07. என்னுயிரே உனக்காக - சகி
மெல்லிய,மென்மையான சிணுங்கல்.சில்லென்று மனதை இதமாக வருடித் தரும் சிணுங்கல்.காதோடு காதல் பேசும் சிணுங்கல்.என்ன அந்த சிணுங்கல்?காற்றா...?கவிதையா...?கனவா...?மெல்ல ஜன்னல் திரைச்சீலையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தான் ஆதித்யா.அவன் கன்னத்தை வருடி தந்தது,ஆடி மாத குளிர்ந்த காற்றுடன்,கூடிய மழைச்சாரல்.அவனுள் புகுந்து சென்ற அந்தக் காற்று,அவன் ஆழ்மனதுள் ஆழமாக ஊடுருவியது.சில்லென்ற இதமான அந்த சூழலில்...மிகுந்த நாட்களுக்கு பிறகு,ரசனையோடு அதை ஏற்றுக் கொண்டது அவன் மனம்.சட்டென்று நினைவு வந்தவனாய்! மதுபாலாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான்.
"ஹலோ...!"
"என்னடி பண்ற?"
"வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கேன்."
"எதை?"
"மழை பெய்துல !"
"நனையப் போறீயா?"
'நனையலாம்....ஆனா.??"-ஆதித்யா ஏதோ புரிந்தவனாய்,
"நீ மழையில நனைந்தால்,நான் வேடிக்கைப் பார்க்க தான் செய்வேன்."
"என்ன?"
"மழையை வேடிக்கைப் பார்ப்பேன்னு சொன்னேன்."
"ஆஹா....நல்ல சமாளிக்கிற."
"ஹே...அம்மூ...! உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டா?"
"என்ன?"-அவன் சிறிது நேரம் மௌனம் சாதித்தான்.
"தெரியலைடி...என்னமோ சொல்லணும்னு தோணுது...ஆனா,சொல்ல வரலை."
".............."
"குழப்பமா இருக்கு..."
"ஏன்?"
"வீட்டுக்கு வாயேன்..."
"ஏன்டா?"
"உன் வீடு தான்...நம்பி வரலாம்."-என்றான் குறும்போடு,
"வரேன்..."-இணைப்பைத் துண்டித்துவிட்டு,சரியாக பத்து நிமிடத்தில்,அவள் அங்கே வந்தாள்.உள்ளே அவள் நுழையும் போது,
"அம்மா...நீங்க எதுக்கும்மா இதுலாம் செய்றீங்க?சரணுக்கு தெரிஞ்சா திட்டுவாரும்மா!"
"பரவாயில்லை கமலா.."-மதுபாலா சப்தம் வந்த சமையலறைக்குள் சென்றாள்.
"ஆன்ட்டி..."
"வாம்மா...மது?"
"என்ன பண்றீங்க ஆன்ட்டி?"
"ஆதித்யாக்கு காப்பிப் போடுறேன்."-மதுபாலாவிற்கு ஆனந்தமாய் இருந்தது.12 வருட இடைவேளைக்குப் பின் நிரூபிக்கப்பட்ட தாய் பாசம்! மகன் எவ்வளவு தான் வெறுப்பைக் காட்டினாலும்,அன்பையே பிரதிபலிக்கின்ற அன்பு.....அன்னை என்ற பெயரில்....கடவுளும்,அன்னையும் என்றும் ஒன்றாக முடியாது.இறைவனும் பல நேரங்களில் தன் பிள்ளைகளை சோதிக்க கஷ்டங்களை வழங்குகின்றான்.அன்னை அப்படி அல்லவே...!அவளால்,அன்பை தவிர எதையும் வழங்க இயலாது.ஆகவே,அன்னையிடம்,ஆண்டவனும் வணங்க வேண்டும் என்பதே உண்மை.சரிதானே..?
"நான் உதவி பண்ணட்டுமா ஆன்ட்டி?"
"வேணாம்மா...நானே பார்த்துக்கிறேன்."-அவரின் விருப்பம் அவளுக்கு புரியாமல் இல்லை.
"என்னம்மா?எதாவது...முக்கியமான விஷயமா?"
