(Reading time: 19 - 37 minutes)

 

சிறிது சிறிதாய் நிமிர்ந்த சுதாகரின்  கண்கள் அவள் கண்களை சந்தித்தன  ‘நிஜமாவே  உன் மனசிலே எந்த ரகசியமும் இல்லையா?’ என்றான் நிதானமாக.

துளித்துளியாய் நீர் சேரத்துவங்கின அவள் கண்களில். தலைமை ஆசிரியரின் முன்னால் கைக்கட்டி  நிற்கும் மாணவனின் பயமும் தவிப்பும் கலந்த பாவம் அந்த கண்களில் .

அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் சுதாகர்.

காதலிப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? கொலைக்காரர்களும், குடிகாரர்களும், கொள்ளைக்காரர்களும் தைரியமாய் நடமாடிக்கொண்டிருக்கும் நாட்டில்  மிகப்பெரிய தவறு செய்து விட்டதை போல் துவண்டுப்போக அப்படி என்னடி பெண்ணே செய்துவிட்டாய் ? காதலிக்கதானே செய்தாய்?

ஆல்பத்தை மூடியவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கண்ணீரை துடைத்தான். அவளை அப்படியே தன் தோளோடு சாய்த்துக்கொண்டான் .

திரைப்படத்திலோ, கதையிலோ காதல் தோற்றுப்போகும் போது அந்த காதலர்கள் மீது தோன்றும் பரிதாபம் நிஜ வாழ்கையில் காதலில் தோற்றுப்போகும் பெண்ணின் மீது ஏன் வருவதே இல்லை.?

அந்த பெண்ணின் வாழ்வில் வேறொரு திருமணம் நடக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளும், சரியான கோணத்தில் பார்க்கும் மனப்பக்குவம் பல கணவர்களுக்கு இருப்பதில்லையே ஏன்?

மனதில் உள்ளதை கணவனிடம் சொல்லாமல் இருக்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் அந்த பெண்கள் தவிக்கும் தவிப்பு....

சொல்லிவிட்டால் காலம் முழுவதும் சந்தேக பார்வை பார்ப்பானோ என்ற நடுக்கம், மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாய் வெறுத்து ஒதுக்கி விடுவானோ என்ற அச்சம் இவற்றுடனே புழுங்கி, உள்ளுக்குள்ளே அழுந்தி....

அவள் கண்களில் வெள்ளம் வழிந்துக்கொண்டிருக்க அதை துடைத்தபடியே அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் சுதாகர்.

முத்தம் இத்தனை பெரிய மருந்தா என்ன? அழுந்திப்போயிருந்த மனம் இளகிப்போக அவள் மனதில் இருந்தவை எல்லாம் வெள்ளமென வெளியேற  துவங்கியது.

அவள் தலையை வருடியபடியே கேட்டுக்கொண்டிருந்தான் சுதாகர்.

எல்லாவற்றையும் சொல்லிமுடித்து விட்டு சொன்னாள். எனக்கு வரப்போறவர்  இப்படிதான் இருக்கணும்னு  முடிவு செய்யற உரிமை எனக்கு இல்லையா?

ரெண்டு பேர் மனசும் ஒத்து போகலை.  என்னாலே விஷ்வாவோட சந்தோஷமா வாழ முடியும்ன்னு தோணலை. ரெண்டு பேரும் பிரியரதுன்னு முடிவெடுத்துட்டோம். அதுக்கப்புறம் அப்பா உங்களை பத்தி சொன்னப்போ உங்களை பார்த்தப்போ எனக்கு வேண்டாம்னு சொல்ல தோணலை. நான் செஞ்சது தப்பா?

பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்

பூச்செடிகள் கொஞ்சம் வளர்ந்தவுடன் மொட்டு விடுவது இயற்கைதானே. ஆனால் எல்லா மொட்டுகளும் மலர்ந்து விடுவதில்லையே. ஏதோ ஒரு காரணத்தால் ஒரு மொட்டு மலரவில்லை என்பதால் அந்த செடி மொட்டு விடுவதையே நிறுத்தி விடுகிறதா என்ன?

பதில் சொல்லுங்க ப்ளீஸ். கல்யாணத்துக்கு முன்னாடி நான் விஷ்வாவை விரும்பினது நான் உங்களுக்கு செஞ்ச துரோகம் தான் இல்லையா?

திருமணதிற்கு முன், உன் வாழ்கையில் நான் இல்லவே இல்லாத போது நீ விஷ்வாவை காதலித்தது எப்படி எனக்கு செய்த துரோகமாகும்.?

ஆனால் அதற்கும் பதில் சொல்லவில்லை அவன்.

அது அவளை இன்னமும் குழப்பியது.

பொதுவாக எல்லா ஆம்பிளைகளுக்கும் பொண்டாட்டியோட பழைய காதல்ன்னு சொன்னவுடனே வர சந்தேகம் எதுவுமே உங்களுக்கு வரலியா ? நான் அப்படியெல்லாம்....

