(Reading time: 34 - 67 minutes)

திருமணத்தை போலவே வரவேற்பு விழாவும் அருமையாகவே நடந்தது. திருமணத்தன்று எல்லா பெண்களும் பட்டுபுடவைகளில் மிளிர்ந்து ஆடவர்களை மயக்க, வரவேற்பு விழா அன்று designer சேலைகள் கட்டி ஜவுளிக்கடை பொம்மைகள் போல் அழகாக அங்கும் இங்கும் சுத்தினர்.

மேகங்களை போல் தூய்மையான வெள்ளை நிறத்தில் வெள்ளி சரிகை போல் பூ பூவாய் உடலெங்கும் போட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட சேலையை உடுத்தி அதற்கு பொருத்தமான நகைகள் அணிந்து அழகாய் சுற்றி திரிந்த தேஜுவையே நிரஞ்ஜனின் கண்கள் தொடர்ந்தது. அவன் பார்ப்பதும் இவள் வெட்கபடுவதுமாக கரைந்தது நேரம். இப்படி பார்வையிலேயே நேரத்தை கடத்தி கடத்தி பொறுமை இழந்தான் நிரஞ்ஜன்.

அவன் பார்வை தன்னை அழைப்பது தெரிந்தும், அருகில் இருந்த பெற்றோரை கண்களால் காட்டி முடியாது என்று விழிகளால் மறுத்து நல்ல பெண் போல் அமர்ந்திருந்தாள். விழா ஒருபுறம் அமைதியாக நடக்க, அடர்ந்த மரூன் நிறத்தில் தன் நிறத்தை மேலும் எடுத்துக்காட்டும் அளவிற்கு அழகிய சேலை கட்டி அர்ச்சனா மட்டும் பெண்ணிற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தாள். வரவேற்பில் மணமக்களின் பெற்றோர்கள் நின்று கவனித்துக்கொள்ள, திருமணத்தை விட வேலைகள் கம்மியாகவே இருக்க, அவ்வப்போது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். தேஜுவின் பெற்றோரும், அன்பரசியும் தங்களால் முடிந்த உதவி அவ்வப்போது செய்ய, வேலை பளு குறைந்தது, சிறிது நேரத்திலேயே கூட்டமும் குறைந்தது. அனைவரின் பெற்றோரும் நிம்மதியாக அமர்ந்தனர், மண்டபம் சொல்லி இருந்த நேரம் முடிய இன்னும் வெகுநேரம் இருப்பதால் தங்களுக்குள் கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

அனு அவள் வாங்கிய ரோஜா நிற சேலையை அணிந்து அதற்கு பொருத்தமான அணிகலன்களும் போட்டு, ரோஜா இதழ்களில் பனி அமர்ந்திருப்பது போல கண்ணிற்கு குளிர்ச்சியாய் வெளியே வந்தாள். அந்த புடவையில் வேலைபாடுகள் அதிகமாக இருக்க நடக்கவே சிரமப்பட்டு பொறுமையாக வந்தாள். எங்கோ வெளியே செல்ல புறப்பட்ட அஸ்வத்தின் கண்கள் அவளையே தொடர்ந்தது. அவள் சிரமப்பட்டு நடப்பதும், அதற்கேற்றார் போல் முகபாவனை கொடுப்பதும், கையில் அணிந்திருக்கும் வளையல்கள் சிணுங்குவதும், கன்னத்தில் விழுந்து முத்தம் தரும் சிகையை ஒதுக்குவதும் என்று அவள் அசைவுகள் எல்லாம் அஸ்வத்தை கொன்றது. அதே நேரம் அவள் விழிகள் நிமிடத்திற்கு ஒரு முறை அறையையே அவனை தேடி சுழன்று வருவதும் என்று பார்க்கவே உவகை தோன்றியது அஸ்வத்திற்கு... சிறிது நேரம் அவளை கண்களால் புகைப்படம் எடுத்துவிட்டு இதோ இப்போ வந்திடுறேண்டி என் செல்ல அழகி... என்று அவளை மனதில் கொஞ்சி, மனமின்றி வெளியே சென்றான். பொறுமையாக வந்தவள் தேஜுவின் அருகில் அமர, அவள் முகத்தை தொங்கவிட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து மெதுவாய் விசாரித்தாள்.

