(Reading time: 16 - 32 minutes)

15. நினைத்தாலே  இனிக்கும்... - பாலா

ninaithale Inikkum

லோ யாரு” என்று திரும்ப திரும்ப அங்கிருந்து கத்த கவினுக்கு பேச்சே வரவில்லை. (கவினுக்கா?! அப்படின்னு எல்லாம் கேட்க கூடாது. சில டைம் இப்படியும் ஆகும். அட நம்புங்க)

அதற்குள் அங்கு ஜெனி வந்து விட்டாள் போலும். ஜெனியின் குரலும் கேட்டது.

“டாடி” என்று ஜெனி பேச,

“இது யாரு, யார் நம்பர் இது” என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார்.

அதற்குள் அவனை நோட்டம் விட அவன் பின்னால் நின்றிருந்த அனுவிற்கு அவனின் நிலை ஓரளவுக்கு புரிந்து விட்டது.

அவனிடம் சென்று “என்ன” என்று சைகையில் விசாரித்தாள்.

திருதிருவென்று முழித்த கவின் அவள் அப்பா என்று மீசையை முறுக்கி சைகை செய்தான்.

அவனிடமிருந்து போனை பறித்த அனு குரலை மாற்றி “ஹலோ” என்றாள்.

அங்கு திரும்ப “யாரு” என்ற கேள்வி வர, அனு திரும்ப வேறு குரலில் பேசினாள்.

ஜெனியின் தந்தையே கன்ப்யூஸ் ஆகி “யார் பேசறது” என்றார் திரும்ப.

இப்போது அனு அவள் குரலிலேயே “ஹேய் ஜெனி, நான் தான்னு கண்டுபிடிச்சிட்டியா. என்ன நீயும் என்னை மாதிரியே மிமிக்ரி பண்ற. என் அளவுக்கு பண்ணலைன்னாலும் ஓகே தான்” என்றாள்.

“ஹலோ நான் ஜெனியோட பாதர் பேசறேன்” என்றார் அவர்.

“ஐயய்யோ அங்கிள் நீங்களா. நான் ஜெனின்னு நினைச்சிட்டேன். நான் அனு பேசறேன் அங்கிள். நான் ஜெனி கிட்ட எப்பவும் இப்படி விளையாடுவேன். அதான் அவளும் என் கிட்ட விளையாடுறான்னு நினைச்சிட்டேன். சாரி அங்கிள். ஐ’ம் ரியலி சாரி அங்கிள்” என்றாள் சோகமாக.

அவரும் ஓரளவு அனுவை நம்பி விட்டார். இருந்தாலும் முழுதாகவும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

“அப்படியா சரி. இதோ நான் ஜெனி கிட்ட தரேன்” என்று ஜெனியிடம் மொபைலை நீட்டியவர் அவளிடம் கொடுக்காமல் திரும்ப அனுவிடம் “சரி முதல்ல பேசின மாதிரி கொஞ்சம் பேசி காண்பி பார்க்கலாம்” என்றார்.

அங்கு ஜெனிக்கோ என்ன நடக்கிறது என்றே தெரியாமல் உயிர் போக,

“என்ன அங்கிள் முதல்ல பேசின மாதிரியா, ஓகே ஓகே” என்று சொல்லி விட்டு, “ஹலோ ஹலோ” என்று இரண்டு முறை ஒரு குரலில் சொல்லி விட்டு, திரும்ப கவின் சொல்லியது போலவே “ஜெலோ” என்றாள்.

அங்கிருந்த கவினுக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அச்சு அசல் அவன் பேசியதைப் போலவே பேசினாள் அனு.

அவன் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெனியின் தந்தையும் நம்பி விட்டார். ஆனால் திரும்ப மொபைலை நன்றாக பார்த்து விட்டு “உன் நம்பரை ஏன் மா ப்ராட்(fraud)-ன்னு சேவ் பண்ணி வச்சிருக்கா ஜெனி” என்றார்.

“அதுவா அங்கிள், நான் எப்பவும் ஜெனி கிட்ட இப்படி ஏதாச்சும் சீண்டி விளையாடிட்டே இருப்பேனா, அதான் அங்கிள்.” என்று சொல்லி விட்டு, “நான் ஜெனின்னு நினைச்சி உங்க கிட்ட ஏதேதோ பேசிட்டேன், நிஜமாவே சாரி அங்கிள். என்னை மன்னிச்சிடுங்க” என்று அவரை நூறு சதவிகிதம் நம்ப வைத்தாள்.

ஒரு வழியாக அவர் ஜெனியிடம் மொபைலை கொடுத்து விட்டு சென்றார்.

ஜெனி பேச அனு அங்கு நிகழ்ந்ததை விவரித்துக் கூறினாள்.

