(Reading time: 17 - 33 minutes)

 

தாலாட்டியது தூறல். உடல் நனைக்கும் மழை என்று சொல்வதை விட, மனம் நனைக்கும் தூறலாய் தூவியது மழை. புதிதாய் பிறந்தது போலே ஒரு சிலிர்ப்பு இருவருக்குள்ளும் பரவியது.

கைவிரித்து மழை நீரை சேகரித்து விளையாடி,  குளிர குளிர மழை நீரில் முகம் நனைத்து ஒவ்வொரு துளி மழையையும் ரசித்தப்படியே நடந்தாள் அவள். அவளை விட்டு பார்வை விலக்காமல் புன்னகையுடனே நடந்தான் அவன்.

மணலை தாண்டி நடந்து, கடல் நீருக்கு அருகில் வந்திருந்தனர். மழை வருடிக்கொண்டிருக்க சில்லென்று கடல் நீர் கால் நனைத்த வேளையில் அவள் மனம் சந்தோஷத்தின் எல்லையில் இருந்தது.

இதுவரை எத்தனையோ மழையில் நனைந்திருக்கிறாள்தான். ஆனால் மழையை இவ்வளவு அனுபவித்து ரசித்ததில்லையோ என்று தோன்றியது அவளுக்கு.

அவள் மெல்ல திரும்பி அவனை பார்க்க, புருவம் உயர்த்தி கண் சிமிட்டி சிரித்தான் அவன். அவன் கையை பற்றிக்கொண்டு, அவன் தோள் சாயத்தான் தவித்தது மனம். கட்டுப்படுத்திக்கொண்டு, பழிப்புக்காட்டி திரும்பிக்கொண்டாள் அவள்.

அவனும் இப்படியெல்லாம் இருந்ததே இல்லை. புன்னகையில் கலந்த பெருமூச்சு எழுந்தது அவனிடம். அங்கே மழையில் நனைந்துக்கொண்டு நிற்பது அவன்தானா என்று அவனுக்கே சந்தேகமாய் இருந்தது. மொத்தமாய் என்னை தோற்கடித்து விட்டாயே பெண்ணே.!!!!!!!! அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் பரத்.

சிறிது நேரம் கழித்து காருக்கு திரும்பினர் இருவரும். ஏனோ எதுவுமே பேசிக்கொள்ள தோன்றவில்லை இருவருக்கும்.

அவள் இறங்கும் இடம் வந்தது. காரை நிறுத்தினான் பரத். ஏனோ இறங்க மனமில்லை அவளுக்கு.

தலை குனிந்தபடி மெல்லச்சொன்னாள் 'நான் கிளம்பறேன்'

கண்....ண.....ம்மா... என்றான் அவன்

பதிலில்லை அவளிடம்.

க..ண்...ணம்மா. ரெண்டு நிமிஷம் உன் கையை குடு கண்ணம்மா....

சட்டென திரும்பி அவன் கண்களை பார்த்தவள் அவன் கெஞ்சலில், வார்த்தைகளில்  கரைந்துப்போனவளாய் அடுத்த நொடி கையை அவனை நோக்கி நீட்டினாள்.

அப்படியே ஏந்திக்கொண்டான் அவள் கையை. தனது இரண்டு கைகளுக்கும் நடுவில் வைத்து பொத்திக்கொண்டான்.  அவள் விரல்களை வருடின அவன் விரல்கள். அவள் கையை மெல்ல, அழுத்தியவனுக்கு என்ன தோன்றியதோ?  மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தை சில நொடிகள்  பார்த்தவன் அவள் உள்ளங்கையில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.

மொத்தமாய் சிலிர்த்துப்போய் நிமிர்ந்தாள் அவள். 'மரக்கட்டை கண்ணம்மா நான். வாழ்க்கையிலே எல்லாத்தையும் பார்த்திருக்கேன், சந்தோஷம், துக்கம், வெற்றி, ஏமாற்றம் அவமானம் எல்லாத்தையும். ஆனா எதுவுமே என்னை பெரிசா பாதிச்சதில்லை. நான் யார்கிட்டேயும் தோத்து போனதும் இல்லை. ஒரு பொண்ணுகிட்டே இப்படி மொத்தமாய் தோத்து போறது இதுதான் first டைம்.

இமைக்க மறந்திருந்தாள் அவள். ஒளிஞ்சு, ஒளிஞ்சு சாக்லேட் கொடுத்து, பின்னாடியே துரத்தி, தவிக்க வெச்சு, என்னையும் காதலிக்க வெச்சிட்டியே கண்ணம்மா. அவள் கையை தனது இதயத்தின் மீது வைத்துக்கொண்டு சொன்னான் அவன் ' love you  கண்ணம்மா.  love you right from the bottom of my heart.'

