(Reading time: 20 - 39 minutes)

 

திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆட்டோ எதாவது கிடைக்குமா என்று தேடிய அபர்ணாவுக்கு  பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது 'ஹா.....ய் குரங்கு...'

சட்டென தூக்கி வாரிப்போட திரும்பினாள் அபர்ணா. அவளே அறியாமல் முகம் மலரத்தான் செய்தது. ' ரொம்ப நாளாகிறது இந்த 'குரங்கு' வை கேட்டு..

'போ....டா.... நிஜமாவே பயந்துட்டேன்.' என்று சிணுங்கியவளை அன்பான புன்னகையுடன் பார்த்தான் அவள் அண்ணன் அஷோக்.

விஷ்வா அபர்ணா நட்பினால் அவர்கள் படிக்கும் காலத்தில் நடந்த பிரச்சனைக்கு பிறகே அவளுடன் பேசுவதை நிறுத்தியிருந்தவன், இப்போது கொஞ்ச நாட்களாகத்தான் எப்போதாவது ஒன்று இரண்டு வார்த்தை பேசுகிறான்.

'இன்று என்னவாயிற்று இவனுக்கு என்னை அழைத்துப்போகவென்று வந்திருக்கிறானே?' வியப்புடன் பார்த்தாள் அபர்ணா.

அவன் பின்னால் வண்டியில் ஏறி அமர்ந்தவள் 'என்னாச்சு இன்னைக்கு யாரோ என்னை கூட்டிட்டு போகவெல்லாம் வந்திருக்காங்க. ஒரே பாசப்போராட்டமா இருக்கே'? என்றாள்

'ஆமாம். என்ன பண்றது எனக்கு தங்கச்சின்னு இருக்கிறது ஒரே ஒரு குரங்கு. அதுக்கு வேறே கல்யாணம் வரப்போகுது. அந்த நேரத்திலே நான் கோபமா இருந்தா நல்லா இருக்குமா? அதான் பெரிய தியாகமெல்லாம் பண்ணி நீ செஞ்ச தப்பையெல்லாம் மன்னிச்சு உன்னை கூட்டிட்டு போக வந்தேன்.'

'ஹலோ பெரிய குரங்கே! நீ மன்னிக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் தப்பெல்லாம் பண்ணலை. சரி அதை விடு. ஏதோ கல்யாணம்னு சொன்னியே அது என்ன மேட்டர்?

அது தெரியாதா உனக்கு, அப்பா உன் ஜாதகத்தை பல நூறு காபி எடுத்து ஊரெல்லாம் விநியோகம் பண்ணி, விநியோகம் என்ன? ரோட்டிலே அந்த சுவத்திலே கொஞ்சம் உத்து பார் அது கூட உன் ஜாதகம்தான். இப்படியெல்லாம் பல முயற்சிகள் பண்ணி, உனக்காக மூணு பேரை செலக்ட் பண்ணி வெச்சிருக்கார். நீ சரின்னு சொல்லிட்டேனா இன்னைக்கே தாலிக்கட்டி கூட்டிட்டு போக ஆள் ரெடி.

அவளுக்குள்ளே குலுங்கியது 'என் மனதில் இருப்பதை அப்பாவிடம் எப்படி சொல்வது ? சில நொடிகள் அப்படியே மௌனமானாள்  அபர்ணா.

என்ன ஒரே மௌனராகம்? என்றான் அஷோக். இன்னொரு விஷயம் தெரியுமா? எங்க பாங்கிலே என்னை சென்னைக்கு transfer பண்ணிட்டாங்க. ஆர்டர் இன்னும் வரலே. வந்தும் அங்கே வந்திடுவேன்.

அய்யயோ! என்றாள் அபர்ணா 'உன் கூடத்தான் நான் இருந்தாகணுமா இனிமே?'

'ஆமாம்டா செல்லம். வேற வழியே இல்லை.' சிரித்தான் அஷோக்.

மனதிற்குள் சின்னதாய் ஒரு பயம் பிறந்தது அவளுக்கு 'இவனுக்கு விஷ்வாவை கண்டாலே பிடிக்காதே. அங்கே வந்தால் அவனுடன் பழகாதே என்று மறுபடியும் துவங்குவானோ? வண்டி நகர்ந்துக்கொண்டிருக்க அவள் மனம் சுழன்றுக்கொண்டே இருந்தது.

மாலை. மணி ஆறை தாண்டி இருந்தது. அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த அந்த கோவிலை விட்டு வெளியே வந்து, தங்கள் வீட்டை நோக்கி நடந்துக்கொண்டிருந்தனர் அபர்ணாவும் அவள் தந்தையும்.

ஊரிலிருந்து வந்தததும் அவர் காட்டிய மாப்பிளையின் புகைப்படங்களை அவள் 'அப்புறம் பார்க்கிறேன் பா என்று ஒதுக்கிய போதே அப்பாவுக்கு ஏதோ ஒன்று புரிந்தது போலே இருந்தது.