“ஹே என்ன உம்முன்னு இருக்க?”

“ஒன்னும் இல்லடி” என்று சோகமாக கூறினாள்.

“என்கிட்ட ஏன்டி மறைக்குர? என்ன விஷயம்?” என்று அவள் கேட்க, அவள் கண் உயர்த்தி நிரஞ்ஜனை பார்த்தாள் அனுவிற்கு இப்போது புரிந்து போக, “சரி வெளியே வர சொல்லு நம்ம போகலாம்” என்று அமைதியாய் அனு கூற, முகத்தில் ஆனந்தம் பொங்கியது தேஜுவிற்கு... அதை கண்டு திருப்தியானவள் கூடவே எழுந்து சென்றாள்.

நிரஞ்ஜனும் வெளியே வந்துவிட, “ஹே கடைசியில் இந்த வேலை செய்ய வச்சிட்டியேடி” என்று கிண்டல் செய்தவாறு “சரி சரி சீக்கரம் வந்திடுமா மணிகணக்காய் மயங்கி இருக்காதே” என்று கண்ணடித்து கிண்டல் செய்தாள் அனு.

மெல்லிய ஒளியில் ரகசியமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர் தேஜுவும் நிரஞ்ஜனும்.

நிரஞ்ஜன் பேசாமலே அவளை பருகுவதை போல் பார்க்க, தேஜுவிற்கு தான் தடுமாற்றம் அதிகமாக இருந்தது.

“இப்படி பாத்திகிட்டே இருக்க தான் கூப்பிட்டியா?” என்று அவள் மெல்லிய குரலில் கேட்டாள்.

“நான் என்ன செய்ய என்னை பேசவிடாமல் நீ தான் மயக்கிடுறியே ஹ்ம்ம்....” என்று தன்னை சிரமப்பட்டு கட்டுபடுத்தினான். அவன் செயல்கள் எல்லாம் தன்னையும் மயக்க, பேச்சை மாற்ற நினைத்தாள். “சரி நீ பேசுகிற மாதிரி தெரியலை நான் கிளம்புறேன் அனு காத்திக்கிட்டு இருக்காள்” என்று நகர முற்பட அவளை செல்லவிடாமல் வழியை மறைத்து நின்றான்

“நிரஞ்ஜன் விளையாடாத யாராவது பார்த்தாள் பிரச்சனை ஆகும்” என்று கொஞ்சம் கண்டிப்போடு சொல்ல, அவனுக்கும் மனம் இளகியது “நான் என்ன முத்தமா கேட்டேன், கொஞ்ச நேரம் பேசிட்டு போ ஸ்ரீ” என்று தன் ஆசையை மறைமுகமாக கூறினான்.

“ஆஹா அந்த ஆசை வேற இருக்கா? குடுப்பேன் குடுப்பேன் கண்ணதிலேயே நாலு குடுப்பேன்” என்று விளையாட்டாக திட்டினாள்.

“அதைதான் நானும் சொல்றேன், மாமா கண்ணை மூடிபேணாம் சமத்தாய் நீ வெட்க படாமல் ஒரு முத்தம் தருவியாம்” என்று கிண்டல் செய்தான்.

