12. காற்றாக நான் வருவேன் - Anna Sweety
“ஹக்...” என்றபடி அபிஷேக் தனக்கு நேர்ந்ததை உணர்ந்த நொடிதான் நதி புறம் நோக்கி நின்றிருந்த தயனியும் நடந்த விபரீதத்தை மனதில் ஸ்பரிசித்தாள். நடந்ததை உணர்ந்து அவள் அதிரும் முன்னாக கூட அவளை அதிரவிடாமல் மனம் அடைக்க செய்தது அவள் பார்த்த அடுத்த காட்சி. அவள் அருகில் வலபுறம் அவளது தந்தை யுவ்ரேவ்.
சமாதானமே முழு உடல் தெய்வீகம் மொத்த வதனமாக அவர் ஒருவித ஒளிவீசலுடன் காட்சி தந்தார்.
“வேண்டாம்டா.... தனுகுட்டி..” அவர் குரல், அவரது தனுகுட்டி காயமாகி இருந்த தயனியின் உள்ளத்தில் தேன் வார்த்தது. அதோடு அதிரவிடாமல் அலையவிடாமல் ஒருவித மோனத்தைக் கட்டளையிட்டது அவள் அடி மனதில்.
“மரணம்ங்கிறது மாயைடா...” விழி தட்டாமல் மகள் அவரைப் பார்த்தாள்.
“தயூ....” அவரையும் தாண்டி வலபுரம் இருந்து அபிஷேக்கின் அலறலான கதறல் அவள் கவனத்தை கவர்ந்தது ஒரு வினாடியே.
“ஐயோ என் அபி..” இவள் பதற தொடங்கிய நொடி அவள் முன்னாக அவளது அத்தை. அகோரமாய் விரைத்து, வெளிறி, நாசி துளை ஒன்றிலிருந்து வெளி பட்ட சிறு ரத்தத்துடன் சில நாட்களாய் அழுக தொடங்கிய அரை பிண்டமாக அவர். தோல் பல இடத்தில் சுருங்கியும், சில இடத்தில் வெடித்தும்...மொத்தமாக உப்பி ஊதி...குப்பென்ற பிண வாடை.
“ஏய் நாயே...என் மகன பாக்காம இங்க உன் அப்பன என்ன கொஞ்சிகிட்டு...போடி போய் அவன பாரு..” செத்த பிறகும் அடங்காத திமிர் முழு நர்த்தனம் அவரது குரலிலும் கொண்ட கோலத்திலும். முன்னின்றவர் தரையிலிருந்து சர்ரென கிளம்பி தரையைவிட்டு ஆறடி உயரத்தில்.
அக்கினி பற்றியது தயனியுள்.
சுற்றிலும் இருள் கவிழ்ந்தது.
“உனக்கு வேணும்னா நீ போய் பாரு....” சொல்லியபடி இப்பொழுது இவளுக்கு பின்னாலிருந்து பறந்து வந்து, அத்தைக்கு எதிரில் கொதிகலனாய் எழுந்து நின்றது பாதி கருகிய கரிகட்டையாய் எமிலி.
எமிலியின் லவண்டர் பெர்ஃப்யூமும் கருகும் பிண நாற்றமும் நாசி தொட்டன தயனிக்கு.
“தயூமா....” அலறலாய் அக்கறையுடன் அழைக்கிறான் அபிஷேக். அபிஷேக்கை குத்தியவன் அவனை இழுக்கிறான் அவனுடன் மற்றொருவனும்.
அதற்கு மேல் தயனியின் மனம் அங்கில்லை.
காரணம் அவள் பார்வையின்றி கூட உணரும் அருகாமையில் இடபுறம் அவளது அம்மா. முழுவதும் அழகிய கோலம். அவர் முகம் எங்கும் தாய்மை.
“தூங்குடா...நிம்மதியா இருக்கும்...” அவரது குரலே தாலாட்டுவது போல் ஒரு ப்ரம்மை. தூங்கினால் நன்றாக இருக்கும் என்று தயனிக்குமே இப்போது தோன்றுகிறது. அம்மா மடியில் படுத்தால் நன்றாக இருக்கும். மனமெங்கும் ஒரு ஏக்கம்.
சிறு வயதில் அம்மா மடியில் படுத்து அவர் சேலை முந்தானையை தன் மீது தானே போர்த்திக் கொண்டது ஞாபகம் வந்தது அவளுக்கு.
அம்மா இப்பொழுது பாலத்திற்கு சற்று மேலாக அந்தரத்தில் அசைவாடினார்.
“அம்மா...” தாய் பசுவை கண்ட கன்றின் கதறல் அது. அழைத்தது தயனி.
தயூ... அத நம்பாதே...ஓடு தயூ....” அபிஷேக்கின் பெருஅலறல் சிறு குரலாய் அவள் காதில் தடவிச்சென்றது.
திரும்பி பார்த்தாள் அவனை. இரு முரடர்கள் அவனுடன் போராடிக் கொண்டிருந்தனர்.
குத்துபாட்ட தோளுடன் அபிஷேக் அவர்கள் குறிக்கோள் நிறைவேறவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தான்.
“மரணம்ங்கிறது பெரும் விடுதலை தனுகுட்டி...அப்பா இப்போ பசி துன்பம் வலி வேதனை தவிப்பு சலனம் ஏக்கம் எதுவும் இல்லாம எவ்வளவு விடுதலையா நிம்மதியா இருக்கேன் தெரியுமா...உன் அபிக்கும் அதுமாதிரி விடுதலை கிடைக்கட்டும்....”