சட்டென அவள் உதடுகள் மீது விரல் வைத்து தடுத்தான் ‘ நான் உன்கிட்டே அதை பத்தி ஏதாவது கேட்டேனா.  எனக்கு இதெல்லாம் தேவையேயில்லை. உன் மனசிலே இருக்கிற பாரம் குறையணும்னு தான் உன்னை பேச வெச்சேன் அவ்வளவுதான்  என்றான் நிதானமாக

இல்லை நா...ன்.... நான் எப்படியாவது விஷ்வாவை மறந்திடுவேன். தவிக்கும் குரலில் அவள் சொல்ல கொஞ்சம் கரைந்துதான் போனான் சுதாகர்.

புன்னகைத்தபடியே அவள் முகத்தை கையில் ஏந்திய படியே கேட்டான் ‘ நிஜமாவே உன்னாலே விஷ்வாவை மறக்க முடியுமா?’

‘கண்டிப்பா மறந்திடுவேன் ‘ அவசரமாய் பதில் சொன்னாள் ஜனனி.

‘ரொம்ப கஷ்டம்ம்மா  ஜில்லு என்றான் சுதாகர். நீ என்ன முயற்சி பண்ணாலும் விஷ்வா ஞாபகம் உன் அடி மனசிலே எங்கேயாவது ஒரு ஓரத்திலே  இருக்கத்தான் செய்யும். அது இருந்துட்டு போகட்டும். அதை அழிக்கறதுக்கு  பதிலா நான் ஒரு ஈஸியான வழி சொல்லவா?

ம்....... தலையசைத்தாள் ஜனனி. நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்.

‘நீ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சிடு’ கண் சிமிட்டினான் சுதாகர். கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் லவ் பண்ணு போதும் எல்லாம் சரியாயிடும் என்ன சொல்றே.’

கொஞ்சம் வியப்புடன் அவனை பார்த்தாள் ஜனனி.

என்ன ஸ்வீட் ஹார்ட் அப்படி பார்க்கறே. மனசுக்குள்ளே அன்பை மட்டும் நிரப்பி வெச்சுக்கோ. சுத்தி இருக்கறவங்க எல்லாருக்கும் அதை கொடு மனசு எப்பவுமே லேசா இருக்கும். அந்த அன்பிலே எனக்கு எப்பவுமே ஒரு எக்ஸ்ட்ரா டோஸ் குடு அது போதும் ஒகேயா?.

சட்டென்று அவளுக்குள்ளே ஒரு பூ பூத்தது போலே இருந்தது அவள் கண்களில் மறுபடி நீர் சேரத்துவங்கியது.

என்னடா ஜில்லு? லவ் பண்ண சொன்னா அழறியே? நான் என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கேன். கொஞ்சம் லவ் பண்ணுடா ப்ளீஸ்........ அவன்  கண்களை சுருக்கி விரித்து கெஞ்ச சட்டென சிரித்தவள் அவனை இழுத்து தன்னோடு இறுக்கிகொண்டாள் ஜனனி.

றுநாள். காலையில்  கண்விழித்த போதே தலை கனத்தது பரத்தின் தங்கை இந்துஜாவுக்கு.

அதனுடனே அலுவலகத்துக்கு வந்து அமர்ந்தவளுக்கு காய்ச்சல் மெல்ல மெல்ல ஏறத்துவங்கியது.

மனதிற்குள் ஏதோ  தோன்ற விஷ்வாவை அழைத்தாள் இந்து.

கொஞ்சம் ஜுரமா இருக்கு விஷ்வா. கொஞ்சம் என் கூட வரியா ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடலாம்.

அவள் அழைத்த மாத்திரத்தில் சட்டென கிளம்பி விட்டிருந்தான் விஷ்வா

பைக்கை செலுத்திக்கொண்டிருந்தபோதுதான் உறைத்தது அவனுக்கு. எல்லாரையும் விட்டு என்னை ஏன் அழைக்கிறாள் இவள்.

தன் அலுவலக வாசலில் காத்திருந்தாள் அவள்.

என்னாச்சு இந்து?

fever .விஷ்வா.. என்னாலே நிக்கவே முடியலை..கிளம்பலாமா? அவன் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

வண்டியை கிளப்பியபடியே கேட்டான் ‘ஆமாம் எல்லாரையும் விட்டுட்டு என்னை ஏன் கூப்பிட்ட.? உங்க அண்ணனை கூட்டிட்டு போக வேண்டியதுதானேடா. இத்தனை நாள் இல்லாம புதுசா இருக்கே?

தெரியலை விஷ்வா. நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு அதான்.

வண்டியை செலுத்திக்கொண்டிருந்தவன் மீது சாய்ந்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் இந்து.  அவள் உடல் கொதித்துக்கொண்டிருந்தது.

அவள் அலுவலகத்துக்கு அருகில் இருந்த அந்த மருத்துவமனையை அடைந்து அந்த டாக்டரின் அறைக்குள் நுழைந்தபோது அங்கே இருந்தார் அந்த டாக்டர்..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.