“ஹய் இதைபாருடா உதைதான் விழும்” என்று போலியாக மிரட்டிக்கொண்டிருந்தாள். இருவரும் இப்படி விளையாட்டாக மற்றவரை வம்பிழுத்து பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

தூரமாக மேசைமேல் சாய்ந்து நின்று பார்த்த அனு, அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேடையில் கண்கள் செலுத்தினாள் அங்கு திருமணம் ஆன ஜோடி இரகசிய பேச்சுகளும் வெட்க சிரிப்புமாக நேரத்தை கடத்தியது, அங்கிருந்து பார்வை கிழே செல்ல நவீனின் யோசனையான பார்வை அர்ச்சனாவை தீண்டுவது தெரிந்தது. எப்போதும் காதல் பார்வை தானே இருக்கும் இது என்ன புதியதாய் என்று நினைத்துக்கொண்டவள் அதற்கு பின் அதில் மனம் செலுத்தவில்லை. சிறிது நேரம் சுற்றும் முற்றும் பார்த்தவள், ஹ்ம்ம் எல்லா ஜோடியும் நல்லாத்தான் இருக்கு, எங்க இந்த அஷ்குட்டியை காணம் கொஞ்சமாவது பொறுப்பிருக்கா, எப்போதும் சுத்தி சுத்தி வருவான் இன்னைக்கு என்ன ஆளையே காணம் என்று விழிகளால் தேடிக்கொண்டிருந்தாள்.

“யாருப்பா அது அனுவின் கண்ணில் படாமல் தேட வைக்குறது?” என்று யாரையோ தேடுவது போல பாவனை செய்தவாறு அருகில் வந்து நின்றான் அஸ்வத். அவனும் அறிவான் அவள் அவனைத்தான் தேடுகிறாள் என்று இருப்பினும் அவளிடம் விளையாட தான் அவனுக்கு பிடிக்குமே அதையே தொடர்ந்தான்.

“வெளியே கொஞ்சம் வேலை அதான் வெளியே போயிருந்தேன்”.

“நான் கேட்கவே இல்லையே”

“இல்லை நீ கூட என்னைத்தான் ஆவலாக தேடுரியோனு பார்த்தேன்”

“உன்னையா? நான் ஏன் தேடனும்?” அலட்சியமாக கூறினாள்

“ஒரு இதுக்காகதான்...” என்று அவன் விஷமமாக கூறவும், கண்கள் விரிய அவனை பார்த்துவிட்டு “ஹலோ எதுக்காக தான்???” என்று ஆச்சர்யமாக கேட்டாள்

“பேச்சுத்துணைக்காக தான் ஏன் அனு! வேற என்ன நினைச்ச” என்று ரகசிய புன்னகையோடு கேட்டான்

அவன் கூறிய பதிலில் சிரிப்புவர, “சரியான கல்லூளிமங்கன்தான்” என்று மெதுவாக கூறினாள். அவள் கூறியது அவன் காதிலும் விழுந்தது அவனும் ரகசிய முறுவலோடு நிறுத்திக்கொண்டான். இரவு நேர காற்று அவர்களை கடந்து செல்ல, அமைதியாய் அனுபவித்து நின்றனர் இருவரும்.

“வாயேன் கொஞ்சம் வாக்கிங் மாதிரி போயிட்டு வரலாம்..”

“எங்கே வெளியவா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள் அனு.

“இப்படி எல்லாத்துக்கும் கண்ணை உருட்டி உருட்டி பார்க்காதடி” என்று அவளை மயக்கும் சிரிப்போடு அவள் கண்ணை பார்த்து பாதி மயக்கத்தோடு கூறினான் அஸ்வத் அவள் புரியாமல் “ஏன்” என்று கேட்க, “உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்” என்று கூறி இருவரும் பொறுமையாய் மண்டபத்தின் முன் இருக்கும் இடத்தில் மெதுவாக நடக்கதுவங்கினர். பேச்சுக்கள் இல்லாத மௌனம், மனம் இறகை போல் சுமையின்றி பறந்தது, அருகருகே நடந்த இருவரின் கைகளும் அவ்வபோது இடித்துக்கொள்ள அதையும் உணராது ஒருவித லயப்பில் இருந்தனர்.

கண்கள் நிமிர்த்தி அனுவின் முகம் பார்த்தவன் “அனு..” என்று இதமாய் அழைத்தான்..

“ம்ம்ம்ம்” என்று நிமிர்ந்து பார்த்தவள் அவன் விழிகள் ஏதோ சொல்ல தவிப்பதை உணரமுடிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.