"இல்லை ஆன்ட்டி...சரண் வர சொல்லி சொன்னார்..அதான்!"-அவள் ஆதித்யாவை,அவர் என்று அழைத்த முறை அவருக்கு பிடித்திருந்தது.
"எனக்காக...ஆதியை மரியாதையா கூப்பிட வேண்டாம்.எப்படி பேசணுமோ பேசிக்கோ!"
"இல்லை ஆன்ட்டி...பெரியவங்க உங்க முன்னாடி மரியாதையா பேசுறது தான் மரியாதை."-அவர் மதுவின் கன்னத்தை வருடி தந்தார்.
"ம்...நல்ல பண்பு..."-அவர் பேசிக் கொண்டே இன்னும் சிறிது அதிகமாக காப்பித்தூளை தூவினார்.
"ஆன்ட்டி...காப்பித்தூள்!"
"ஆதி இப்படி தான்ம்மா காப்பி குடிப்பான்.அவனுக்கு எல்லாத்துலையும் இனிப்பு இருக்கணும்.ஆனா,காப்பி மட்டும் கசப்பாக தான் குடிப்பான்.அதே மாதிரி காரம் அதிகமா இருக்கணும்.இல்லைன்னா...சாப்பிடவே மாட்டான்.நீ இதுலாம் தெரிஞ்சிகறது நல்லதுதான் இல்லை.."-அவள் தலைக்குனிந்தவாறே அழகாய் சிரித்தாள்.
"சரி மது...இதை ஆதித்யாகிட்ட கொடுத்துடுறீயா?"
"நீங்களே தரலாமே?"
"இல்லம்மா..நிலைமை சரியாகட்டும்.அப்பறம் தரேன்.இது நான் போட்டதுன்னு தெரிய வேண்டாம்.அப்பறம் குடிப்பானோ?மாட்டானோ தெரியாது..."-அவள் அரை மனதோடு அவள் கொடுத்த காப்பிக் கோப்பையை வாங்கி சென்றாள்.
"ஆதி...."
"உள்ளே வா அம்மூ..."-உள்ளே வந்தாள்.சரண் ஜன்னல் அருகே கவனித்து கொண்டிருந்தான்.அவளை கண்டதும்,
"காப்பிலாம் போட்டு வந்திருக்க?"
"குடி..."-என்று அவனிடம் தந்தாள்.அதை அருந்திவிட்டு,
"சூப்பர் அம்மூ...அப்படியே என் டேஸ்ட்டுக்கு போட்டு இருக்க! டெல்லியில மனோ காப்பி குடிச்சு காப்பியையே வெறுத்திருந்தேன்.சூப்பர்...இந்த காப்பி போட்ட கைக்கு தங்க வளையல் போடணும்!"
"அப்போ...நீ ஆன்ட்டிக்கு தான் போடணும்.காப்பி ஆன்ட்டி போட்டாங்க! அதான் உன் டேஸ்ட்ல இருக்கு!"-அவள் கூறியதில் ஒரு நொடி திகைத்தவன் ,தொண்டையை செறுமிக் கொண்டு,
"இருந்தாலும் பொய் சொல்ல மனசு வரலை...நல்லா தான் இருக்கு!"
"அப்பறம்?"
"என்ன?"
"இன்னும் எவ்வளவு நாள் இப்படி நடிக்கப் போற?"
"நடிப்பா?"
"ம்...மனசுல இவ்வளவு பாசத்தை வைச்சிட்டு நல்லா நடிக்கிற!"
"வேற எதாவதுப் பற்றி பேசு அம்மூ!"-அவன் நிலை உணர்ந்தவளாய்,
"எதுக்கு என்னை வர சொன்ன?"
"உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்."
"என்ன?"
"குழப்பமா இருக்குடி."
"எதுக்கு?"
"என் ப்ரப்பஷன்....அதுனால,உனக்கு,அம்மாக்கு எல்லார்க்கும் பிரச்சனை வருமோன்னு...குழப்பமா இருக்குடி!"
"ஏன் திடீர்ன்னு...?"
"தெரியலை..."