ஜெனியால் ஏதும் பேச இயலவில்லை. தான் ஏதாவது பேசி தந்தையிடம் திரும்ப மாட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை.

ஜெனி, கவின் இருவருமே அப்போது பேசிக் கொள்ள விரும்பவில்லை. அவர்களின் மனநிலை புரிந்ததால் அனுவும் ஜெனிக்கு தைரியம் சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

போனை வைத்து விட்டு பார்த்தால் சுற்றி எல்லோரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எல்லோருக்குமே ஆச்சரியம் தான். எப்படி அனு இப்படி இதை சமாளித்தாள் என்று.

எல்லோரும் அவளை பாராட்டிக் கொண்டிருந்தனர்.

கவினுக்கு தான் ஆச்சரியத்தில் வாயடைத்ததை போல் ஆகிவிட்டது.

“என்ன மச்சான். எதுவுமே பேச மாற்ற. ஆர் யூ ஆல்ரைட்” என்றான் அருண்.

அவனை திரும்பியும் பாராமல் அனுவிடம் “தேங்க்ஸ் அனு. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். ஒரு நிமிஷம் ரொம்ப பயந்துட்டேன். ஏற்கனவே ஜெனி ஹாஸ்பிடல் வந்ததுக்கு அவங்க அப்பா கிட்ட மாட்டிக்கிட்டு அந்த ப்ராப்ளமே இன்னும் சரியாகலை. அதுக்குள்ளே நான் திரும்ப அவளை மாட்டி விட்டுட்டேன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். எப்படியோ நீ என்னை காப்பாத்திட்ட. அது எப்படி அனு நான் பேசின மாதிரியே பேசின” என்றான்.

“ஆ வெல்” என்று சீன் போட்டு அனு ஆரம்பிப்பதற்குள்,

ஆரு “ஹேய் அவ சும்மாவே ஆடுவா, நீ வேற ஏன் டா சலங்கையை மாட்டி விடுற. அவளுக்கு இதெல்லாம் ஜுஜூபி. மேடம் சின்ன வயசுல இருந்தே மிமிக்ரி பண்ணுவாங்க. ஸ்கூல்ல எல்லாம் மிமிக்ரி பண்ணி கலக்கி இருக்கா. நிஜத்துலையே வீட்டுல அப்பா பேசுற மாதிரி எல்லாம் போன் பண்ணி எல்லாரையும் ஏமாத்தி இருக்கா. ஒரு முறை எல்லாம் எக்ஸ்ட்ரீமா பண்ணி திட்டு கூட வாங்கி இருக்கா. இப்ப தான் ஏதோ எல்லாரும் பாராட்டுற மாதிரி செஞ்சி இருக்கா.” என்றாள்.

வர்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க அனு சென்று கதிரின் அருகே அமர்ந்து அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள்.

கதிருக்கு கூட ஆச்சரியம் தான்.

“எப்படி இப்படி எல்லாம்” என்றான்.

“அதெல்லாம் அப்படி தான்” என்று சொல்லி விட்டு கண் சிமிட்டினாள்.

அவளின் இந்த துடுக்குத் தனத்தால் தான் கவரப் பட்டான் அவன். அவளை கண் கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அதற்குள் அருண் அவர்கள் அருகே வந்து “ம்ம்ம் ம்ம்ம்” என்றான்.

கதிர் எரிச்சலுடன் திரும்பி “என்னடா” என்றான்.

“ஒன்னும் இல்லையே. நாங்களும் உங்களை தான் பார்க்க வந்தோம்” என்றான்.

“அதான் பார்த்துட்ட இல்ல. கிளம்பு”

கவின் மேல் கையை போட்டுக் கொண்ட அருண் “எப்படி இருந்த கதிர் சார் இப்படி ஆகிட்டாரு. எல்லாம் இந்த வானரத்தால தான்” என்றான்.

“ஏய் என்ன சொன்ன” என்று கதிர் குரலை உயர்த்த,

கவின் அவன் கையை தட்டி விட்டான்.

‘கதிர் சார் கோபப்படரதாவது நியாயம். இவன் ஏன் கையை தட்டி விடறான், இவன் தானே அனுவை இன்னும் ஓட்டுவான். ஓ இப்ப தான் அனு இவனுக்கு ஹெல்ப் பண்ணாலோ, அதான், ஐயய்யோ தனியா சிக்கிட்டேனோ’ என்று அவசரமாக யோசித்து விட்டு,

“இல்ல சார். எல்லாம் இந்த வானத்துல இருந்து வந்த தேவதையால தான்னு சொன்னேன். உங்க காதுல ஏதாச்சும் தப்பா விழுந்துச்சா” என்றான்.

எல்லோரும் சிரிக்க, அனு மட்டும் ‘நீ தான் டா அடுத்த டார்கெட்’ என்பதை போல பார்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.