இப்போது அவள் ஏதோ பேச முயன்று முயன்று தோற்றுக்கொண்டிருப்பதை உணர்ந்தவராய் தனக்குள்ளே புன்னகைத்துகொண்டார் அப்பா. 'ஒரு வேளை அவள் அம்மா இருந்திருந்தால் இதற்குள் எல்லாவற்றையும் சொல்லி முடித்திருப்பாளோ?

அப்பா.....

ம்..... என்றார் அவர். அவளிடம் மறுபடியும் மௌனமே குடிக்கொண்டது.

சொல்லுமா... மாப்பிள்ளை போட்டோவெல்லாம் பார்த்தியா? இல்லையா? அவள் தவிப்பை உணர்ந்து மெல்ல அவரே எடுத்துக்கொடுத்தார்.

இல்லைப்பா... அதெல்லாம் வேண்டாம்ப்பா....

ஏம்மா....?

அவங்க எல்லாம் நல்லவங்களா? கெட்டவங்களான்னு நமக்கு எப்படிப்பா தெரியும்? அவள் கண்கள் தரையிலேயே இருக்க கால்கள் நடந்தன. சுவாசம் மட்டும் சீராக கிடைக்க மறுத்தது அவளுக்கு. இது என்ன வினோதம்? அப்பாவிடம் எத்தனை சண்டை போட்டிருக்கிறேன் இன்று ஏனாம் இப்படி தடுமாறுகிறேன்?

ஏம்மா? அப்பா உன்னை அப்படி ஒரு கெட்டவன் கையிலேயா பிடிச்சு கொடுத்துத்திடுவேன்? என் மேலே நம்பிக்கை இல்லையாமா உனக்கு? வேண்டுமென்றே மடக்கினார் அப்பா.

அய்யோ.. அப்படியெல்லாம் இல்லைப்பா.... அது வந்து.... அது.... ஆங்... அப்பா நீங்க கைட் பண்ண ஸ்டுடென்ட்ஸ்லேயே யாருப்பா பெஸ்ட்?

மனம் ஏதோ கணக்குபோட அவள் மன ஒட்டத்தின் திசை லேசாய் புரிந்தது போலே இருக்க தனக்குள்ளே புன்னகைத்துக்கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே கேட்டார் ' என் ஸ்டுடென்ட்ஸ்லே யாரையுமே உனக்கு தெரியாதேம்மா? என்றபடியே நடந்தார் அப்பா.

'ஒருத்தரை தெரியும்பா. பரத்..... அன்னைக்கு ஸ்டேஷன்லே பார்த்தோமேபா.'. வீட்டுக்குள் நுழைந்தனர் இருவரும்.

'ஒ! அவனா?. வெரி சீரியஸ் fellow. சிரிக்ககூட காசு கேட்பான்'.

அடுத்த நொடி சட்டென நின்று, நிமிர்ந்தவள் 'அதெல்லாம் ஒண்ணுமில்லை. உங்களுக்கு என்ன தெரியும் அவரை பத்தி?  நல்லா சிரிச்சு சிரிச்சு பேசுவார்.. ரொம்ப நல்லவர்ப்பா அவர். என்னை ரொம்ப நல்ல பார்த்துப்பார்.' படபடவென சொன்னாள் அபர்ணா.

அவள் கண்களையே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா. 'பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது இந்த உணர்வு? தன்னை பெற்றவர்கள், தன்னவனை பற்றி சொல்லும் ஒரு சாதாரண வார்த்தையைக்கூட  பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு உணர்வு.

அவர் பார்வையில், மெல்ல இறங்கியது அவள் குரல்  'இல்லைப்பா. அவர் ரொம்ப நல்லவர் பா' நிஜமா'. அவள் கண்கள் கெஞ்சின.

மறுக்க தோன்றவில்லை அவருக்கு. மறுப்பதற்கு காரணம் இருப்பதாகவும் தோன்றவில்லை. தன் ஒரே மகளின் மனதை உடைத்து போடும் எண்ணமும் நிச்சியமாக இல்லை

அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா. 'பள்ளிக்காலங்களில் கையில் மதிப்பெண் பட்டியலுடன் அவர் கையெழுத்துக்காக தவிப்புடன் நின்ற அபர்ணாவை மறுபடியும் பார்ப்பது போல் இருந்தது அவருக்கு.

உதடுகளில் பரவ காத்திருந்த புன்னகையை மறைத்துக்கொண்டு கேட்டார் அப்பா 'இப்போ நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவே?'

சட்டென துவண்டு போனது அவள் முகம். அவர் முகத்தை பார்த்தபடி  'எனக்கு தெரியலைப்பா' என்றாள் தழைந்த குரலில். 'எனக்கு நிஜமா தெரியலை. ஆனா உங்களை மீறி எங்கேயும் போக  மாட்டேன்பா'

அவள் சொன்ன விதத்தில் ஏனோ சட்டென அவர் கண்களில் நீர் சேர்ந்து விட்டிருந்தது. அவர் இதழ்களில் புன்னகை ஓடியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.