அவள் கண்களில் நீர் நிரம்பி நின்றது. வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு. ' நா....நா...ன் கிளம்பணும்' என்றாள் குரல் தடுமாற

ஹேய்... அழறியா? ஐ லவ் யூ சொன்னா அழறியே கண்ணம்மா. அவ்வளவு கேவலமா ப்ரபோஸ் பண்ணேனா?

போடா.. கண்ணீரினூடே சிரித்தாள். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு அழணும் ரூம்லே போய் அழணும்.

ஹேய்.... லூசு....

ப்ளீஸ் பரத். உங்களுக்கு இதெல்லாம் புரியாது.  கையை விடுங்களேன். நாளைக்கு காலேஜிலே பார்க்கலாம்.

அவன் அவள் கையை விடுவிக்க, மனநிறைவின் எல்லையில் நின்றவளாய் கையசைத்து விட்டு ஹாஸ்டலுக்குள் ஓடி விட்டிருந்தாள் அபர்ணா.

னது அறைக்கட்டிலில் படுத்திருந்தான் சுதாகரன். அறைக்குள் நுழைந்த ஜனனியின் முகத்தில் கொஞ்சம் வருத்த ரேகைகள் ஓடிக்கொண்டு இருந்ததை உணர்ந்தவன் மெல்ல எழுந்து அமர்ந்தான்,

அவன் அருகில் வந்து அமர்ந்தவள் தனது இதழ்களில் புன்னகையை கொஞ்சமாய் பொருத்திக்கொண்டு அவனை ஏறிட்டாள்.

மனசிலே என்ன குழப்பம்? என்றான் சட்டென

ம்?

இல்ல.. என் ஜில்லு மனசிலே என்ன குழப்பம்ன்னு கேட்டேன்? ஒண்ணுமில்லைன்னு பொய் சொல்லாமே, மனசிலே இருக்கறதை அப்படியே சொல்லிடுமாம் என் ஜில்லு.. கமான் சொல்லு சொல்லு ...

கண்கள் தரையை பார்த்திருக்க வார்த்தைகள் வெளியே வரவா? வேண்டாமா என தவித்தது.

சொல்லுமா... என்னாச்சு...

''நேத்து நீங்க அபர்ணாவோட பேசினதை நான் கேட்டேன்.' என்றாள் அடிக்குரலில்.

அவன் முகத்தில் வியப்பு பரவி, யோசனை படர்ந்து, சில நொடிகளில் இயல்பாகி, இதழ்களில் புன்னகை ஓட கேட்டான் ' சரி கேட்டே அதனாலே என்னடா...' 

இல்லை.. எனக்.. எனக்கு உங்ககிட்டே ஒண்ணு கேட்கணும்...

அவன் கை அவள் தோளை அணைத்துக்கொண்டது, கேளுடா....

இல்லை. என்கிட்டே இதெல்லாம் நீங்கே ஏன் சொல்லலை.? ஏன் நான் தூங்கினதுக்கப்புறம் போய் பேசறீங்க.?

பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் சுதாகரன்,

தனது விரல்களை ஆராய்ந்தபடியே சொன்னாள் அவள் 'மத்தவங்களுக்கு நீங்க செய்யணும் நினைக்கிற நல்லதை கெடுக்கற அளவுக்கு இந்த ஜனனி ஒண்ணும் வில்லி இல்லை'

கண்களில் நீர் சேர அவள் சொன்ன விதத்தில், அவள் கன்னத்தில் இதமாய் இதழ் பதித்தான் சுதாகரன்.

ஊர்லே இருக்கிற எல்லார் காயத்தையும் சரிப்பண்ணனும்னு யோசிக்கிற நான் உன் மனசை பத்தி யோசிக்க மாட்டேனா ஜில்லு? என்னதான் இருந்தாலும் காதல்லே தோத்து போனது நீயும் தானே? உனக்கு வலி இருக்காதா?

மெல்ல நிமிர்ந்தாள் அவள். 

விஷ்வா உன்னை வேண்டாம்ன்னு சொன்னப்போ, அபர்ணாதான் வேணும்னு முடிவெடுத்தப்போ, நீ எவ்வளவு அழுதிருப்பே. அதனாலேதான் ஆண்டவன் இந்த பொண்ணை இனிமேல் அழாம பார்த்துக்கோன்னு என்கிட்டே தூக்கிக்கொடுத்திருக்கான். திரும்ப திரும்ப விஷ்வாவை பத்தி பேசி உன் மனசை காயப்படுத்த விரும்பலை ஜில்லுமா. உன் கண்லே தண்ணி வராம பார்த்துக்கணும்கறதுதான் என்னோட முதல் கடமை. சரியா? இப்போ என்ன இனிமே எல்லாத்தையும் உன்கிட்டே சொல்லிட்டே செய்வோம் அவ்வளவுதானே?

கண்ணீரை துடைத்துக்கொண்டு அவள் மெல்ல தலையசைக்க, அவளை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டான் சுதாகரன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.