.

அவளது ஆர்வத்தை பார்த்து அனுவிற்கு கோவம்வர, “ம்ம்ம்ம்ம் நேற்று மண்டபத்தில் நீ வெட்கபட்டீல அந்த மாதிரித்தான்” என்று அனு பேச்சை இடைமறித்தாள்.

அதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா, கண்கள் விரிய “அடப்பாவிங்களா?! ஒருத்தர் கூட என்னை மாதிரி இல்லையா???” என்று விளையாட்டாய் கேட்டாள்.

“ம்க்கும் இருந்திட்டாலும்...” என்று கொஞ்சம் அழுத்துக்கொண்டே கையில் காபி கோப்பையுடன் நவீன் வெளியே வர அவனை தொடர்ந்து அர்ஜுன், அஸ்வத், நிரஞ்ஜன் வந்தனர். நவீன் அர்ச்சனா விஷயம் பொதுவாக அனைவருக்கும் தெரிந்தமையால் யாரும் அதற்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தனர்.

“ஏன் இருந்தால் என்ன? என்ன குறைந்து போகும்?” என்று அவள் சண்டைக்கு வர, “ஒன்னும் இல்ல தாயி ஒண்ணுமே இல்லை நீ காபி குடி” என்று நவீன் பேச்சை முடித்தான். ஆனால் விடாமல் அர்ச்சனா முறைத்துக்கொண்டே இருக்க, அஸ்வத் பேச்சை மாற்றினான். “சரி சரி சாய்ந்தரம் receptionக்கு எல்லாரும் தயார் தானே அப்பறம் அது வாங்கணும் இது வாங்கனும்னு சொல்ல கூடாது” என்று அறிவித்தான்.

“நீ சொல்லித்தான் ரெடி ஆகணும்னு இல்லை எல்லாம் அவங்க அவங்களுக்கே தெரியும்” என்று வேண்டும் என்றே வம்பிற்கு வந்தாள் அனு. பதிலுக்கு அஸ்வத் சண்டை போட வாய் திறக்க, அர்ஜுன் தலையில் கைவைத்துவிட்டான் “எப்பா.... இந்த சின்ன பசங்களை சமாளிக்க முடியலையே ஆண்டவா...” என்று அலுத்துக்கொள்ள அனைவரும் சிரித்துவிட்டனர். அதற்கு பின் நேரம் கொஞ்சம் இலகுவாக கரைந்தது. அப்படி முறைத்துகொள்வதும் சண்டை போட்டுகொள்வதும் அவர்களுக்கு பிடித்தமான ஒன்று என்று அர்ஜுனுக்கு தெரியாமல் போனது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.