அப்பாவின் கண்களிலிருந்த அமைதியைக் கண்டாள் தயனி.
“மரணம் கெடுதல் இல்லடா தனுக் குட்டி...”
அவர் கண்களில் கலந்தாள். இவளே காற்றாவது போல் ஒரு உணர்வு.
“அபி நல்லவர்டா...இன்னும் ஏன் பூமியிலிருந்து கஷ்டபடனும்....”
அபி நல்லவர், அவருக்கு கஷ்டம் வேண்டாம் நினைத்துக் கொண்டாள் தயனி.
அபிஷேக்கை குத்திய அக்கொள்ளையர்கள் அவனை இழுத்து பாலத்திலிருந்து தள்ளி அதன் அடியில் பாய்ந்தோடும் படர்ந்த நீர்ப் பரப்பில் புதைக்க முயல்வது தயனிக்கு புரிகிறது.
“தயூமா...ஓடு...ஜீசஸ் ஹெல்ப் அஸ்” அபிஷேக்கின் குரலின் தவிப்பு தயனியை தட்டி பார்க்கிறது. அவன் வலக்கை சட்டை முழுவதும் ரத்தம்.
அய்யோ அவனுக்கு வலிக்குது....இவள் மனம் துடித்தது ஒரு நொடி.
“மரணம் சுகம்டா....ஊசி குத்ற அளவுகூட வலிக்காது....விஷத்தால எனக்கு வந்த வலி மரணத்தில நின்னே போச்சு... மரணம் சுகம்டா தனு குட்டி...”
அப்பாவின் வார்த்தைகள் நிஜம் எனபட்டது தயனிக்கு. ஆம் அவர் துடித்த துடிப்பு இப்போழுது அவருக்கு இல்லையே...மரணம் சுகம்தான் போலும்.
“ஏய் எருமமாடு...போய் அவனப் பாரு...” அலறியது அத்தையம்மா. அபிஷேக்கிற்கும் தயனிக்கும் இடைப்பட்ட பகுதியில் அந்தரத்தில் ஆடியபடி அந்த பிண்டாமகிய பெண்ணுருவம்.
மொத்தத்தில் இவளை சுற்றிலும் ஆவிகளின் அரண்.
“ப்ப்பு...உன் அத்தைய நம்பாத...மகனுக்கு நல்லது நடந்திட கூடாதுன்னு நினைக்கிற சுய நல பேய் இவ...உயிரோட இருக்கிறப்ப அபிய சுட வந்தாதானே....அப்போ சாவுங்கிறது கஷ்டம்னு நம்பி அபிய கொல்ல வந்தவ.... இப்போ அது நல்லதுன்னு அனுபவத்தில தெரிஞ்சதும் அபி சாகாம கஷ்ட படனும்னு நினைக்கா...நம்பாத பப்பு...” எமிலியின் உடல் இன்னுமாக எரிய தொடங்கியது.
“பாரு எனக்கு வலிக்கவே இல்ல..” சிரித்தாள் எமிலி. எரிந்து பாதி இல்லாமல் போயிருந்த உதட்டு பகுதியில் பற்கள் அகோரம்.
பயமற்று போனதாக தோன்றுகிறது தயனிக்கு. அத்தை பற்றி எமிலி சொல்வது சரிதான். ஓ மரணம் சுகம் தான். இவர்கள் சொல்வது நன்மைக்குத்தான்.
பயம் குழப்பம் தவிப்பு எல்லாம் நீங்கியது போன்ற ஒரு நிலை.
அம்மாவைப் பார்த்தாள்.
கனிந்த முகத்துடன் “வா” என்றார் அவர்.
அவரை நோக்கி நடக்க தொடங்கினாள் தயனி.
அவர் இன்னுமாய் பின்னோக்கி நகர்ந்து ஆற்றின் மீது அசைவாடினார்.
“இங்க வந்துடு....அபிய பிரிஞ்சு பூமியில இருந்தா உனக்கும் கஷ்டம்...”
ஆம் என்று உடனடியாக ஒத்துக் கொண்டது தயனியின் மென் மனது.
சற்றே வலபுறம் திரும்பி தன்னவனைப் பார்த்தாள். அவனைப் பாலத்தின் சுவரில் சாய்த்திருந்தனர் அந்த இருவர்.
சீக்கிரமாக அவனுக்கு ஜல சமாதி நிச்சயம்.
சுளிந்து ஓடும் ஆற்றைப் பார்த்தாள் தயனி. அதன் மீது அசைவாடிய தன் அன்னையைப் பார்த்து நடக்க தொடங்கினாள். பால சுவற்றில் ஏற முயற்சித்தாள்.
அடி வயிற்றில் ஏதோ ஒரு உணர்வு.
இவள் அம்மாவாக போகிறாளோ? வயிற்றை தொட்டுப் பார்த்தாள்.
“எல்லோரும் ஒன்னா சந்தோஷமா இருக்க போறோம்....உன் மகளுக்கு மாமியார் கொடுமை வராது...” சொன்னது யுவ்ரேவ். இவளது அப்பா. மனம் சமாதானபட்டது. இப்பொழுது இவள் அப்பாவும் அம்மாவுக்கு அருகில் ஆற்றின் மேல் பறந்த படி இன்முகம் காட்டினார்.
அப்பாட்ட போனும்......நினைத்தபடி பலம் முழுவதும் திரட்டி பால சுவற்றில் ஏறினாள்.